மகளை அடைத்து வைத்திருப்பதாக தந்தை புகார்... நித்தியானந்தா ஆசிரமத்தில் போலீஸ் அதிரடி சோதனை!

பெங்களூரு இளம்பெண்ணை அடைத்து வைத்திருப்பதாக வந்த புகாரையடுத்து, திருவண்ணாமலையிலுள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

Published:Updated:
நித்தியானந்தா ஆசிரமத்தில் சோதனை நடத்திய போலீஸார்
நித்தியானந்தா ஆசிரமத்தில் சோதனை நடத்திய போலீஸார்
0Comments
Share

கர்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் சாலையோரமிருக்கிறது ஆர்.ஆர்.நகர். இந்த பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பொறியாளர் ஸ்ரீ நாகேஷ் என்பவர் பிரபல சாமியார் நித்தியானந்தாவின் ஆன்மிக சொற்பொழிவால் ஈர்க்கப்பட்டாராம். இதையடுத்து, கர்நாடக மாநிலம் பிடதி பகுதியிலிருக்கும் நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கி சேவை செய்வதற்காக தன் மனைவி மாலா, மகள்கள் வைஷ்ணவி, வருதுனி ஆகியோரை 2017-ம் ஆண்டு அழைத்து சென்றிருக்கிறார். பின்னர், ஆசிரம நடவடிக்கைகள் பிடிக்காமல் போனதால், 2019-ம் ஆண்டு தன் மனைவி, மூத்த மகள் ஆகியோருடன் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார் நாகேஷ். ஆனால், அவரின் இளைய மகள் மட்டும் ஆசிரமத்திலேயே தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அடிக்கடி ஆசிரமத்துக்கு சென்று மகளை தன்னுடன் வருமாறு அவர் அழைத்திருக்கிறார்.

ஆசிரமத்துக்குள் செல்லும் போலீஸார்
ஆசிரமத்துக்குள் செல்லும் போலீஸார்

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மகளைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு முறை பிடதி ஆசிரமத்தை போனில் தொடர்பு கொண்டபோது, வீடியோ காலில் அவரின் மகளை காண்பித்ததாகவும் கூறப்படுகிறது. நாளடைவில் மகளை தொடர்புகொள்ள முடியாமல் போனதால், மகளை மீட்டுத் தரக்கோரி பெங்களூரு காவல்துறையில் புகாரளித்திருக்கிறார். அதற்குள்ளாக, அந்த ஆசிரமத்திலிருந்து நாகேஷின் மகளை வேறு இடத்துக்கு மாற்றியதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை திருவண்ணாமலை ஆசிரமத்தில் மகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த நாகேஷ், நேற்றைய தினம் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில், போலீஸார் நேற்று இரவு நித்தியானந்தா ஆசிரமத்துக்குள் அதிரடியாகப் புகுந்து பார்வையிட்டனர். ஆனால், திருவண்ணாமலை ஆசிரமத்தில் அந்த இளம்பெண் இல்லை. பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும், இந்த ஆசிரமத்தின் சுற்றுச்சுவர் மட்டுமே 20 அடி உயரமிருக்கும். சோதனையின்போது, பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சோதனையால், ஆசிரமப் பகுதியில் நேற்றிரவு பரபரப்பான சூழல் காணப்பட்டது.