நாப்கின் பற்றி துணிச்சல் கேள்வி: மாணவிக்கு கல்விச்செலவுடன் நாப்கின் வழங்கும் தயாரிப்பு நிறுவனம்

மாதவிடாய் சுகாதாரம் என்பது பல தலைமுறைகளாகப் பேசப்படும் தடைப்பட்ட விஷயமாக இருக்கிறது. இது மாற வேண்டும். இன்னும் பல பெண்கள் இதுபற்றி பேச முன்வர வேண்டும்.

Published:Updated:
Sanitary Napkin
Sanitary Napkin ( Pixabay )
0Comments
Share

பீகாரில், ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் குறைந்த விலையில் நாப்கின் வழங்குவீர்களா என்று துணிச்சலாகக் கேட்ட பள்ளி மாணவிக்கு ஓராண்டுக்கு நாப்கின் மற்றும் உயர்கல்வி வரை செலவை ஏற்பதாக, நாப்கின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில், கடந்த 27ம் தேதி, `அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்’ என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இதில், 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுடன், பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கவுர் கலந்துரையாடினார். அப்போது, பள்ளி மாணவி ரியா என்பவர், ``அரசு நிறைய இலவசங்களை வழங்குகிறது. எங்களுக்கு 20 முதல் 30 ரூபாய் வரையிலான சானிட்டரி பேடுகளை அரசால் வழங்க முடியாதா?” என்று கேட்டுள்ளார்.

இக்கேள்விக்கு பதிலளித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கவுர்,``இன்று நாப்கின் கேட்பீர்கள். நாளைக்கே ஜீன்ஸ் பேன்ட் கேட்பீர்கள். பின்னர், நீங்கள் ஏன் ஷூக்களை தரக்கூடாது என்பீர்கள். கடைசியாக, குடும்ப கட்டுப்பாடு முறைகளையும், ஆணுறைகளைக்கூட அரசே தர வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள்” என்று, முகம் சுளிக்கச் செய்யும் வகையில் பதிலளித்தார்.

ஹர்ஜோத் கவுர் பங்கேற்ற கருத்தரங்கு.
ஹர்ஜோத் கவுர் பங்கேற்ற கருத்தரங்கு.
ட்விட்டர்

அவரது பொறுப்பற்ற இந்த பதிலும், அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாயின. ஐ.ஏ.எஸ் அதிகாரி கவுரின் அநாகரிகப் பேச்சுக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி கவுர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார்.

பின்னர், இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த மாணவி ரியா, ``எனது கேள்வியில் தவறு எதுவும் இல்லை. என்னால் சானிட்டரி நாப்கின் வாங்க முடியும். ஆனால், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் குடிசைகளில் வசிக்கும் மாணவிகளால் வாங்க முடியாது. அவர்கள் சார்பாகத்தான், நான் இக்கோரிக்கையை வைத்திருந்தேன்”என்றார்.

தனது பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை உணர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர், தனது பேச்சு பெண்களைப் புண்படுத்தி இருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சானிட்டரி நாப்கின் குறித்து துணிச்சலாகக் கேள்வி எழுப்பிய மாணவிக்கு, சானிட்டரி பேடு தயாரிக்கும் நிறுவனமான PAN ஹெல்த்கேர் பாராட்டு தெரிவித்துள்ளது. அத்துடன், மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசிய மாணவியைப் பாராட்டி, ஓராண்டுக்கு சானிட்டரி நாப்கின் இலவசமாக வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

பீரியட்ஸ்
பீரியட்ஸ்

இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிராக் பான் கூறுகையில், ``மாதவிடாய் சுகாதாரம் என்பது பல தலைமுறைகளாகப் பேசப்படும் தடைப்பட்ட விஷயமாக இருக்கிறது. இது மாற வேண்டும். இன்னும் பல பெண்கள் இதுபற்றி பேச முன்வர வேண்டும். மாதவிடாய் பற்றி வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். ரியாவின் தைரியத்திற்கு நாங்கள் தலைவணங்குகிறோம்.

மேலும், அந்த மாணவிக்கு ஒரு வருடத்திற்கு, சானிட்டரி பேடுகள் வழங்கப்படும். இது, மாதவிடாய் தொடர்பான பாசாங்குத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த அவரது நம்பிக்கைக்கான ஒரு சிறிய அடையாளமே. அந்த மாணவியின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்” என்றார்.