ரெட்டை வால் குருவி: ‘ராஜராஜ சோழன் நான்’ - ராகதேவனும் பாலு மகேந்திராவும் கொடுத்த மாஸ்டர் பீஸ்!

"செக்ஸ் எஜூகேஷனை ஸ்கூல்ல கொண்டு வர்றதைப் பத்தி என்ன நினைக்கறீங்க?’ என்று மோகன் இன்டர்வியூ செய்யும் போது "ஹோம் ஒர்க் கொடுக்காம இருந்தா சரி” என்று குறும்பாகப் பதில் சொல்லி விட்டு ‘கபகப’வென்று சிரிப்பார் ராதிகா.

Published:Updated:
ரெட்டை வால் குருவி
ரெட்டை வால் குருவி
0Comments
Share
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘ரெட்டை வால் குருவி’.

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas For 2K Kids

‘ரொமான்டிக் காமெடி’ என்கிற வகையறாவில் ஹாலிவுட்டில் ஏராளமான, விதம்விதமான திரைப்படங்கள் உள்ளன. தமிழிலும் இந்த வகைமை இருந்தாலும் அவை வழக்கமான தமிழ் சினிமாக்களின் கலவையாகவே இருக்கும். அதற்குள் ஆக்ஷன், சென்டிமென்ட் என்று பல விஷயங்கள் தவிர்க்க முடியாமல் இருக்கும். இவ்வாறு இன்றி அயல் சினிமா பாணியில் நூல் பிடித்தாற் போல் கோர்வையாகவும் நேர்த்தியாகவும் சொல்லப்பட்ட ஒரு ‘Rom-Com’-தான் ‘ரெட்டை வால் குருவி’.

கோவலன் – கண்ணகி – மாதவி – புராதனத்தின் மறுவடிவங்கள்

நடுத்தரவர்க்க மக்களின் வீடு கட்டும் கனவை அதற்குண்டான வலிகளுடன் பதிவு செய்யவும் பாலு மகேந்திராவிற்குத் தெரியும். அதைப் போலவே மனித உறவுகளுக்கு இடையே, குறிப்பாக ஆண் – பெண் உறவுச் சிக்கலில் நிகழும் மனரீதியான சிடுக்குகளை வைத்தும் திரைப்படம் இயக்கத் தெரியும். அதே சமயத்தில் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் தரமான நகைச்சுவைத் திரைப்படங்களையும் இவருக்கு உருவாக்கத் தெரியும். இந்த வரிசையில் 'ரெட்டை வால் குருவி' மற்றும் 'சதி லீலாவதி' ஆகிய இரண்டு படங்களும் முக்கியமான நகைச்சுவைப் படங்கள்.

Micki & Maude
Micki & Maude

முறையாகத் தாலி கட்டிய மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு பெண்ணுடனுடான உறவில் விழுந்து விட்டு கணவன் தத்தளிக்கும் கதை என்பது சினிமாவிற்குப் புதிதல்ல. உலக அளவில் இது தொடர்பாக ஏராளமான படங்கள் வந்துள்ளன. 'ரெட்டை வால் குருவி' கூட 'Micki & Maude' என்கிற அமெரிக்கத் திரைப்படத்தின் அப்பட்டமான தழுவலே. இதே கதைக்கருவுடன் 'பாவக்கூத்து' என்கிற மலையாளத் திரைப்படமும் ஜெயராம் நடிப்பில் பிறகு வெளியானது.

மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு பெண்ணின் உறவு தேடும் கணவனைப் பற்றிய கருவை வைத்து ‘மறுபடியும்’ என்கிற சீரியஸான படத்தை எடுத்த பாலு மகேந்திராவே, ‘ரெட்டை வால் குருவி’யின் மூலம் நகைச்சுவைத் திரைப்படமாகவும் உருவாக்கினார். இது அவருடைய திறமையின் பரிமாணத்தையும் மேதைமையும் காட்டுகிறது. குறிப்பாக எண்பதுகளில் இந்தக் கதைக்கருவில் நிறையப் படங்கள் வெளியாகின. பாக்யராஜின் ‘சின்ன வீடு’, மணிவண்ணனின் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்று நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். என்றாலும் ‘ரெட்டை வால் குருவி’ அதன் தனித்தன்மையுடன் நிற்கிறது.

