1969 ஜுலை 19-ம் தேதி, இரவு 8.30... வங்கிகளை தேசியமயமாக்கிய இந்திரா காந்தி! #IndependenceDay2022

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன, அதற்கான காரணம் முற்றிலும் வேறாக இருந்தது. சில அரசியல் காரணங்கள் பின்னணியில் இருந்தன. 1969-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி அன்று ரூ.50 கோடிக்குமேல் வைப்புத் தொகையாக வைத்திருந்த 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.

Published:Updated:
இந்திரா காந்தி
இந்திரா காந்தி
0Comments
Share

இந்தியா தனது 75-வது வருட சுதந்திரத் தினத்தைக் கொண்டாடத் தயாராகி வருகிறது. இந்தியாவின் இந்த 75 வருட சுதந்திர காலத்தில், எத்தனையோ பிரதமர்கள் வந்தபோதிலும், அதில் ஒருவர் மட்டுமே பெண். அவர்தான் இந்திரா காந்தி. அவரின் ஆட்சியில் எடுத்த முக்கியமான நடவடிக்கையில் ஒன்றாக இன்றுவரை பேசப்படுவது வங்கி தேசியமயமாக்கல்தான். இந்திரா காந்தி ஏன் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தார், இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவுகள் என்னென்ன என்பது குறித்து கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

ரிசர்வ் பேங்க்
ரிசர்வ் பேங்க்

அதற்குமுன் இந்தியா சுதந்திரமடைவதற்கு முன் இருந்த வங்கிகள் வரலாற்றைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்து விடுவோம். இந்தியாவில் முதல் வங்கியான பேங்க் ஆஃப் இந்துஸ்தான் 1770-ல் தொடங்கப்பட்டது. இந்த வங்கியானது 1832-ம் ஆண்டிலேயே மூடப்பட்டது. நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு 600-க்கும் மேற்பட்ட வங்கிகள் செயல்பட்டு வந்தன.

நம் நாடு சுதந்திரம் அடைவதற்குமுன் வங்கிகளானது தேசியமயமாக்கப்படவில்லையா என்று கேட்டால், இல்லை என்பதே பதில். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு ஜனவரி 1, 1949-ல் இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடைமை ஆக்கப்பட்டது. ஆனால், அது அரசுக்கும் நாட்டுக்கும் ஒரு மத்திய வங்கி வேண்டும் என்கிற அவசியம் கருதி செய்யப்பட்டது.

1955-ம் ஆண்டு இம்பிரியல் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அதுவும் அரசு தேவை கருதியே செய்யப்பட்டது.

எஸ்.பி.ஐ வங்கி
எஸ்.பி.ஐ வங்கி

ஆனால், இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது 1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதற்கான காரணம் முற்றிலும் வேறாக இருந்தது. சில அரசியல் காரணங்கள் பின்னணியில் இருந்தன. 1969-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி அன்று ரூ.50 கோடிக்குமேல் வைப்புத்தொகையாக வைத்திருந்த 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.

அப்போது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பட்டியல் இனி...

1. அலகாபாத் வங்கி.

2. பேங்க் ஆஃப் பரோடா.

3. பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா.

4. கனரா வங்கி.

5. சென்டரல் பேங்க்.

6. இந்தியன் பேங்க்.

7. யூனியன் பேங்க்.

8. தேனா பேங்க்.

9. பஞ்சாப் நேஷனல் பேங்க்.

10. யூகோ பேங்க்.

11. யுனைடெட் பேங்க்.

12. பேங்க் ஆஃப் இந்தியா.

13. சிண்டிகேட் பேங்க்

14. இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

இந்த 14 வங்கிகளையும் இந்திரா காந்தி ஒரே இரவில் தேசியமயமாக்கியதற்கு முக்கியமான காரணம், இந்த வங்கிகளால் மக்களுக்கு அதிகம் நன்மை கிடைக்கவில்லை என்று நினைத்ததால்தான். சில பெரும் முதலாளிகளுக்கே இந்த வங்கிகள் அதிகம் உதவியாக இருக்கின்றன. விவசாயிகளுக்கு இந்த வங்கிகளால் பெரிய நன்மை எதுவும் கிடைக்கவில்லை. வங்கிகளை ஒழுங்குபடுத்தினால்தான் அவற்றால் மக்களுக்கு அதிக நன்மை கிடைக்கும் என இந்திரா காந்தி நினைத்ததால், வங்கி தேசியமயமாக்கல் முடிவை எடுத்தார்.

தவிர, இந்த வங்கிகளில் விதிமுறைகள் அதிகம் இல்லாத காரணத்தால் வங்கிகள் திவாலாவது அடிக்கடி நடக்கு விஷயமாக இருந்தது. உதாரணமாக, 1960-களில் பல வங்கிகள் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. இதனால், சேமிப்பாளர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தங்கள் சேமிப்பை இழக்க நேரிட்டு, வங்கி நடைமுறை மீதான நம்பிக்கையைக் குறைந்ததும். தனியார் வசமிருந்த வணிக வங்கிகள், அரசுத் திட்டமிடலுக்கான சமூக இலக்கை அடைவதற்கான உதவியைச் செய்யத் தவறியதாலும், வங்கியில் தனியாரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டது.

