"பிரதாப் போத்தன் சார் ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் பேசினார்!"- `பொன்மகள் வந்தாள்' இயக்குநர் உருக்கம்

"ஜோதிகா மேடமுக்கு சாரோட நடிப்பு ரொம்ப பிடிக்கும். என்னோட ஸ்பாட்டுல எட்டு நாள்கள் இருந்தார். அந்த நாள்களில் அவரைச் சுத்தி இருக்கறவங்களைக் கலகலப்பா வச்சுக்கிட்டார்." - இயக்குநர் ஜெ.ஜெ.ஃபெட்ரிக்

Published:Updated:
பொன்மகள் வந்தாள் படத்தில்..
பொன்மகள் வந்தாள் படத்தில்..
0Comments
Share

இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தன் உடல்நிலைக் காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69. மலையாளத்தில் 'ஆரவம்' படத்தின் மூலம் நடிகரானவர், பாலு மகேந்திராவின் 'அழியாத கோலங்கள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து நடிகராக வலம் வந்தவர், 'மீண்டும் ஒரு காதல் கதை'யில் இயக்குநரானார். அந்தப் படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

கமலின் 'வெற்றி விழா', சத்யராஜின் 'ஜீவா', பிரபுவின் 'மை டியர் மார்த்தாண்டன்', நெப்போலியனின் 'சீவலப்பேரி பாண்டி' உட்படப் பல படங்களை இயக்கினார். எல்லைகளைக் கடந்து பல மொழிகளில் பல வருடங்களாக நடித்துவந்தார். முக்கியமாக தமிழ் சினிமாவில் பல துணை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துவந்தார். சமீபத்தில் வெளியான ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' படத்திலும் நடித்திருந்தார்.
பிரதாப் போத்தன்
பிரதாப் போத்தன்

'பொன்மகள் வந்தாள்' இயக்குநர் ஜெ.ஜெ.ஃபெட்ரிக்கிடம் பேசினோம்.

"காலையில செய்தி கேள்விப்பட்டதிலிருந்து மனசு கஷ்டமா இருக்கு. முந்தா நாள்தான் அவர் என்கிட்ட பேசினார். அவர் இப்ப நடிக்கற மலையாளப் படத்தோட ஷூட்டிங் மைசூர்ல நடந்திட்டு இருக்கு. அதை முடிச்சிட்டு வந்திருந்தாகச் சொன்னார். அவர் எப்போ எனக்கு போன் செய்தாலும், முதல் வார்த்தையா 'ஐ லவ் யூ மேன்... எங்கே இருக்கே?'ன்னு கேட்டுட்டுத்தான் பேச ஆரம்பிப்பார். ஸ்கிரிப்ட் ஒர்க்ல இருக்கேன்னு சொன்னேன். 'அதுல நானும் இருக்கேன்ல'ன்னு உரிமையா கேட்டார்.

பிரதாப்
பிரதாப்

சாரோட ஒர்க் பண்ணினது சந்தோஷமான தருணங்கள். ஊட்டியில க்ளைமாக்ஸ் சீன் எடுக்கறப்ப நல்ல குளிர். மலை மேல ஷூட் போச்சு. செயற்கை மழை வேற பெய்ய வச்சு, சீனை எடுத்துட்டு இருந்தோம். அந்த மலை மீது அவர் ராத்திரி நடந்து வர்றப்ப, 'என்னப்பா 17 டிகிரி குளிர்ல வயசானவரை மலை மேல நடக்க வைக்கறே'ன்னு ஜோக்கா சொல்லிக்கிட்டே வந்தார். ஆனா, ஷூட் முடியறவரை இன்முகத்தோட ஒர்க் பண்ணிக் கொடுத்தார். ஜோதிகா மேமுக்கு சாரோட நடிப்பு ரொம்ப பிடிக்கும். என்னோட ஸ்பாட்டுல எட்டு நாள்கள் இருந்தார். அந்த நாள்களில் அவரைச் சுத்தி இருக்கறவங்களைக் கலகலப்பா வச்சுக்கிட்டார். பிரதாப் சாரை ரொம்ப பிடிக்கும். நான் இயக்குற எல்லா படங்களிலும் அவரை நடிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அது ஆசையாகவே போனதுல வருத்தமா இருக்கு" எனக் குரல் உடைந்து பேசினார் ஃபெட்ரிக்.

பிரதாப் போத்தனுக்கு கியா போத்தன் என்கிற மகள் உண்டு. பாடகியான அவர் வெளிநாட்டில் வசிப்பதாகச் சொல்கிறார்கள்.