மோகன் – சாமானியர்களின் நாயகன்

தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராகப் பணிபுரிபவர் மோகன். தன்னுடைய முறைப் பெண்ணான அர்ச்சனாவைத் திருமணம் செய்து கொள்கிறார். குழந்தை என்றால் மோகனுக்கு ரொம்பவும் ஆசை. ஆனால் அர்ச்சனா பணிக்குச் செல்வதால் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிறார். செய்தி சேகரிக்கும் பணியில் இருக்கும் போது ராதிகாவைச் சந்திக்கிறார் மோகன். இருவருக்கும் ஏற்படும் நட்பு பிறகு காதலாக மாறி உறவில் மலர்கிறது. தனக்குத் திருமணமான செய்தியை மறைத்து காதலியுடன் பழகுகிறார் மோகன். ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவருடன் குடும்பம் நடத்துகிறார். ஒரே சமயத்தில் இருவரும் கர்ப்பம் ஆகிறார்கள். இதில் கூடுதல் வேடிக்கை என்னவென்றால் ஒரே மருத்துவமனையில் இருவருக்கும் பிரசவம் நடக்கும் சூழல் நேர்கிறது. இறுதியில் என்ன நேர்கிறது என்பதை அட்டகாசமான நகைச்சுவைக் காட்சிகளின் வழியே விவரித்திருக்கிறார் இயக்குநர்.

ரெட்டை வால் குருவி போஸ்டர்
ரெட்டை வால் குருவி போஸ்டர்
முன்பெல்லாம் சூப்பர் ஹீரோக்களுக்கு அடுத்த வரிசையில் சாமானியர்களைப் பிரதிபலிக்கும் ஹீரோக்களும் இருப்பார்கள். ஜெமினி கணேசன் துவங்கி முத்துராமன், சிவகுமார், ராஜேஷ், பாக்யராஜ், முரளி என்று இந்தப் பட்டியல் நீளமானதாக இருக்கும். ‘நம் பக்கத்து வீட்டில் இருக்கும் கதாபாத்திரம்’ போன்று இயல்பான கேரக்டர்களை இவர்கள் திரைப்படங்களில் கையாள்வார்கள். அப்பாவித்தனம், வெள்ளந்தித்தனம், அசட்டுத்தனம் என்று சராசரி நபர்களின் அத்தனை குணாதிசயங்களையும் கொண்டிருப்பார்கள். ஆனால் சமகாலத்தில் அப்படி எந்த ஹீரோவையும் பார்க்க முடியவில்லை. அப்படி உருவாகி வந்த சிவகார்த்திகேயன்கூட ஆக்ஷன் ஹீரோவாக ஆக முயல்கிறார்.

இந்த சாமானியர்களுக்கான ஹீரோ வரிசையில் முக்கியமானவராக மோகனைச் சொல்ல வேண்டும். மெல்லிய உடல்வாகு, அசட்டுத்தனமான சிரிப்பு, தெற்றுப்பல், கம்மிய குரல் என்று சூப்பர் ஹீரோக்களுக்கான அடையாளங்கள் இல்லாமலிருந்தாலும் வசீகரமான தோற்றம், அழகான சிகையலங்காரம், எந்தவொரு ஆடையும் பொருந்தக்கூடிய கச்சிதமான உடல் என்று இயல்பான தோற்றத்தைக் கொண்டிருக்கும் ஹீரோவாக இருந்தார். ஒரு காலத்தில் மோகன் நடித்த பெரும்பாலான படங்கள் வெள்ளி விழா கொண்டாடின.

மோகனை ‘கோகிலா’ என்கிற கன்னடப் படத்தில் அறிமுகப்படுத்தியவர் பாலு மகேந்திராதான். பிறகு ‘மூடுபனி’ திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகம் செய்தார். பிறகு நடந்தது வரலாறு. ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் நடித்துக் குவித்தார் மோகன். சில விதிவிலக்குகள் தவிர, பெரும்பாலான திரைப்படங்களில் இயல்பான பாத்திரங்களையே மோகன் கையாண்டார். ‘மௌன ராகம்’ திரைப்படத்தில் ஒரு கண்ணியமான கணவன் பாத்திரத்தை இவர் சிறப்பாகக் கையாண்ட காரணத்தால் பெண் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றார். "இந்தப் படத்துக்கு அப்புறம் உன்னைப் பாராட்டிய ரசிகைகளையே திட்ட வைக்கறேன் பாரு...” என்று 'ரெட்டை வால் குருவி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் மோகனிடம் சொல்லிச் சிரித்தாராம் பாலு மகேந்திரா.

