பாஜக-வில் இணைகிறாரா ஜூனியர் NTR... அமித் ஷாவுடனான சந்திப்பின் பின்னணியில் `RRR' படமா, அரசியலா?

2009 நாடாளுமன்றத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சியை ஆதரித்து முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டார் ஜூனியர் என்.டி.ஆர். அதன் பிறகு, அரசியலைவிட்டு முழுமையாக விலகியே இருந்தவர்மீது, தற்போது மீண்டும் அரசியல் வெளிச்சம் பாயத் தொடங்கியிருக்கிறது.

Published:Updated:
ஜூனியர் NTR
ஜூனியர் NTR
0Comments
Share

ஆந்திரா, தெலங்கானா மட்டுமின்றி நாடு முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது அமித் ஷா - ஜூனியர் என்.டி.ஆர் சந்திப்பு. கடந்த ஞாயிறன்று தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்திலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அமித் ஷாவைச் சந்தித்தார் ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் சுமார் 20 நிமிடங்கள் தனியாகப் பேசிக்கொண்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ` `ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பை வெகுவாக ரசித்த அமித் ஷா, அவரை நேரில் சந்தித்துப் பாராட்டினார்' என்று பா.ஜ.க தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தச் சந்திப்பின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகத் தெரிகிறது.

அமித் ஷா - ஜூனியர் என்.டி.ஆர் சந்திப்பு!

தெலங்கானா மாநிலம், முனுகோட் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக ஆகஸ்ட் 21 அன்று, ஹைதராபாத்துக்கு வந்திருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அன்று இரவு, அமித் ஷாவை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சந்தித்துப் பேசினார் ஜூனியர் என்.டி.ஆர். இந்தச் சந்திப்பு குறித்து அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், `மிகத் திறமையான நடிகரும், தெலுங்கு சினிமாவின் ரத்தினமுமான ஜூனியர் என்.டி.ஆர் உடனான சந்திப்பு நல்லபடியாக அமைந்தது' என்று பதிவிட்டிருந்தார்.

அமித் ஷா  - ஜூனியர் என்.டி.ஆர்
அமித் ஷா - ஜூனியர் என்.டி.ஆர்
ட்விட்டர்

பதிலுக்கு, `உங்களைச் சந்தித்ததும் உரையாடிதும் மகிழ்ச்சியாக இருந்தது. தங்களது கனிவான வார்த்தைகளுக்கு நன்றி' என்று கூறியிருந்தார் ஜூனியர் என்.டி.ஆர். இந்தச் சந்திப்பு குறித்து பா.ஜ.க தரப்பில், ``ராஜமெளலி இயக்கத்தில் வெளியான `ஆர்.ஆர்.ஆர்’ படத்தை அமித் ஷா சமீபத்தில் பார்த்தார். அதில், ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பு அவருக்கு மிகவும் பிடித்துப்போக, அவரை நேரில் அழைத்துப் பாரட்டினார்'' என்று கூறிவருகின்றனர்.

சந்திப்பின் பின்னணி!

