ஒரு கப் டீ விலை ரூ.20, ஆனால் அதுக்கு சர்வீஸ் சார்ஜ் ரூ.50; அதிர்ந்து போன பயணி - விளக்கமளித்த ரயில்வே

20 ரூபாய் டீ-க்கு 50 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பயணி, அந்த ரசீதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

Published:Updated:
ஒரு கப் டீ-க்கு ரூ.50 சர்வீஸ் சார்ஜ்
ஒரு கப் டீ-க்கு ரூ.50 சர்வீஸ் சார்ஜ்
0Comments
Share

கடந்த 28-ம் தேதி போபாலிலிருந்து டெல்லிக்கு சதாப்தி ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர், 1 கப் டீ வாங்கியிருக்கிறார். அந்த டீயின் விலை ரூ.20 ஆகும். ஆனால் அதற்கு விதிக்கப்பட்டிருந்த சர்வீஸ் சார்ஜ் ரூ.50 என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆக மொத்தம் ரூ.70 பில் வந்திருக்கிறது. இதைக்கண்ட அந்த நபர் அதிர்ச்சியில் ஆழ்ந்துபோனார். பொதுவாகவே ரயில்களில் பயணம் செய்யும்போது உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள் ஆகியவை விற்கப்படும். பயணிகள் தங்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு வாங்கி அருந்துவார்கள்.

20 ரூபாய் டீ-க்கு 50 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பயணி, அந்த ரசீதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில், ``ரூ. 20 மதிப்புள்ள டீ-க்கு ரூ. 50 ஜி.எஸ்.டி... மொத்தத்தில் ஒரு கப் டீ-ன் மதிப்பு ரூ.70. இது ஒரு அற்புதமான கொள்ளை அல்லவா?" எனப் பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

டீ
டீ

இந்த நிலையில், ரயில்வே அதிகாரிகள் ஒரு கப் டீ-க்கு 70 ரூபாய் வசூலித்ததற்கான காரணம் குறித்து விளக்கமளித்திருக்கின்றனர். ``இந்திய ரயில்வேயால் 2018-ல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ராஜ்தானி அல்லது சதாப்தி போன்ற ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள், முன்கூட்டியே உணவை முன்பதிவு செய்யாமல், பயணத்தின்போது டீ, காபி அல்லது உணவை ஆர்டர் செய்து வாங்கினால் ஒவ்வொரு உணவுக்கும் ரூ.50 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும். அது ஒரு கப் டீ-யாக இருந்தாலும் சரி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒரு கப் டீ-க்கு ரூ.50 சர்வீஸ் சார்ஜ்
ஒரு கப் டீ-க்கு ரூ.50 சர்வீஸ் சார்ஜ்

இதற்கு முன்பு ராஜ்தானி அல்லது சதாப்தி போன்ற ரயில்களில் உணவு சேவைக் கட்டணமாக இருந்தது. ஆனால் பின்னர் அது விருப்ப தேர்வாக மாற்றப்பட்டது. அதாவது, பயணிகள் விரும்பினால், அந்த ரயில்களில் உணவு மற்றும் குளிர்பானங்களை வாங்க விருப்பமில்லை எனத் தெரிவிக்கலாம். அதே சமயம் டிக்கெட்டுக்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும், உணவு சேவைக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை" என அந்தப் பயணிக்கு விளக்கம் தெரிவித்திருக்கிறது .