ஆனால் அந்த வில்லங்கமான பாத்திரத்தை மிக நேர்த்தியான நகைச்சுவைப் பூச்சுடன் சிறப்பாக நடித்திருந்தார் மோகன். யாருக்கும் இவர் மீது கோபமோ, விமர்சனமோ வராத அளவிற்கான அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தியிருந்தார். ‘கோபி’ என்கிற இந்தப் பாத்திரத்தை வேறு யார் ஏற்றிருந்தாலும் இத்தனை சிறப்பாக வெளிப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்.

ரெட்டை வால் குருவி
ரெட்டை வால் குருவி

குழந்தைகளின் மீதான பிரியத்தை விதம் விதமாக வெளிப்படுத்துவதும், மனைவி அர்ச்சனாவின் பின்னால் தட்டி இளிப்பதும், தன்னுடைய குட்டு வெளிப்படவிருக்கிற நேரத்தில் எல்லாம் அசட்டுச் சிரிப்புடன் பொய்களை அள்ளி விட்டுச் சமாளிப்பதும், மருத்துவமனையில் நர்ஸைப் பார்த்து மிரள்வதும், பயில்வான் மாமனாரைப் பார்த்துப் பம்முவதும், மேலதிகாரி வி.கே.ராமசாமியிடம் குற்றவுணர்வுடன் வருந்துவதும் என்று படம் முழுவதும் மோகனின் ராஜ்ஜியம்தான். மோகனின் சினிமா பயணத்தில் ‘ரெட்டைவால் குருவி’ ஒரு முக்கியமான திரைப்படம். இதே மாதிரியான பாத்திரத்தை அவர் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தில் ஏற்றிருந்தாலும் இதன் ருசி வேறு வகையானது.

அர்ச்சனா, ராதிகா என்று இரு பேரழகிகள்

மாநிறத்தில் (dusky) உள்ள நாயகிகளின் மீது பாலு மகேந்திராவிற்கு உள்ள பிரேமையைப் பல படங்களில் பார்க்கலாம். அவர்களை அப்படி ரசித்து ரசித்து தன் திரைப்படங்களில் பேரழகுடன் பதிவு செய்வார். இதிலும் அப்படியே. அர்ச்சனாவும் ராதிகாவும் ஒவ்வொரு பிரேமிலும் அதிக ஒப்பனையின்றி அத்தனை அழகாகக் காட்சியளிப்பார்கள். மோகனின் முறைப்பெண் என்பதால் “யோவ்... என்னய்யா நீ..?’ என்று அடிக்கடி தன் கணவனிடம் சிணுங்குவதாகட்டும், “புள்ளத்தாய்ச்சி பொண்ணாச்சேன்னு உனக்கு என் மேல அக்கறை இருக்கா?” என்று சட்டென்று கண்ணில் நீர் கோர்த்துக் கொள்வதாகட்டும்... ஒரு சராசரியான மனைவியின் சித்திரத்தை மிக கச்சிதமாக வெளிப்படுத்தியிருப்பார் அர்ச்சனா.

ராதிகாவின் அசலான ஆளுமை வெளிப்பட்ட படங்களில் ஒன்று இந்தத் திரைப்படமாக இருக்கக்கூடும். ‘எலைட்’ மனோபாவமும் இயல்புத்தன்மையும் கலந்ததொரு பெண்ணின் பாத்திரத்தை மிகச் சிறப்பாகவும் அநாயசமாகவும் வெளிப்படுத்தியிருப்பார் ராதிகா. மோகன் அசட்டுத்தனமாகச் சிரிக்கும் போதெல்லாம் “என்ன வழியறீங்க..?” என்று இவர் கேட்பது ரசிக்க வைக்கும் உடல்மொழி. மோகனின் தோற்றத்தை விதம் விதமாக வர்ணித்து தன் காதலை மறைமுகமாக வெளிப்படுத்தும் காட்சியும் அபாரமானது.

