Chess Olympiad: `காயின்களுக்குப் பதில் கலைஞர்கள்' - வீடியோ குறித்து பகிரும் கலெக்டர் கவிதா ராமு

பரதநாட்டியம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, மல்யுத்தம், பொய்கால்குதிரைன்னு மொத்தம் 38 கலைஞர்களை இதில் பயன்படுத்தியிருக்கிறோம்.

Published:Updated:
சதுரங்க நடனம்
சதுரங்க நடனம்
0Comments
Share

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் ஜூலை 28-ம் தேதி கோலகலமாகத் தெடாங்கியிருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாகவே, சுவர் விளம்பரங்கள், விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, செஸ் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 8 மணி நேரம் தொடர் மராத்தான் நடன கலை நிகழ்ச்சிப் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சதுரங்க காயின்களுக்குப் பதிலாக, நடனக் கலைஞர்களைக் கொண்டு சதுரங்க நடன காணொளி உருவாக்கப்பட்டிருக்கிறது. இது, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

சதுரங்க நடன காணொளிக் காட்சி
சதுரங்க நடன காணொளிக் காட்சி

பண்டைய காலத்துப் போர் முறைகளை நினைவுகூறும் வகையில் இந்தக் காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமான கருப்பு, வெள்ளைக் கட்டங்களில் இருக்கும் காயின்களுக்குப் பதிலாக நடனக் கலைஞர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். கருப்பு, வெள்ளை ராணிக்கள் ஆக்ரோஷமாக வால் வீசுவது, சிப்பாய்கள் சிலம்பு சுற்றி மோதிக் கொள்வது, மல்யுத்த வீரர்கள் போர் புரியும் காட்சி என நடனக் கலைஞர்களைக் கொண்டு தத்ரூபமாக அமைக்கப்பட்டிருக்கிறது. பின்னணி இசையுடன் பகைவரை காய் நகர்த்தி வீழ்த்தும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

பரத நாட்டியத்தின்மீது ஆர்வம் கொண்ட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரான கவிதா ராமு, 2020-ம் ஆண்டு சீன அதிபர் ஜின் பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின்போது, பிரமாண்ட பரத நாட்டியத்தை ஏற்பாடு செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். அந்த வகையில்தான் அவரின் எண்ணத்தால், தோன்றிய இந்த சதுரங்க நடன வீடியோ பலரின் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இதுகுறித்து கூறும்போது,
"மாவட்டம் சார்பில் தனித்துவமாக ஏதாவது செய்யணுங்கிற யோசனை ஆரம்பத்துல இருந்தே இருந்துச்சு. செஸ் காயின்ஸ்ல ராஜா, ராணி, சிப்பாய் எல்லாம் ஒரு கேரக்டர் தான். வழக்கமா காயின்களை வச்சி வீடியோ பண்றதுக்கு பதிலா, இந்த முறை கலைஞர்களை ஈடுபடுத்தி போர் வடிவில் வீடியோ வெளியிட்டால், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கலாம்னு தோணுச்சு.

கவிதா ராமு ஐ.ஏ.எஸ்
கவிதா ராமு ஐ.ஏ.எஸ்

பரதநாட்டியம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, மல்யுத்தம், பொய்கால்குதிரைன்னு மொத்தம் 38 கலைஞர்களை இதில் பயன்படுத்தியிருக்கிறோம். தென்றல் பிரசாத் தான் என்னுடைய நாட்டிய அரங்கேற்றத்துக்கு எல்லாம், மியூசிக் பண்ணிக் கொடுப்பாரு. அவர் தான் இந்த வீடியோவிற்கும் மியூசிக் பண்ணிக் கொடுத்தாரு. நானே எதிர்பார்க்கலை, ரொம்ப இசையோட, காட்சியும் ரொம்ப நல்லா வந்திருக்கு. பலரும் கூப்பிட்டுப் பாராட்டுறாங்க. தமிழக முதல்வர் வீடியோவை பாராட்டி பதிவிட்டிருக்காங்க. இந்த வகையில் கலைஞர்களும், கலைகளும் மக்கள் மத்தியில் சென்று சேர்வது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு" என்றார்.