``நான் கார்ப்பரேட்டுக்கு எதிரானவன் அல்ல, ஆனால்..." - நடைப்பயணத்தில் ராகுல் காந்தி சொல்லவருவது என்ன?!

``இரண்டு, மூன்று பெரும் பணக்காரர்கள் கையில் நாடு இருக்கிறது. உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரர் நம் நாட்டுக்கு வந்துவிட்டார். இது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது" என்கிறார் ராகுல் காந்தி.

Published:Updated:
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
0Comments
Share

கன்னியாகுமரியிலிருந்து `பாரத் ஜோடோ யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி, மூன்றாவது நாளான இன்று புலியூர்குறிச்சி பகுதியில் மதியம் நடைப்பயணத்தை நிறைவுசெய்தார். மதிய உணவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார். ராகுல் காந்தி பேசுகையில், ``அனைவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்து உண்டு. அதுபோல பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கும் ஒரு கருத்து உண்டு. அவர்களின் கருத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.

இந்தியாவில் அடிமட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளவும். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களைச் சரிசெய்யவுமே இந்த நடைப்பயணம் மேற்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி பாத யாத்திரையை நடத்த முடிவெடுத்தது. நான் அடிப்படைத் தொண்டனாக பாதயாத்திரையில் பங்கேற்று நடக்கிறேன். நீங்கள்தான் என்னை முன்னிலைப்படுத்துகிறீர்கள். நீங்கள் என் தலைமையில் யாத்திரை நடப்பதாக சொல்கிறீர்கள். இது அரசியல் கட்சிகளுக்கு எதிரான பயணம் அல்ல. இது கருத்தியல்ரீதியான போராட்டம். இது சீக்கிரம் முடிவுக்கு வராது. ஆயிரம் ஆண்டுகளாக கருத்தியல் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி
செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி

திறந்த மனதுடன் பன்மைத்தன்மையை ஆதரிப்பது என்பது ஒரு கருத்தியல். பன்முகத்தன்மைக்கு எதிராகப் பிடிவாதமாக ஒற்றைத்தன்மையுடன் செயல்படுவது மற்றொரு கருத்தியல். இந்த இரண்டு கருத்தியலுக்கும் இடையே மோதல் இருக்கிறது. இந்தக் கருத்தியல் போர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது தொடரும். இந்தியாவின் கட்டமைப்பை அவர்கள் சீர்குலைக்கிறார்கள். கட்டமைப்பை சீர்குலைப்பவர்களுக்கும், காப்பாற்ற நினைப்பவர்களுக்குமான போராட்டம் இது.

இரண்டாம் கட்ட தலைவர்கள் தலைமைக்கு எதிராக இருக்கிறார்களே என நீங்கள் கேட்கிறீர்கள். பா.ஜ.க-வின் வழிமுறை உங்களுக்குத் தெரியும். பா.ஜ.க அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களையும் வைத்து பிரஷர் கொடுக்கிறார்கள். சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பா.ஜ.க தனது கட்டுப்பாட்டில் வைத்து இயக்குகிறது. அந்த அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாத இரண்டாம்கட்ட தலைவர்களை நான் எதுவும் செய்ய முடியாது.

அவர்கள் பா.ஜ.க-வுடன் போராடுவதைவிட அவர்களுக்கு நண்பர்களாக இருந்துவிடலாம் என முடிவெடுக்கிறார்கள். போராடுவதற்கு பதில் அவர்களுடன் சேர்ந்துவிடுகிறார்கள். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்காகவும், பன்முகத்தன்மைக்காகவும் போராடுவது எனது குணம். அதனால்தான் நான் போராடுகிறேன். அரசியல் போராட்டம் அல்ல. இது கடினமான போராட்டம். மீடியாவைக்கூட விட்டுவைக்கவில்லை. இந்த யாத்திரைக்கு அரசியல் ஒற்றுமை அவசியம்தான். மக்களை இணைப்பதுதான் இந்தப் பயணத்தின் நோக்கம். மக்களின் கருத்தைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிதான் இது. இந்தியாவின் அனைத்து நிறுவனங்களும் மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டுவிட்டன என்பதை மக்களுக்கு தெரிவிக்கவே இந்தப் பயணம்.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

நேற்று ஒரு மாணவியிடம் உரையாடும்போது, இந்தியா என்றால் என்ன என கேட்டதற்கு, 'மக்கள் நல்லிணக்கத்தோடு வாழுவதுதான் பாரதம்' எனச் சொன்னார் அந்த மாணவி. ஆனால் இந்தியாவில் பிரிவினை இருக்கிறது. மாநிலங்கள், மதம் எனப் பல பிரிவினைகள் இருக்கின்றன. வேலைவாய்பின்மை, விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளும் இருக்கின்றன. இரண்டு மூன்று பெரும் பணக்காரர்கள் கையில் நாடு இருக்கிறது. உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரர் நம் நாட்டுக்கு வந்துவிட்டார். இது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. இந்தியாவில் மக்களுக்கு இடையேயான தொடர்பு அற்றுவிட்டது. பாரதம் என்ற சித்தாந்தத்தைத்தான் மக்கள் விரும்புகின்றனர். எனக்கு ஒரு சித்தாந்தம் இருக்கிறது. நான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவேனா என நீங்கள் கேட்கிறீர்கள். அதற்கான பதிலுக்கு தலைவர் தேர்தல் வரை காத்திருங்கள்.

இது தொடர்பாக என்னிடம் எந்தக் குழப்பமும் இல்லை. இந்த யாத்திரை மக்கள் ஆதரவுடன் நடக்கிறது. யாத்திரை முடியும்போது இன்னும் என் புரிதல் விசாலமாகும். நான் கார்ப்பரேட்டுக்கு எதிரானவன் அல்ல. கார்பரேட்டை வைத்து சிறு, குறு நிறுவனங்களை நசுக்கும் மோசமான கொள்ளைகளைத்தான் நான் எதிர்க்கிறேன். தென் மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் தேர்தல் வரவிருப்பதைத் திட்டமிட்டு நாங்கள் இந்தப் பாத யாத்திரை நடத்தவில்லை. தேர்தல் பிரசாரம் எனத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். எல்லா மாநிலங்களிலும் சமமாக நடக்கிறோம்" என்றார்.