தர்மம்... தியாகம்... துரோகம்... அதிமுக-வில் யார் யார் என்னென்ன செய்தார்கள்?

அ.தி.மு.க-வில் யார் தர்மம் செய்தவர், தியாகம் செய்தவர், துரோகம் செய்தவர் என்ற பேச்சு தற்போது மிகப்பெரிய விவாதமாகியிருக்கிறது. அதிமுக-வில் அந்த அடைச்சொல் யாருக்கெல்லாம் சேரும்..?

Published:Updated:
அதிமுக தலைமை அலுவலகம்
’எம்.ஜி.ஆர் மாளிகை’
அதிமுக தலைமை அலுவலகம் ’எம்.ஜி.ஆர் மாளிகை’
0Comments
Share

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கும் பரபரப்புக்கும் சற்றும் குறைவில்லாமல் தற்போது ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கையை மையமிட்டு மிகப்பெரிய அளவில் பிளவும் பரபரப்பும் நடந்துகொண்டிருக்கின்றன. அந்தக் கட்சியின் நிர்வாகிகளாக மூன்று முறை முதல்வராக இருந்தவரையே பொதுக்கூட்டத்திலிருந்து விரட்டும் அளவுக்கு அந்தப் பிளவு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ‘ஒற்றைத் தலைமை வேண்டும்’ என ஒரு பக்கமும் ‘இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டும்’ என மற்றொரு பக்கமும் குரல்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.

“கட்சியின் தலைமையால் அடையாளம் காணப்பட்டவன், ஒருங்கிணைப்பாளர் எனத் தலைமைப் பொறுப்பில் இருப்பவன் எனவே, எனக்குத்தான் கட்சியில் முழு அதிகாரம் இருக்கிறது” என ஓ.பி.எஸ்-ஸும், “கட்சியின் தொண்டர்கள் தொடங்கி நிர்வாகிகள் வரை அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் தங்களுக்குத்தான் இருக்கிறது. நான்தான் தலைவன்” என இ.பி.எஸ்-ஸும் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள். இதோடு தாங்கள்தான் கட்சிக்குத் தியாகம் செய்தவர்கள் எனவும், மற்றவர் மீது துரோகிப் பட்டமும், தங்களுக்குள்ளாகவே தர்மம் செய்துவிட்டோம் என்ற குரல்களும் எழத் தொடக்கியிருக்கின்றன.

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா

அ.தி.மு.க-வில் உண்மையில் தர்மம் செய்தவர்கள் யார், தியாகம் செய்தவர்கள் யார் யார், துரோகிகள் எவரெவர்..?

``சோறு போட்டு வளர்த்த கட்சி உணவாகிக்கொண்டிருக்கிறது!”

“அ.தி.மு.க-வில் தர்மம் செய்தது யார்?” என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் வைத்தோம். “அ.தி.மு.க-வில் தர்மம் செய்தது நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்-தான். அவரின் மறைவுக்குப் பிறகு மூத்த வழக்கறிஞர் எம்.சி.ராகவாச்சாரி 1988ல் இப்போது இருக்கும் தலைமைக் கழகத்தில் எம்.ஜி.ஆர் எழுதிய உயிலை வாசித்தார். அந்த உயிலைக் கேட்டு கூடியிருந்த பத்திரிகையாளர்கள் உட்பட அனைவரும் கண்ணீர்விட்டு அழுதனர். தனது சொந்த சம்பாத்தியம் சத்யா திருமண மண்டபத்தைக் கட்சிக்கு எழுதிவைத்தார். இப்போது இருக்கும் எம்.ஜி.ஆர் மாளிகை அதுதான். கட்சி பிளவுபடக் கூடாது என்ற நிபந்தனையையும் அந்த உயிலில் எழுதியிருந்தார். நினைவு இல்லத்துக்காகத் தனது மாம்பலம் அலுவலகத்தைக் கொடுத்தார்.