``முனுகோட் பிரசாரத்துக்குப் பிறகு ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டிக்கு சென்ற அமித் ஷா, அங்கு ராமோஜி ராவைத் தனியாகச் சந்தித்துப் பேசினார். ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பைப் பாராட்ட வேண்டுமென்றால், அங்கேயே வரச் சொல்லிப் பாராட்டியிருக்கலாம். ஆனால் அமித் ஷா, அவரைத் தனியாக ஹோட்டல் அறையில் வைத்துத்தான் சந்தித்தார். எனவே, ஆர்.ஆர்.ஆரைத் தாண்டி, அங்கு அரசியலும் பேசப்பட்டிருக்கும்'' என்கின்றனர் தெலங்கானாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள். அமித் ஷா, ` `ஆர்.ஆர்.ஆர்’ பார்த்தேன். அதில் ஜூனியர் என்.டி.ஆர் சிறப்பாக நடித்திருந்தார்' என்பதை எங்குமே வெளிப்படையாகப் பதிவுசெய்யவில்லை. அந்தப் படக்குழுவிலுள்ள மற்ற எவரையுமே அமித் ஷா சந்தித்துப் பாராட்டவுமில்லை. எனவே, இது அரசியல் சந்திப்பாக இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்தச் சந்திப்பு குறித்துப் பேசும் தேசிய அரசியல் பார்வையாளர்கள், ``நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்., பா.ஜ.க-வில் சேருவதற்கான வாய்ப்புகளெல்லாம் இல்லை. அதேநேரம், ஆந்திராவில் எதிர்க்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையில் கூட்டணி உண்டாக்குவது குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டிருக்கும்'' என்கிறார்கள். தெலுங்கு தேசம் கட்சியைத் தோற்றுவித்த என்.டி.ராமா ராவின் பேரன்தான் ஜூனியர் என்.டி.ஆர். ராமாராவின் மகளும், ஜூனியர் என்.டி.ஆரின் அத்தையுமான புவனேஷ்வரிதான், தற்போதைய தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி. எனவேதான், இந்தச் சந்திப்பில் அரசியல் பேசப்பட்டிருக்கும் என்பதை அடித்துச் சொல்கிறார்கள் ஆந்திர மாநில அரசியலை உற்றுநோக்குபவர்கள்.

ஜூனியர் என்.டி.ஆர்
ஜூனியர் என்.டி.ஆர்

மேலும், ``சமீபத்தில், `ஆந்திராவில் கூடிய விரைவில் பா.ஜ.க ஆட்சிக்கு வரும்' என்றிருந்தார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர். மாநிலத் தலைவர் சோமு வீர்ராஜுவும், `ஆந்திராவுக்கு நாங்கள் மிகப்பெரிய திட்டத்தை வைத்திருக்கிறோம்' என்று கூறியிருந்தார். அந்தத் திட்டங்களுள் ஒன்றாகத்தான் அமித் ஷா - என்.டி.ஆர் சந்திப்பைப் பார்க்கவேண்டியிருக்கிறது. இந்தச் சந்திப்பின் மூலம் தெலங்கானா, ஆந்திரா என இரண்டு மாநிலங்களிலுள்ள ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களின் மொத்த கவனமும் பா.ஜ.க பக்கம் திரும்பியிருக்கிறது. எதிர்வரும் 2023 தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கும், ஆந்திராவில் கட்சியை வலுப்படுத்துவதற்கும் இந்தச் சந்திப்பு கைகொடுக்குமென பா.ஜ.க நம்புகிறது. அதேநேரத்தில், ஜூனியர் என்.டி.ஆர் நேரடி அரசியலுக்கு வருதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு'' என்கின்றனர் தேசிய அரசியல் பார்வையாளர்கள்.

அரசியலும் ஜூனியர் என்.டி.ஆரும்..!

2009 நாடாளுமன்றத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சியை ஆதரித்து முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டார் ஜூனியர் என்.டி.ஆர். அதன் பிறகு, அரசியலைவிட்டு முழுமையாக விலகியே இருந்தவர்மீது, தற்போது மீண்டும் அரசியல் வெளிச்சம் பாயத் தொடங்கியிருக்கிறது.`ஜூனியர் என்.டி.ஆர் அரசியலுக்கு வருவதற்கு சரியான நேரம் இதுதான்' என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், `ஜூனியர் என்.டி.ஆர் இப்போது தெலுங்கு சினிமாவில் உச்சத்திலிருக்கிறார். ஒரு பான் இந்தியா ஸ்டாராகவும் அறியப்படுகிறார். எனவே, நிச்சயமாக அவர் இப்போது அரசியல் பக்கம் செல்ல மாட்டார்' என்கின்றனர் தெலுங்கு சினிமா ஆர்வலர்கள்.