ரெட்டை வால் குருவி
ரெட்டை வால் குருவி

மோகனின் மேலதிகாரி பாத்திரத்தில் மிக இயல்பான தோற்றத்திலும் நடிப்பிலும் அசத்தியிருப்பார் வி.கே.ராமசாமி. ‘கோபி கண்ணா... தப்பு’ என்று மோகனை செல்லமாக எச்சரிப்பதும், ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்’ என்று அவ்வப்போது பழைய சினிமா பாடல்களைப் பாடி கிண்டல் செய்வதும், மோகனின் திருவிளையாடல்களுக்கு வேறு வழியின்றி உடந்தையாக நிற்பதும் எனச் சுவாரஸ்யமான பாத்திரம். இதற்கு முன்பு ‘மௌனராகம்’ திரைப்படத்திலும் மோகன் + வி.கே.ஆர் காம்போ இயல்பாக அமைந்திருக்கும். அதைப் பார்த்து ரசித்து இந்தத் திரைப்படத்திலும் அதே கூட்டணியை பாலு மகேந்திரா தொடர வைத்திருக்கலாம்.

அர்ச்சனாவின் தாய்மாமனாக ஒரே காட்சியில் வந்திருந்தாலும் “நான் சொல்றதைக் கேளுடி” என்று உரிமையுடன் அவரை வேலூருக்கு டிரான்ஸ்ஃபரில் அனுப்பும் பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருந்தார் செந்தாமரை. அர்ச்சனாவின் தந்தையாக நடித்திருந்த தேங்காய் சீனிவாசனும் தன் பங்கிற்கு அசத்தியிருப்பார். இவருடைய ஒரிஜினல் குரல் பதிவாகியிருக்காது. வேறு யாரோ டப்பிங் கொடுத்திருந்தார்கள். இசையமைப்பாளராக இளையராஜா தோன்றும் சில திரைப்படங்கள் உள்ளன. ‘ரெட்டை வால் குருவியும்’ அதில் ஒன்று. கதையின் படி சிறந்த பாடகியான ராதிகா, இளையராஜாவிடம் வாய்ப்பு கேட்டுப் பாடிக் காட்டும் காட்சி ஒன்று வந்து போகும். "ஒண்ணும் பிரச்னையில்லையாக்கும். பிரசவம் சுகமாயிட்டு நடக்கும்" என்று பாலக்காட்டுத் தமிழில் பேசும் டாக்டராக சுவாரஸ்யப்படுத்தியிருந்தார் ‘நாயர்’ ராமன். இவர் பாலசந்தர் மற்றும் பாலு மகேந்திராவிடம் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர்.

‘ராஜராஜ சோழன் நான்’ – மறக்க முடியாத காவிய பாடல்

இந்தத் திரைப்படத்தில் நான்கு பாடல்கள் உள்ளன. பாலு மகேந்திரா + இளையராஜா காம்பினேஷன் என்பது எப்போதுமே ஸ்பெஷல். தனக்குப் பிடித்த இயக்குநர் என்றால் ராஜாவின் ஹார்மோனியம் கூடுதல் உற்சாகத்தை அடைந்து விடும் போல. ‘அழியாத கோலங்கள்’ தவிர, தான் இயக்கிய அனைத்துத் திரைப்படங்களுக்குமே ராஜாவின் இசையைத்தான் நாடினார் பாலு மகேந்திரா. எனில் இந்தக் கூட்டணிக்குள் இருக்கும் ஒத்திசைவையும் நேசத்தையும் புரிந்து கொள்ளலாம். தான் பதிவாக்கும் காட்சிகளை தன்னுடைய நண்பனான ராஜாவின் இசையால் மட்டுமே மேலதிக உயரத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பது பாலு மகேந்திராவின் அசைக்க முடியாத நம்பிக்கை.
ரெட்டை வால் குருவி - இளையராஜா
ரெட்டை வால் குருவி - இளையராஜா

