ரவீந்திரநாத்துக்கு சசிகலா ஆதரவு... எடப்பாடிக்கு எதிராக ஒருங்கிணைகிறதா எதிரணி?!

எடப்பாடியால் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட எம்.பி ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக சசிகலா அறிக்கை வெளியிட்டதன் மூலம், பிரிந்துகிடக்கும் எதிரணி ஓரணியில் திரள்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

Published:Updated:
சசிகலா, பன்னீர்
சசிகலா, பன்னீர்
0Comments
Share

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாவது முறையாக அ.தி.மு.க பிளவுகண்டிருக்கிறது. பொதுக்குழு மூலம் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வாகிவிட்டார். ஓ.பி.எஸ் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர்.

சசிகலா, பன்னீர், எடப்பாடி பழனிசாமி
சசிகலா, பன்னீர், எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வின் ஒற்றை மக்களவை எம்.பி-யாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத்தும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஜூலை 23-ம் தேதி எடப்பாடியின் இந்த முடிவுக்கு எதிராகவும், ரவீந்திரநாத்துக்கு ஆதரவாகவும் சசிகலா அறிக்கை வெளியிட்டார். திடீரென பன்னீர் தரப்புக்கு சசிகலா வெளிப்படையாக ஆதரவளிக்க என்ன காரணம்?.

அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பேசியபோது, “இது ஒன்றும் ஆச்சர்யப்படத்தக்க செய்தியல்ல. வெளிப்படையாக சசிகலா அறிக்கை வெளியிட்டதுதான் இதில் புதுசு. ‘பூனைக்குடி வெளியே வந்துவிட்டது’ என்று ஒரு பழமொழி சொல்வார்களே, அதுதான் இதில் நடந்திருக்கிறது. இத்தனை நாள்கள் ரகசியமாகப் பேசிக்கொண்டவர்கள் இனி வெளிப்படையாகப் பேசினாலும் பிரச்னையில்லை. சசிகலா குறித்த கருத்து வெளிப்படும்போதெல்லாம், ‘மூத்த நிர்வாகிகள் பேசி எடுக்கும் முடிவை நான் ஏற்றுக்கொள்வேன்’ என்றுதான் ஓ.பி.எஸ் சொல்லிவந்தார்.

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

ஒருமுறைகூட சசிகலாவுக்கு எதிராக எந்த ஒரு வார்த்தையையும் பன்னீர் பயன்படுத்தியதில்லை. தற்போது வெளியேற்றப்பட்டிருக்கும் பன்னீர், தான்தான் அ.தி.மு.க என்பதாக நிர்வாகிகளை நியமித்துவந்தாலும், தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரையில் பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்.

பன்னீருக்கு முன்பாக வெளியேற்றப்பட்ட தினகரன், தனியாக அ.ம.மு.க என்கிற கட்சியைத் தொடங்கி நடத்திவருகிறார். சசிகலாவோ வெறுமனே பொதுச்செயலாளர் பதவிக்கு உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கிறார். இதில் மூன்றாவதாக பன்னீரும் இணைந்துவிட்டார். இனி, எடப்பாடிக்கு பயந்து மறைமுகமாக உறவுகொண்டாடவேண்டிய தேவை பன்னீருக்கோ, சசிகலாவுக்கோ இல்லை.

தினகரன்
தினகரன்

அதனால்தான், சசிகலா வெளிப்படையாக ரவீந்திரநாத்துக்கு ஆதரவு கொடுத்துவிட்டார். இனி, எடப்பாடியால் வெளியேற்றப்பட்ட மூவரும் இணைந்து எடப்பாடியை எதிர்க்கவும் வாய்ப்பிருக்கிறது’’ என்றனர்.

இது பற்றி, சசிகலா ஆதரவாளரான ஆவின் வைத்தியநாதனிடம் பேசினோம். ``வானகரத்தில் நடந்த இரண்டு பொதுக்குழுவுக்குமே சசிகலாவை அழைத்தோம். பன்னீர்செல்வமும் சசிகலாவுடன் வருவதற்குத் தயார் என்றார். ஆனால், சசிகலா ஒப்புக்கொள்ளவில்லை. இதுவரை தும்பைவிட்டு வாலைப் பிடித்துக்கொண்டிருந்தார் சசிகலா. ஆனால், பன்னீர்செல்வம் எடப்பாடி வெளியேற்றினாலும் தான்தான் அ.தி.மு.க என்பதாக புதிய நிர்வாகிகளை நியமித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், சசிகலா வெளியில் வந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை நிர்வாகிகளை நியமனம் செய்யவில்லை.

`ஆவின்' வைத்தியநாதன்
`ஆவின்' வைத்தியநாதன்

நான்தான் பொதுச்செயலாளர் என்று க்ளெய்ம் செய்கிறார் சசிகலா. பொதுச்செயலாளர் பதவி செல்லும் என்றால், அவர் நியமிக்கும் நியமனங்களும் செல்லும்தானே... ஓ.பி.எஸ்-ஸும் செல்லும் என்ற நம்பிக்கையில்தான் பதவிகளைப் போட்டுவருகிறார். இத்தனை நாள்கள் எடப்பாடியை எதிர்த்ததைவிட இனி சசிகலா கூடுதல் பலத்துடன் எதிர்ப்பார். ஏனெனில், எடப்பாடிக்கு எதிராக கே.சி.பழனிசாமி, டி.டி.வி.தினகரன், சசிகலா, ஓ.பி.எஸ் என எல்லோரும் ஒருங்கிணைவதற்கான நேரம் நெருங்கியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் சசிகலாவின் அந்த அறிக்கை. எங்களது இந்த ஆன்டி எடப்பாடி டீமுக்குத்தான் டெல்லி சப்போர்ட்டும் உள்ளது. நிச்சயம் இந்தக் கூட்டணி எடப்பாடியைக் காலிசெய்யும்” என்றார்.