தனியார் வசமிருந்த வங்கிகளை பெரிய முதலாளிகள் தன்வசம் கொண்டிருந்தனர். அவர்கள் வங்கியினை மூலதனம் திரட்டும் ஊடகமாகப் பயன்படுத்தினர். கடன் சலுகைகளும், கடன் உதவிகளும் முதலாளிகளுக்கே பெரிதும் கிடைக்கப் பெற்றது.

வங்கிக் கணக்கு வைத்திருப்போர் முதலீட்டுக்கான பாதுகாப்பை ஏற்படுத்துவதும் வங்கி தேசியமயமாக்கலுக்கான முக்கியமான காரணமாக இருந்தது. தனியார் வசமிருந்த வங்கிகள், லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் மட்டுமே செயல்பட்டதன் காரணமாக நகரத்தில் மட்டுமே முதன்மையாகச் செயல்பட்டது. வங்கிச் சேவைகள் கிராமத்துக்குச் சென்று சேரவில்லை என்பதும் மிகப் பெரிய குறையாக இருந்தது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை

குறு, சிறு மற்றும் குடிசைத் தொழில்களுக்கு முறையான உதவிச் செய்வதற்கு, கந்துவட்டி போன்ற முறையற்ற கடன்சுமையில் மக்கள் சிக்கிக் கொள்வதனை தடுக்கும் நோக்கமும் வங்கி தேசியமயமாக்கல் நடவடிக்கையின் அடிப்படையாக இருந்தது.

அப்போது செயல்பட்டு வந்த அனைத்து வங்கிகளையும் தேசியமயமாக்காமல், ரூ.50 கோடிக்குமேல் வைப்புத் தொகை வைத்திருந்த வங்கிகள் மட்டுமே நாட்டுடைமையாக்கப்பட்டன. 1969-ல் இந்த நடவடிக்கைக்கு சுமார் ரூ.8,740 கோடியை மத்திய அரசு செலவிட்டது. அதிகபட்சமாக சென்ட்ரல் பேங்க் உரிமையாளர்களுக்கு 1,750 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த இரு முக்கியமான வங்கிகளான இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.250 கோடியும், இந்தியன் வங்கிக்கு ரூ.230 கோடியும் வழங்கப்பட்டன.

பிரதமர் இந்திரா காந்தி எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால் அப்போதைய அரசியலில் பல பூகம்பங்கள் வெடித்தன. அப்போது துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சகராகவும் இருந்த மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தன் பதவியை ராஜினாமா செய்தார்.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகுதான் வங்கிச் சேவையானது சாதாரண மக்களுக்கும் கிடைகத் தொடங்கியது. அடுத்த 10 ஆண்டுகள் கழித்து, 1980-க்குப் பிறகுதான் வங்கி தேசியமயமாக்கலால் ஏற்பட்ட பாசிட்டிவ் விளைவுகள் இந்தியப் பொருளாதாரத்தில் தெரிய ஆரம்பித்தன.

இந்திரா காந்தி கொஞ்சம் சர்வாதிகாரத்துடன் இந்த நடவடிக்கை எடுத்தார் என்றாலும், இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், இந்தியாவின் வங்கித்துறை இந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

இந்திரா காந்தி - வாஜ்பாய்
இந்திரா காந்தி - வாஜ்பாய்

1969-ல் எடுக்கப்பட்ட வங்கி தேசியமயமாக்கல் நடவடிக்கை வெற்றி கண்டதைத் தொடர்ந்து, 1980-ல் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்திரா காந்தி, ஏப்ரல் 15-ம் தேதி அன்று மேலும் ஆறு வங்கிகளைத் தேசியமயமாக்கினார். ரூ.200 கோடிக்கு மேல் வைப்புத் தொகை வைத்திருந்த அந்த ஆறு வங்கிகளின் பட்டியல் இதோ...

1. ஆந்திரா பேங்க்.

2. கார்ப்பரேஷன் பேங்க்.

3. நியூ பேங்க் ஆஃப் இந்தியா.

4. ஓரியன்டல் பேங்க் ஆஃப் இந்தியா.

5. பஞ்சாப் - சிந்து பேங்க்.

6. விஜயா பேங்க்.

1970, 80-ம் ஆண்டுகளில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது முக்கியமான நிகழ்வு எனில், 1990-க்குப் பிறகு தனியார் வங்கிகள் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியது வேறு கதை. அதைப் பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் வரிவாகப் பார்ப்போம்.

- மாணவப் பத்திரிக்கையாளர் நவீன்குமார். போ