‘ரெட்டை வால் குருவி’ ஆல்பத்தில் உள்ள இரண்டு பாடல்களைச் சாகாவரம் பெற்றவை என்று சொல்லி விடலாம். காலம் உள்ளளவும் அந்தப் பாடல்கள் வாழும் என்று கூட தோன்றுகிறது. அத்தனை அட்டகாசமாக இசையமைத்திருந்தார் ராஜா. மாண்டேஜ் காட்சிகளின் மூலம் ஒரு பாடலை உயிரோட்டத்துடன் வெளிப்படுத்த முடியும் என்பதைத் தமிழ் சினிமாவில் வலிமையாகப் பயன்படுத்தத் துவங்கிய முன்னோடி பாலு மகேந்திராதான். ‘ராஜராஜ சோழன் நான்’ என்கிற பாடல் அந்த வகையில் சிறப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கும். மோகனுக்கும் ராதிகாவிற்கும் இடையில் வெளிப்படும் காதலையொட்டி புறப்படும் பாடல் என்றாலும், மனைவி – துணைவி என்று இரு உறவுகளின் மீதும் மோகன் கொள்ளும் காதல் காட்சிகள் இந்தப் பாடலின் பின்னணியில் வரும்.

‘ராஜராஜ சோழன் நான்’, பாடல் வரிகளை எழுதியவர் மு.மேத்தா.

உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்,

இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்...

என்று வித்தியாசமான சொற்கோர்வைகளை எழுதியிருப்பார்.

தேனோடை ஓரமே

நீராடும் நேரமே

புல்லாங்குழல் தள்ளாடுமே

பொன் மேனி

கேளாய் ராணி…

என்று மெட்டுக்கும் பாட்டுக்கும் அத்தனை கனகச்சித பொருத்தமான வார்த்தைகள் வந்து விழுந்திருக்கும். கேட்கும் போதே காதிற்கு இனிமையைத் தரும் இலகுவான வரிகளை இட்டு ‘உல்லாச அனுபவத்தை’ நமக்குத் தந்திருப்பார் மேத்தா. கே.ஜே.யேசுதாஸ் இதைப் பாடிய விதத்தைப் பற்றி என்ன சொல்ல?! ஒரு புதிய காதலன், தன் காதலியுடன் தொலைதூரம் எங்காவது பயணிக்கும் போது அவனுடைய மனதில் உணரும் குளுமையையும் ஏகாந்தத்தையும் தன்னுடைய குரலில் கொண்டு வந்திருப்பார். இது ‘கீரவாணி’ ராகத்தில் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். எத்தனை முறை கேட்டாலும் மனதை மயக்கும் வகையில் இசைக்கோர்வைகளைப் படைத்திருப்பார் ராகதேவன்.

இன்னொரு அட்டகாசமான பாடல் ‘கண்ணன் வந்து பாடுகின்றான்...' இதைப் பற்றியும் விளக்க வார்த்தைகள் போதாது. எஸ்.ஜானகி இதைப் பாடியிருக்கும் விதம் இருக்கிறதே... அடடா?! காற்றில் பறந்து சரிந்து வரும் இறகொன்று ஆடி ஆடி பயணித்து அலைவது போன்ற தொனியை அநாயசமாக தன் குரலில் கொண்டு வந்திருப்பார் ஜானகி. சில இடங்களில் ஆகாயத்தைத் தொடும் நோக்கில் மேலே சென்று ‘சல்’லென்று ஜாலியாகக் கீழே இறங்கும் அந்தக் குரலின் மாய்மாலத்தை எத்தனை புகழ்ந்தாலும் தகும். இந்தப் பாடலை எழுதியவர் நா.காமராசன். இவரும் வித்தியாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பார்.

ஆயர்கள் மத்துச் சத்தம் போலவே

ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே...

என்று தமிழ் சினிமாவில் அதுவரை கேட்டறிந்திராத வரிகள் எல்லாம் வந்து விழுந்திருக்கும். இது ‘நடபைரவி’ ராகத்தில் உருவானது என்கிறார்கள். ஒரு அருமையான ‘ஜாஸ்’ இசைப்பாடலைக் கேட்டு முடித்த சுகத்தை ராஜா நமக்குத் தந்திருப்பார். இந்த இரண்டு பாடல்களிலுமே ராஜாவின் கைவண்ணம் மிக அழுத்தமாகப் பதிவாகியிருக்கும். இந்தப் பாடலுக்கு நளினமான நடன அசைவுகளைத் தந்து அசத்தியிருப்பார் ராதிகா.

