`அவசரப்பட்டுவிட்டேன்’ - கூட்டணி குறித்து பாரிவேந்தர் மீண்டும் வாய்ஸ்... திமுக நிலைப்பாடு என்ன?

திமுக கூட்டணியின் மீது அதிருப்தியில் இருக்கும் ஐ.ஜே.கே கட்சியின் தலைவர் பாரிவேந்தர், "போகக்கூடாத இடத்துக்கு சென்றிருக்க வேண்டாம் என்று நினைத்து நினைத்து வருந்துகிறேன்" என வெளிப்படையாகவே பேசியிருப்பதுதான் தற்போதைய அரசியல் டாக்

Published:Updated:
பாரிவேந்தர்
பாரிவேந்தர்
0Comments
Share

தமிழ்நாட்டில் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனையின் நிறுவனர் தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து என்ற பாரிவேந்தர். இவர் கடந்த 2010-ம் ஆண்டு இந்திய ஜனநாயக கட்சியை தொடங்கினார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் இறுதி கட்டத்தில் தி.மு.க-வுடன் கூட்டணியில் சேர்ந்து அதே பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.

பாரிவேந்தர் எம்.பி
பாரிவேந்தர் எம்.பி
நா.ராஜமுருகன்

ஆனால், சமீபகாலமாக திமுக மீது அதிருப்தியில் இருக்கும் அவர், மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக மோடியை காந்தியுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். ஆனால், இதுகுறித்து திமுக தலைமை எந்த கருத்தையும், நடவடிக்கையும் எடுக்காமலேயே இருந்து வருகிறது.

இந்நிலையில், திருச்சியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பாரிவேந்தர் பேசிய கருத்துகள் மீண்டும் விவாதமாகி இருக்கிறது. ``தமிழ்நாட்டில் பிஜேபி, மோடி என்றால் பிடிக்கவே பிடிக்காது. அவர்களுடன் சேர்ந்து போட்டியிட்டு, 2 லட்சம் வாக்குகளை பெற்றேன். அதேநேரத்தில் இன்று ஆண்டுக் கொண்டிருக்கிற கட்சி 2.40 லட்சம் வாக்குகள் பெற்றார்கள். நினைத்து பார்கிறேன்.

பாரிவேந்தர். பெரம்பலூர் எம்.பி
பாரிவேந்தர். பெரம்பலூர் எம்.பி

நான் சற்று அவசரப்பட்டு விட்டேன். போகாத இடத்துக்கு சென்றிருக்க வேண்டாம். தனியாக நின்றிருந்தால்கூட நிச்சயம் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருப்பேன். இதை நினைத்து நினைத்து வருந்துகிறேன். எம்.பி பதவி எனக்கு பெருசு கிடையாது. எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம் என்று நினைக்கிறேன்" என்று நொந்துபோன தொனியில் பேசியிருந்தார்.

இதுகுறித்து பாரிவேந்தருக்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்தோம், ``2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைப் போல 2019-ம் ஆண்டிலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கவே பாரிவேந்தர் விரும்பினார். ஆனால், அ.தி.மு.க கூட்டணியில் பாஜக-வுக்கே ஐந்து தொகுதிதான் கிடைத்தது. அதில் ஒன்றை தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை. மேலும், அப்போதைய சூழ்நிலையில், அதிமுக அரசின் மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். ஏற்கனவே பெரம்பலூர் தொகுதியில் தோல்வியை சந்தித்து இருந்ததால், இந்த முறை வெற்றி பெற்ற ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. இதனால், திமுகவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. ஒரு சீட்க்கு திமுக ஒப்புக்கொண்டதால், மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் ஒப்புக் கொண்டு விட்டார். அதன்படி, தேர்தலில் வெற்றியும் பெற்று முதல்முறையாக எம்.பி-யும் ஆனார்.

ஸ்டாலினுடன் பாரிவேந்தர்
ஸ்டாலினுடன் பாரிவேந்தர்

அதன்படி, 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சில இடங்களை திமுகவிடம் கேட்டோம். ஆனால், திமுக அதை மறுத்துவிட்டது. இறுதியாக ரவி பச்சமுத்துக்காவது சீட் கொடுக்கும்படி கேட்டும் எந்த பயனுமில்லை. இதனால், கூட்டணியில் முறிவு ஏற்பட்டு, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்கப்பட்டது. அந்த கூட்டணியில் 40 இடங்கள் கிடைத்தன.

மேலும், பாரிவேந்தரால் முன்புபோல இயங்க முடியவில்லை. இதனால், 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் தன் மகன் ரவி பச்சமுத்து களமிறக்க முடிவு செய்துள்ளார். ஆனால், இதற்கு திமுக நிச்சயம் ஒப்புக் கொள்ளாது.

பச்சமுத்து
பச்சமுத்து

ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் சீட் தர மறுத்ததால், இனி திமுகவுடன் எந்த உறவும் இல்லை என்று பாரிவேந்தர் நிர்வாகிகளிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதேநேரத்தில், பாரிவேந்தரை பா.ஜ.க அணுகி கூட்டணி வைத்துக் கொள்ள முன்வந்தது. ஏற்கனவே கூட்டணியில் இருந்தாலும், மோடி மீதான நேசத்தால், அதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

ரவி பச்சமுத்து
ரவி பச்சமுத்து

அவர்கள் கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் ரவி பச்சமுத்துவுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். அதனால்தான் திமுக எதிர்ப்பை இப்போதே கையில் எடுத்து இருக்கிறார் பாரிவேந்தர்" என்றனர் விரிவாக...

இதுதொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம், ``2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் 2,38,887 பெற்று 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆனால், திமுக கூட்டணியில் 6,83,697 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவபதியை விட 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், தற்போது தனித்து நின்றால் வெற்றி பெற்று இருப்பேன் என்று கூறுவது காமெடியாக இருக்கிறது. தனது இருப்பை காட்டிக் கொள்ள எதாவது பேசி வருகிறார். வேண்டுமென்றால் தாராளமாக ராஜினாமா செய்து தனித்து நிற்கட்டும். இடைத்தேர்தலை சந்திக்க தி.மு.க தயாராக இருக்கிறது" என்கிறர்கள்.