அந்தக் காலத்தில் இன்றைய அ.தி.மு.க அலுவலகத்திலிருந்து `நடிகன் குரல்’ என்ற பத்திரிகை வெளியானது. பல மூத்த பத்திரிகையாளர்கள் அங்கு சென்று வருவோம். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு, இன்றைக்குத் தலைமைக் கழகம் இருக்கும் இடத்துக்கு அருகில் நிலத்தைக் கொடுத்தார். அதுபோக அந்த நிலத்தைப் பராமரிக்கவும் தனது சொந்தச் செலவில் கடை வாடகையை எழுதிக்கொடுத்தார். இவ்வளவு தர்மத்தையும் செய்தவர் இன்றைக்கு அ.தி.மு.க-வுக்கு இருக்கும் 8,000 கோடி ரூபாய் சொத்தைத் தர்மம் செய்தவர் எம்.ஜி.ஆர்-தான். ஜெயலலிதா இவற்றைக் காப்பாற்றிவைத்தார். ஆனால், புதிதாக எதையும் சேர்த்துவைக்கவில்லை. இன்றைக்கு இருக்கும் எடப்பாடியோ, பன்னீர்செல்வமோ ஒரு துரும்பைக்கூட அ.தி.மு.க-வுக்காகக் கொடுக்கவில்லை.

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்

கட்சியைப் பிளவுபடுத்தி வைத்திருக்கிறார்கள். இப்படி இவர்கள் நடந்துகொள்வதால் எம்.ஜி.ஆரின் உயில்படி இந்தச் சொத்துகளெல்லாம் வாரிசுகளுக்குத்தான் செல்லும். எம்.ஜி.ஆர் செய்த தர்மம் வீணாகிக்கொண்டிருக்கிறது. “சாப்பாடு போட்டு வளர்த்த கட்சி. யாருக்கும் சாப்பாடு ஆகிவிடக் கூடாது” என ஜானகி சொல்லியிருக்கிறார். ஆனால், இப்போது தங்கள் சுயநலனுக்காகச் சிலர் அதைச் சாப்பாடு ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.

``தொண்டர்கள் செய்ததுதான் அப்பழுக்கற்ற தியாகம்!”

அ.தி.மு.க-வுக்காகத் தியாகம் செய்தவர்கள் யார்?” என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் ஜென்ராமிடம் வைத்தோம். “எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் எம்.ஜி.ஆர் மீது இருக்கக்கூடிய அளவுகடந்த பாசம் காரணமாக அ.தி.மு.க தோன்றிய காலத்தில் சிலர் அரசியல் கொலைகளுக்கு உள்ளானார்கள். அவர்களின் தியாகத்தின் அடித்தளத்தில் எழுந்த இயக்கமாகவே அ.தி.மு.க-வைப் பார்க்க முடிகிறது. உயிர் கொடுத்தவர்களைத் தவிர தங்களிடமிருந்த கொஞ்சநஞ்ச சேமிப்பையும் எம்.ஜி.ஆருக்காக, அ.தி.மு.க-வின் வளர்ச்சிக்காகத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலுமிருந்து செலவு செய்த எளிய மனிதர்களாக இருந்த தொண்டர்கள். இவர்கள் யாரும் இன்றைய அ.தி.மு.க-வினர்போல வெள்ளை வேட்டியோடு சுற்றியவர்கள் இல்லை.

தோளிலோ, தலையிலோ துண்டைக் கட்டிக்கொண்டு கூலி வேலை செய்துகொண்டு அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக எம்.ஜி.ஆருக்கான நேரத்தைச் செலவு செய்தவர்கள் மட்டுமே அ.தி.மு.க-வுக்காக உண்மையில் தியாகம் செய்தவர்கள். இன்றைக்கு இருக்கும் தலைவர்கள் சொல்லும் தியாகத்தைவிட அந்த அப்பழுக்கற்ற தொண்டர்கள் செய்ததுதான் உண்மையான தியாகம்.

பத்திரிகையாளர் ஜென்ராம்
பத்திரிகையாளர் ஜென்ராம்

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க என்ற இயக்கம் எப்போதும் உயரத்தில் இருக்க வேண்டும் என்ற ஒரே எதிர்பார்ப்பு மட்டும்தான் அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது” என்றார்.

“அ.தி.மு.க-வின் காலத்தில் தியாகி்ப் பட்டம் ஒரு தொடர்கதை!”