ரெட்டை வால் குருவி
ரெட்டை வால் குருவி

மூன்றாவது பாடலான ‘சுதந்திரத்தை வாங்கிப்புட்டோம்’-ஐ கங்கை அமரன் எழுதியிருந்தார். இந்தப் படத்திற்குத் தொடர்பே இல்லாத உள்ளடக்கத்துடன் இந்தப் பாடல் வந்திருக்கும். குழந்தைகள் ஆடிப்பாடும் காட்சிகளை தொலைக்காட்சி நிறுவனம் பதிவு செய்வது போன்ற சித்திரிப்புடன் இந்தப் பாடல் அமைந்திருக்கும். கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரம் எவ்வாறெல்லாம் பாழாகிறது என்கிற நையாண்டியான வரிகள் நிரம்பியது. இந்தப் பாடலில் தசரதன் என்கிற நடிகர் முன்னிலையில் நின்று நடனம் ஆடியிருப்பார். இவர் கமல்ஹாசனின் காலத்தில் குழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தைத் துவங்கியவர். பின்னாளில் நாயகியான சாரதா ப்ரீதாவை கூட குழந்தை நட்சத்திரமாக இந்தப் பாடலில் காண முடியும். மிக முக்கியமாக, டீன் ஏஜ் குமரியாக நடிகை மௌனிகாவும் இந்தப் பாடலில் நடனம் ஆடியிருப்பார்.

நான்காவது பாடல், ‘தத்தெடுத்த முத்துப் பிள்ளை யாரோ’. கங்கை அமரன் எழுதிய பாடலுக்கு வழக்கம் போல் அருமையான இசையைத் தந்திருந்தார் ராஜா. ஆனால் என்ன காரணத்தினாலோ, இந்தப் பாடல் படத்தில் இடம்பெறவில்லை. அர்ச்சனா, ராதிகா ஆகிய இருவரும் மோகனை தன்னுடைய பிள்ளையாக எண்ணிக் கொஞ்சி மகிழ்வதைப் போன்ற உள்ளடக்கமாக இருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.

பாலு மகேந்திராவின் நகைச்சுவை ராஜாங்கம்

திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் என்று பல பொறுப்புகளை இந்தப் படத்தில் சுமந்திருந்தார் பாலு மகேந்திரா. ‘ரெட்டை வால் குருவி’யை ஒரு உன்னதமான ‘நகைச்சுவை ட்ரீட்’ எனலாம். படம் முழுவதும் தென்றல் மாதிரி இதமான நகைச்சுவை நம்மை உரசிப் புன்னகை செய்ய வைக்கும். சில இடங்களில் இடி மாதிரி வாய் விட்டுச் சிரிக்க வைக்கும். ‘Situation Comedy’ என்பது இந்தப் படத்தில் பல இடங்களில் சிறப்பாக அமைந்திருக்கும்.

மருத்துவச் சோதனைக்காக மோகனின் இரண்டு மனைவிகளும் ஒரே மருத்துவமனைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டு விடும். ஒருவர் அறியாமல் மற்றவரைச் சமாளிப்பார் மோகன். கதவைத் திறந்து வரும் இரண்டு மருத்துவர்களும் ‘மிஸஸ் கோபி’ என்று ஒரே குரலில் அழைக்கும் போது பதறிப் போய் சோபாவின் அடியில் படுத்துவிடுவார் மோகன். இவர் செய்யும் தகிடுதத்தங்களை கண்டு அதிர்ச்சியடையும் நர்ஸ் "மிஸ்டர் கோபி... என்ன இதெல்லாம்?” என்று கண்களை உருட்டி மிரட்டும் போது திருட்டு விழி விழிக்கும் மோகன், பிறகு அர்ச்சனாவிடம் "அதுவொரு போதை கேஸ்" என்று சமாளிக்கும் காட்சிகள் பட்டாசாக இருக்கும்.

பாலு மகேந்திரா
பாலு மகேந்திரா
Vikatan Library
காட்சிகளைப் போலவே வசனங்களிலும் இதமான நகைச்சுவைத் தென்றலை வீச வைத்திருந்தார் பாலு மகேந்திரா. "செக்ஸ் எஜூகேஷனை ஸ்கூல்ல கொண்டு வர்றதைப் பத்தி என்ன நினைக்கறீங்க?’ என்று மோகன் இன்டர்வியூ செய்யும் போது "ஹோம் ஒர்க் கொடுக்காம இருந்தா சரி” என்று குறும்பாகப் பதில் சொல்லி விட்டு ‘கபகப’வென்று சிரிப்பார் ராதிகா.

பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு பாணியைப் பற்றி நமக்குத் தெரியும். அவருக்குப் பிரியமான நிலப்பிரதேசமான ‘ஊட்டி’யின் குளுமையை அப்படியே காட்சிகளில் கொண்டு வந்து விடுவார். இந்தத் திரைப்படம் நகரத்தின் பின்னணியில் இயங்குவது. மோகன் மற்றும் ராதிகா வீடுகளின் உள்ளரங்க காட்சிகளில் லைட்டிங் அத்தனை பிரமாதமாக இருக்கும். மிக நேர்த்தியாகப் படமாக்கப்பட்டிருக்கும். போலவே 'ராஜராஜ சோழன் நான்' மற்றும் 'கண்ணன் வந்து பாடுகின்றான்' ஆகிய இரண்டு பாடல்களுமே பாலு மகேந்திராவின் பிரத்யேக கைவண்ணத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

இரு துணைகளைத் தேடும் கோவலனை நியாயப்படுத்தலாமா?

இந்தப் படத்தின் சிறப்புகளையெல்லாம் ஓரளவிற்குப் பார்த்து விட்டோம். இந்தப் படத்தின் கருத்தாக்கத்தில் உள்ள அடிப்படையான பிரச்னையையும் சற்று கறார் தன்மையுடன் பார்த்து விடுவோம். ஓர் ஆண் ஒன்றிற்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவாடுவதை நகைச்சுவைத் திரைப்படமாக எடுத்துவிட முடிகிறது. அதை பொதுச்சமூகம் மிக இயல்பாகவும் எடுத்துக் கொள்கிறது. ஆனால் இதுவே ஒரு பெண்ணை மையமாக வைத்து இப்படிப் படம் எடுத்துவிட முடியுமா? கலாசாரவாதிகள் சும்மா இருப்பார்களா?

மோகன் பாத்திரம் இன்னொரு உறவிற்குள் சென்று விழுவதை பல்வேறு லாஜிக்குடன் நியாயப்படுத்துவது போலவே காட்சிகள் நகரும். மோகனுக்கு இருக்கும் குழந்தை ஆசையை அர்ச்சனா மறுப்பதால்தான் அவருக்கு இன்னொரு பெண்ணின் மீது மையல் விழுந்தது என்கிற கோணம் கூட இருக்கும். மோகனுக்கும் தான் செய்வது தவறு என்பது உள்ளூர தெரிந்திருக்கும். கூடவே இருக்கும் வி.கே.ராமசாமியும் மனசாட்சியைப் போல அவ்வப்போது எச்சரிப்பார்.

ரெட்டை வால் குருவி
ரெட்டை வால் குருவி

என்றாலும் மோகனால் இன்னொரு உறவிற்குப் பயணப்படுவதை அவராலேயே தடுக்க முடியாது. மோகனின் குட்டு வெளிப்பட்டவுடன் “இனிமேல் எங்கள் குழந்தைகளைப் பார்க்க வரக்கூடாது” என்கிற தண்டனையை இரு பெண்களும் தருவார்கள். ஆனால் குழந்தையைப் பார்ப்பதற்காக மோகன் பின்தொடர்ந்து கொண்டே இருப்பதால், மனம் இரங்கி ரகசியமாக ஒப்புக் கொள்வார்கள். கடைசியில் மோகனை இருவருமே ஏற்றுக் கொள்வது போல் படம் நிறைந்திருக்கும். ஆண் என்ன தவறு செய்தாலும் கடைசியில் பெண்கள் இறங்கி வந்து ஏற்க வேண்டும் என்பதை மறைமுகமாக வலியுறுத்துவதைப் போன்ற நீதி படத்தில் இருப்பது விமர்சனத்திற்கு உரியது. இதே பிரச்னையை ‘மறுபடியும்’ திரைப்படத்தில் தீவிரமான கோணத்தில் இயக்குநர் அலசியிருப்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

மோகன், ராதிகா, அர்ச்சனா, வி.கே.ஆர் ஆகியோர்களின் இயல்பான நடிப்பு, பாலு மகேந்திராவின் திறமையான இயக்கம், இளையராஜாவின் அற்புதமான இசை போன்ற காரணங்களால் இன்று பார்த்தாலும் ஒரு நல்ல நகைச்சுவைத் திரைப்படத்தைப் பார்த்த திருப்தியைத் தருகிறது ‘ரெட்டை வால் குருவி’.