ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு: `அழைக்கப்பட்ட மன்னர்கள் முதல் அழைக்கப்படாத நாடுகளின் தலைவர்கள் வரை!'

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு அரச குடும்பத் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published:Updated:
ராணி எலிசபெத்
ராணி எலிசபெத்
0Comments
Share

இங்கிலாந்து வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக, ஸ்காட்லாந்திலுள்ள பால்மோரல் அரண்மனையில் ஓய்வு எடுத்துவந்த அவர், அண்மையில் தன்னுடைய 96-வது வயதில் காலமானார். பலரும் ராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். எலிசபெத்தின் மறைவுக்கு இங்கிலாந்து மக்கள் துக்கம் அனுசரித்துவருகின்றனர்.

இந்த நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு அரச குடும்பத் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான அரச குடும்பங்கள் தங்கள் வருகையை உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்

அவர்களின் வருகைக்காக வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சுமார் 2,000 பேர் தங்குவதற்கு இடவசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் யாரெல்லாம் கலந்துகொள்ளவார்கள் என்ற பட்டியலும் வெளியாகியிருக்கிறது.

உலக நாடுகளின் மன்னர்கள்!

ஜப்பானின் பேரரசர் நருஹிட்டோ, பேரரசி மசாகோ ஆகியோர் ராணியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்கின்றனர். 2019-ம் ஆண்டு அரியணை ஏறியதற்குப் பிறகு இவர்கள் மேற்கொள்ளப்போகும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது. மேலும், ஜப்பானிய பாரம்பர்யத்தில் பேரரசர் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்வது மிக அரிதான ஒரு நிகழ்வு எனவும் கூறப்படுகிறது.

ஐரோப்பாவின் அரச குடும்பங்களும் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்த சடங்கில் கலந்துகொள்கிறார்கள். அதேபோல டச்சு மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர், ராணி மாக்சிமா, பட்டத்து இளவரசி பீட்ரிக்ஸ், பெல்ஜிய மன்னர் பிலிப், நார்வே மன்னர் ஐந்தாம் ஹெரால்ட், மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் II, ஸ்பெயின் மன்னர் ஃபெலிப் ஆகியோரும் ராணியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

ஜோ பைடன்
ஜோ பைடன்

உலக நாடுகளின் தலைவர்கள்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவர் மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், துருக்கியின் ரெசெப் தையிப் எர்டோகன், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆகியோரும் ராணியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்கிறார்கள். மேலும், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோருடன், இத்தாலியின் ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லா, ஜெர்மனியின் பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர், இஸ்ரேலின் ஐசக் ஹெர்சாக், கொரியாவின் யூன் சுக்-யோல், அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டி ஆகியோரும் இந்தச் சடங்கில் கலந்துக்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா
ட்விட்டர்

காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள்!

56 நாடுகளைக்கொண்ட காமன்வெல்த்திலிருந்து எண்ணற்ற தலைவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீஸ், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஆகியோரும், முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளின் காமன்வெல்த்திலிருந்து தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, பிஜி பிரதமர் பிராங்க் பைனிமராமா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

விளாடிமிர் புதின்
விளாடிமிர் புதின்
Pavel Byrkin

அழைக்கப்படாத தலைவர்கள்!

உக்ரைன்மீது படையெடுத்ததைத் தொடர்ந்து ராணியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்கு விலக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவும் பெலாரஸும் அடங்கும் என்று பிரிட்டிஷ் அரசாங்க வட்டாரம் தெரிவித்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பொருளாதாரத் தடைகள் காரணமாக இங்கிலாந்துக்குப் பயணத் தடையின் கீழ் அவர் பங்கேற்கப்போவதில்லை என்று ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல ராணுவத்தால் ஆட்சி நடத்தப்படும் மியான்மர், வட கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு ராணியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.