Chess Olympiad: இந்தியாவுக்காக ஒலிம்பியாடில் முதன் முதலாகப் பதக்கம் வென்றவர்; இது ரஃபிக் கானின் கதை!

1980-ம் ஆண்டு மால்டாவில் நடந்த செஸ் ஒலிம்பியாட் ரஃபிக்கின் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒன்றாக அமைந்தது. அந்தத் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று ஒலிம்பியாட் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

Published:Updated:
ரஃபிக் கான் - Rafiq Khan
ரஃபிக் கான் - Rafiq Khan
0Comments
Share
செஸ் என்பது தனியொருவர் விளையாடும் விளையாட்டு. ஆனால், ஒலிம்பியாட் போன்ற சில தொடர்களில் வீரர்கள் அணியாகப் பங்கேற்கும் நடைமுறை உண்டு. ஒலிம்பியாட் போட்டிகள் சிறப்பாகச் செயல்படும் நாட்டை அங்கீகரிக்க நடத்தப்படும் ஒரு தொடர். கிரிக்கெட், கால்பந்து உலகக்கோப்பைகளில் தொடர் நாயகன் விருது வழங்கப்படுவதைப்போல ஒலிம்பியாடில் சிறப்பாகச் செயல்படும் வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களால் அங்கீகரிக்கப்படுவது வழக்கம். இந்தியாவிலிருந்து ஒலிம்பியாடில் முதன்முதலாகத் தனிப்பட்ட முறையில் பதக்கம் வென்றவர் கார்பென்டர் ரஃபிக் கான். 1980-ம் ஆண்டு Valletta நகரில் நடந்த செஸ் ஒலிம்பியாடில் வெள்ளிப் பதக்கம் வென்றார் ரஃபிக்.
ரஃபிக் கான்
ரஃபிக் கான்

1946-ம் ஆண்டு போபால் நகரின் ஏழ்மையான குடும்பம் ஒன்றில் கார்பென்டரின் மகனாகப் பிறந்தார் ரஃபிக் கான். படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் பள்ளிக்கே செல்லாத அவர், தந்தைக்கு உதவியாளராகத் தச்சு வேலையைச் செய்யத் தொடங்கினார். பின்னர் சிறிது ஆண்டுகள் கழித்து முழுமையான கார்பென்டராகி அதையே தன் தொழிலாக்கிக் கொண்டார் ரஃபிக்.

தினமும் வேலை முடித்தபின் டீ கடையில் இளைப்பாற ஒதுங்கும் ரஃபிக், அங்குச் சிலர் செஸ் விளையாடுவதைக் கண்டு செஸ் விளையாட்டை ஆட விரும்பினார். மற்றவர்கள் விளையாடுவதைப் பார்த்து செஸ் விளையாடக் கற்றுக்கொள்ளத் தொடங்கிய ரஃபிக் தினமும் குறைந்தது ஒரு மணிநேரம் செஸ் விளையாடவேண்டும் என்று முடிவெடுத்து தீவிரமாக அதைப் பின்பற்றினார். மேலும் அப்போது அவர் விளையாடியது இந்தியாவின் செஸ் மட்டுமே தவிரச் சர்வதேச விதிகளைக் கொண்ட செஸ் அல்ல! (இந்தியாவில் விளையாடப்பட்ட செஸ்ஸில் சிப்பாய் ஒரு கட்டம் மட்டுமே தொடக்கத்தில் நகரும். இரண்டு கட்டங்கள் நகராது. மேலும் கடைசி நகர்த்தலில் சிப்பாயை ராணியாக மேம்படுத்தவும் முடியாது.)

ரஃபிக் கான்
ரஃபிக் கான்

சர்வதேச செஸ் முறையை முதல்முறையாக 1975-ம் ஆண்டு மத்தியப் பிரதேச செஸ் சாம்பியன்ஷிப்பில்தான் விளையாடினர் ரஃபிக். யாருமே எதிர்பார்க்காத நிலையில் அந்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். தேசிய A அளவிலான போட்டிகளில் பங்குபெறும் பலர் அந்தத் தொடரில் பங்குபெற்றும் ரஃபிக் வெற்றி வாகை சூடி அனைவரின் கண்களையும் தன் பக்கம் திருப்பினார். அதே ஆண்டு ஜூன் மாதம் பாட்னாவில் நடந்த தேசிய B அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து தேசிய A அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றார். மேலும் 1976ம் ஆண்டு நடைபெற்ற தேசிய B அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் 11 வெற்றிகள் (தொடர்ந்து 9 வெற்றிகள்) பெற்றார். மொத்தம் 13/15 புள்ளிகள் பெற்று ரஃபிக் படைத்த சாதனை இன்றும் முறியடிக்கப்படாத ஒரு சாதனையாகத்தான் இருக்கிறது.

