மதுரை: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா தனியாக ஆலோசனை!

மதுரையில் மாவட்டச் செயலாளர்கள் செல்லூர் ரஜூவும், ராஜன் செல்லப்பாவும் தனியாக ஆலோசனை நடத்தியிருப்பது அ.தி.மு.க-வினரிடையே மேலும் சூட்டை கிளப்பியிருக்கிறது.

Published:Updated:
செல்லூர் ராஜூ - ராஜன் செல்லப்பா
செல்லூர் ராஜூ - ராஜன் செல்லப்பா
0Comments
Share

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க-வினர் மீண்டும் இரண்டு அணிகளாகப் பிரிந்திருப்பது தமிழ்நாடு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், மதுரையில் மாவட்டச் செயலாளர்கள் செல்லூர் ரஜூவும், ராஜன் செல்லப்பாவும் தனியாக ஆலோசனை நடத்தியிருப்பது அ.தி.மு.க-வினரிடையே மேலும் சூட்டை கிளப்பியிருக்கிறது.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

அ.தி.மு.க-வில் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வெளிப்படையாகவே எடப்பாடி பழனிசாமியை ஆதரித்துப் பேசி வர, செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ், தேனி மாவட்டச் செயலாளர் சையதுகான் உள்ளிட்டவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்துப் பேசி வருகிறார்கள்.

தென் மாவட்ட எம்.எல்.ஏ-க்களும், மாவட்டச் செயலாளர்களும்... குறிப்பாக முக்குலத்தோர் சமூக எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் தனக்கு ஆதரவளிப்பார்கள் என்று ஓ.பி.எஸ் நம்பிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், திண்டுக்கல் சீனிவாசன் எடப்பாடி ஆதரவு நிலை எடுத்திருக்கிறார்.

செல்லூர் ராஜூ - ராஜன் செல்லப்பா
செல்லூர் ராஜூ - ராஜன் செல்லப்பா

இது ஒரு பக்கமென்றால், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வும் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான ராஜன் செல்லப்பா, மாவட்ட நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் யாருக்கு ஆதரவு என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பே ஒற்றைத் தலைமை கோரிக்கையை வைத்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியவர் என்பதால், ராஜன் செல்லப்பாவின் நகர்வுகளை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக கவனிக்கிறார்கள்.

அதே போல எடப்பாடி, ஓ.பி.எஸ், சசிகலா என எல்லா பக்கமும் ஆதரவாக நடந்துகொள்ளும் செல்லூர் ராஜூவும், தான் யார் பக்கம் என்பதை இன்னும் வெளிப்படையாகக் கூறவில்லை.

இந்த நிலையில்தான், இன்று மதியம் மதுரையிலிருக்கும் செல்லூர் ராஜூ அலுவலகத்துக்கு திடீர் விசிட்டடித்தார் ராஜன் செல்லப்பா. அலுவலகம் வந்தவர், செல்லூர் ராஜூவுடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்தார். அப்போது கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சிலர் மட்டும் வெளியில் இருந்தனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ
ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ

தகவல் கேள்விப்பட்டு நாம் அங்கு செல்ல ஆலோசனை முடிந்திருந்தது. அங்கிருந்து கிளம்பிய ராஜன் செல்லப்பாவிடம், சந்திப்புக்கான காரணம் பற்றி கேட்டோம். ``ஒரு விஷயமும் இல்லை. சாதாரண சந்திப்புதான்" என்றார்.

செல்லூர் ராஜூவிடம் கேட்டபோது, ``சாதாரண சந்திப்புதான். வேற எந்த காரணமுமில்லை. எதையாவது எழுதி விடாதீர்கள். ஒற்றைத் தலைமை பிரச்னையில் கட்சியினர் பெரும்பாலோர் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வோம். கட்சிக்கு உறுதியான தலைவர் தேவை என்பதுதான் எங்கள் விருப்பம்" என்றார்.

இந்த நிலையில், மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்தாமல் இருக்கிறார்.