“அ.தி.மு.க-வின் துரோகிகள் யார்?” என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் துரை குணாவிடம் கேட்டோம். ``அ.தி.மு.க தொடங்கிய ஓராண்டுக்குள் கட்சியிலிருந்து மகளிரணிப் பிரமுகர் ஒருவர் புரட்சி அண்ணா தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால், அது நான்கு மாதங்கள்கூட நீடிக்கவில்லை. 1976-ல் அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் கோவையில் நடந்தது. அப்போது அ.தி.மு.க என்ற மாநிலக் கட்சி, அ.இ.அ.தி.மு.க எனத் தேசியக் கட்சியாக மாறியது. இதை எதிர்த்து வி.விஸ்வநாதன், கோவைச் செழியன், கிள்ளப்பன், இந்திரகுமாரி உட்பட சிலர் ‘மாநிலக் கட்சியாகவே தொடர வேண்டும்’ என அதே பொதுக்குழுவில் எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருத்து தெரிவித்தார்கள். நாஞ்சில் மனோகரன், எஸ்.வி.சோமசுந்தரம், காளிமுத்து ஆகியோர் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தார்கள். இதையடுத்து `எம்.ஜி.ஆர் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டார்’ எனக் கூறி எதிர்ப்புக் குழுவினரும், `அவர்கள்தான் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டார்கள்’ என ஆதரவுக் குழுவினரும்’ பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்டார்கள். 1984-ல் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த எஸ்.வி.சோமசுந்தரம் `நமது கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கியபோது அவருக்குத் துரோகிப் பட்டம் கொடுத்தார்கள்.

துரை கருணா
துரை கருணா

1984 டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல் வந்தது. `எம்.ஜி.ஆரோடு வளர்ந்த, கட்சி வளர்த்த எனக்கு ஆர்.எம்.வீரப்பன் துரோகம் செய்துவிட்டார்’ என எஸ்.எஸ்.ஆர் வெளியில் வந்து `எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர் அ.தி.மு.க’ என ஒரு கட்சியைத் தொடங்கினார். அ.தி.மு.க-வுக்கு எதிராக 15 தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால், அந்தத் தேர்தல் முடிந்ததும் அந்தக் கட்சி காணாமல்போய்விட்டது” என்றவர்…

“1987-ல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு `துரோகம்’ என்ற சொல்லும் `தர்மம் வெல்லும்’ என்ற கருத்தும் ஜெ அணி, ஜா அணி சார்பில் பரஸ்பரம் பேசப்பட்டவை. 1989=ல் அணிகள் இணைந்தபோது `தர்மம் வென்றது’ என்றார்கள். 88 மற்றும் 89 காலகட்டங்களில் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்க நாயகம், திருநாவுக்கரசர் ஆகிய நால்வரும் கட்சியிலிருந்து வெளியேறி நால்வர் அணியாகச் சென்றார்கள். இவர்கள் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டார்கள் எனக் கூறி அவர்களுக்கு அப்போது துரோகிப் பட்டம் கொடுத்தார்கள். அதன் பிறகு அவர்கள் அனைவரும் அ.தி.மு.க-வில் இணைந்தார்கள். திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க என ஒரு கட்சியும், எஸ்.வி.சோமசுந்தரம் புரட்சித்தலைவர் அ.தி.மு.க என ஒரு கட்சியும் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடங்கினார்கள். அவர்களுக்குத் துரோகிப் பட்டம் சூட்டப்பட்டது.

1996-ல் மிகப்பெரிய தோல்வியை அடுத்து சசிகலா குடும்பம்தான் காரணம் எனக் கூறி போட்டி அ.தி.மு.க என ஒன்றைத் தொடங்கினார்கள். ஒரே நாள் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் கூட்டம் கூட்டினார்கள். விஜய சேஷ, விஜய ராணி மகாலில் ஜெயலலிதா பொதுக்குழுக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார்கள். இவர்கள் அவர்களையும், அவர்கள் இவர்களையும் துரோகி என்று சொல்லிக்கொண்டார்கள். பிறகு அந்தப் போட்டி அ.தி.மு.க-வில் இருந்தவர்கள் மீண்டு ஜெயலலிதாவுடன் இணைந்தார்கள்.

அ.தி.மு.க பொதுக்குழு
அ.தி.மு.க பொதுக்குழு

இப்படி எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி ஜெயலலிதா காலம் வரை அ.தி.மு.க-வில் பிரச்னை எழும்போதெல்லாம் ஒருவருக்கு துரோகிப் பட்டம் சுமத்துவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதன் நீட்சியாகத்தான் இப்போது ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் மாறி மாறி துரோகிப் பட்டம் சூட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதன் நீட்சியாக நடக்கும் விஷயங்களைத்தான் தற்போது நடக்கும் நிகழ்வுகளை நாம் பார்க்க வேண்டும்” என்றார்.