முதன்முதலாக 1976 தேசிய A அளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை ரஃபிக். ஆனால் 1977ம் ஆண்டு கொச்சியில் நடந்த தேசிய A அளவிலான தொடரில் இறுதிப்போட்டியில் டை-பிரேக்கரில் தமிழக சர்வதேச மாஸ்டர் ரவிக்குமாரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இந்திய செஸ் உலகமே இவர் சாம்பியன் ஆனதைக் கண்டு ஆச்சரியப்பட்டது.

செஸ் வாழ்க்கையில் வளர்ந்து கொண்டுபோன ரஃபிக்கால் அதை வைத்து பணம் பெற்று வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளமுடியவில்லை. படிக்கவும் இல்லாத காரணத்தால் அவரால் அரசு வேலையும் பெறமுடியாத சூழ்நிலையில் சிக்கிக்கொண்டார். அப்போதுதான் ரஃபிக் செய்த சாதனைகளை எல்லாம் பட்டியலிட்டும் அரசு, உதவி செய்யாததையும் குறிப்பிட்டு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதப்பட்டது. அது மக்களவை உறுப்பினர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, 1978-ம் ஆண்டு போபாலில் உள்ள BHEL நிறுவனத்தில் ஜார்ஜ் ரஃபிக்கிற்கு வேலை வழங்கினார்.

வேலை கிடைத்த பின் செஸ்ஸில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கிய ரஃபிக்கிற்கு 1980-ம் ஆண்டு மால்டாவில் நடந்த செஸ் ஒலிம்பியாட் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒன்றாக அமைந்தது. அந்தத் தொடரில் ரஃபிக் வெள்ளிப் பதக்கம் வென்று ஒலிம்பியாட் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த வெள்ளி வெறும் பதக்கம் மட்டுமல்ல. இந்திய செஸ் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்து நம் நாட்டைச் சேர்ந்த பல வீரர்களுக்கும் ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. இந்த ஒலிம்பியாட் தொடருக்கு ஓப்பன் பிரிவு அணி பலமானதல்ல என்பதால் அரசு அவர்களுக்கு ஸ்பான்ஸர் வழங்காமல் பெண்கள் பிரிவு அணிக்கு மட்டும் ஸ்பான்ஸர் வழங்கியிருந்தது. இந்த நிலையில் ரஃபிக் வென்ற அந்தப் பதக்கம் அரசுக்கு ஒரு தக்க பதிலடியாக அமைந்தது. மேலும் செஸ் என்ற விளையாட்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரபலம் அடையத் தொடங்கியது.

1980-ம் ஆண்டிற்குப் பிறகும் செஸ் விளையாடுவதைத் தொடர்ந்தார் ரஃபிக் கான். 1982-ல் நடந்த செஸ் ஒலிம்பியாடில் இந்தியாவின் சார்பாக விளையாடிய சிறந்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 1984, 1986, 1982 என மூன்று ஆண்டுகளிலும் பெருமைக்குரிய Piloo Modi தொடரை வென்றார். மேலும் 1990-ம் ஆண்டு நாஷிக்கில் நடந்த P.N. Mehta Memorial தொடர், 1994-ம் ஆண்டு ஆக்ராவில் நடந்த KU Achla Mudgal தொடர் போன்ற பெயர்பெற்ற தொடர்களையும் வென்றார் ரஃபிக். இதுபோன்ற பல சாதனைகளைத் தொடர்ந்து செய்து வந்தார் ரஃபிக் கான்.

ரஃபிக் கான்
ரஃபிக் கான்

மனைவி, 2 மகன்கள் மற்றும் 4 மகள்களுடன் வாழ்ந்து வந்த ரஃபிக் 2019 ஜூலை 19ம் தேதி மாரடைப்பால் மறைந்தார். ரஃபிக்கின் மறைவுக்குப் பின் மத்திய பிரதேஷின் மாநில செஸ் தலைவர் கபில் சக்சேனா, "ஜூலை 18-ம் தேதி நள்ளிரவு வரை போபால் செஸ் கிளப்பில் செஸ் விளையாடிக்கொண்டிருந்தார் ரஃபிக் கான்" என்று கூறினார்.

கார்பென்டராக இருந்த நாள் முதல் மறைவுக்கு முந்தைய நாள் வரை செஸ் விளையாடிய இவரின் இந்த வாழ்க்கை இந்தியாவின் செஸ் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்று. குறிப்பாக அவர் பெற்ற ஒலிம்பியாட் வெள்ளி, உலகளவில் இந்திய செஸ் வீரர்கள் கோலோச்ச ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.