அந்தக்கால மெட்ராஸ்! #AppExclusive

அந்தக் காலத்து சென்னை எப்படி... வாசகர்கள் பகிர்ந்த சுவாரஸ்ய கதைகள்...!

Published:Updated:
Old Madras!
Old Madras!
0Comments
Share

சென்னை முத்தியால்பேட்டை பவழக்காரத் தெருவில் உள்ள கிருஷ்ணன்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் ஒன்பதாவது நாள் கொடியேற்றப்பட்டு, உற்சவம் தொடங்குமாம்.

முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட இந்தப் பல்லக்கில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பல வண்ண பொம்மைகள் பதிக்கப்பட்டு இருந்ததாம்.

இந்தக் கோயிலுக்கு முகுந்த நாயுடு என்பவரால் 1925-ல் உபயமாகச் செய்து தரப்பட்ட இந்தப் பல்லக்கையும் அதன் உற்சவத்தையும் அவருக்குப் பின் அவருடைய மகன் மோகனரங்க நாயுடு நடத்தி வந்திருக்கிறார். இந்தப் பல்லக்கைத் தூக்க சுமார் 100 ஆட்களுக்குமேல் தேவைப்படுவார்களாம், பகுதிக்கு 20 ஆட்கள் வீதம் தோள் கொடுத்து இந்தப் பல்லக்கைத் தூக்கி விதி உலா வரும்போது, அழகான கல்யாணப் பெண் வீதியில் நடந்து வருவது போலிருக்கும் என்றார் பெரியவர் ஒருவர்.

Old Madras!
Old Madras!

1967-ம் ஆண்டு உற்சவத்தின் போது கோயிலுக்கு வெளியே கண்ணாடிப் பல்லக்கில் சுவாமி உலாவரப் புறப்பட்டபோது, பல்லக்கின் முன்பகுதி சடசடவென்று உடைந்து நொறுங்க. அதோடு கண்ணாடிப் பல்லக்கு உலா வருவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பின் உபயதாரரான மோகனரங்க நாயுடு, கண்ணாடிப் பல்லக்குக்குப் பதிலாக பூக்களால் செய்யப்பட்ட பூப்பல்லக்கில் கிருஷ்ணரை எழுந்தருளச் செய்து பூப்பல்லக்கு உற்சவத்தை வருடா வருடம் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

அவரைச் சந்தித்துப் பேசிய போது, "அந்தக் கண்ணாடிப் பல்லக்கை அப்பவே (67-ல்) பழுதுபார்க்கணும்னுதாங்க நினைச்சேன் அப்போ எதிர்பாராம எனக்கு ஏற்பட்ட பொருளாதாரக் கஷ்டத்தில் தள்ளிப் போயிடுச்சு சொத்து விஷயமா கோர்ட்டுல கேஸ் நடந்துக்கிட்டிருந்தது. இப்போதான் நிலைமை சரியாகி ஓரளவு நிம்மதியாயிருக்கேன். அதனாலேதான் சூட்டோடு சூடாகாரியத்தில் இறங்கினேன். தஞ்சாவூர்லேர்ந்து கண்ணாடி வேலை செய்யறதில் எக்ஸ்பர்ட்டான ஒரு ஆளைக் கூட்டியாந்து, பழுதாகியுள்ள பல்லக்கைக் காண்பிச்சேன். அதைச் சீர்பண்ண கிட்டத்தட்ட ரெண்டு லட்சத்துக்கு மேலே ஆகும்னு சொன்னாங்க பணம் ரெடி பண்ணிட்டிருக்கேன்.

இது வழிவழியா நாங்க எங்க குடும்ப வழக்கமா நடத்தி வர்ற உற்சவம். அதனாலே இந்தப் பல்லக்கைப் பழுது பார்க்கத் தேவைப்படும் பணத்துக்குப் பொதுமக்கள்கிட்ட போய் நிதி வசூல் செய்யறது எனக்கும் பிடிக்கலே, பகவான் கிருபையாலே கூடிய சீக்கிரம் என் சொந்தச் செலவிலேயே இந்தத் திருப்பணியைச் செய்து முடிச்சிடுவேன்" என்றவர்,"என்னோட மூச்சு நிக்கறதுக்குள்ள, பழுதாகியிருக்கும் கண்ணாடிப் பல்லக்கைச் சீர் செஞ்சு, அதில் கிருஷ்ண பகவானைத் திரும்பவும் உட்கார வெச்சு வீதிஉலா உற்சவத்தை நடத்திப் பார்த்துடனும்னு உறுதியா இருக்கேன்"என்றார் கண்கலங்க!

என் அண்ணன் கல்யாணத்துக்காக 1936-ம் வருடம் நான் சென்னை வந்திருந்தேன். அப்போது எனக்கு இருபது வயது. கல்யாணம் கதீட்ரல் கோயிலிலும், வரவேற்பு 'லஸ்'ஸில் 'கார்னர் ஹவுஸ்' என்று சொல்லப்பட்ட பெரிய பங்களாவிலும் நடந்தன.

அந்த பங்களாவின்முன் பெரிய காலி இடம் இருந்தது. அதில்தான் வரவேற்பு நடந்தது. அந்த பங்களாவின் இருபக்கங்களிலும் சாலைகள் இருந்தன. அவ்வளவு பெரிய பங்களா? இப்போது நான் இங்கே வந்து அந்த வீட்டைப் பார்க்கலாம் என்று போனால், அந்த இடத்தில் கடைகளும் உணவு விடுதிகளும்தான் இருக்கின்றன. எத்தனையோ பேரிடம் விசாரித்தேன். ஒருவருக்கும் தெரியவில்லை. 1938-ல் நடந்த அந்தக் கல்யாணத்துக்கு வந்திருந்த என் சொந்தக்காரருடன் அப்போது பஸ்ஸில் பீச்சுக்குப் போனேன். ஏறும்போது சொந்தக்காரரின் குழந்தையின் செருப்பு கழன்று தெருவில் விழுந்துவிடவும் அந்தக் குழந்தை சத்தம் போட்டு அழுதது. உடனே கண்டக்டர் பஸ்ஸை நிறுத்தி, என்னிடம் செருப்பை எடுத்துக்கொண்டு வரச் சொன்னார். நான் இறங்கி செருப்பை எடுத்து பஸ்ஸில் ஏறிய பிறகுதான் ஊதலை ஊதினார். பஸ் புறப்பட்டது. இப்போது கண்டக்டர் அப்படிச் செய்வாரா? செய்யத்தான் முடியுமா? இறங்கி எடுக்க கூட்டத்தார் விடுவார்களா? - சீத்தா  நமது நிருபர் விசாரித்ததில்.

அந்தக் காலத்தில் சென்னை " மயிலாப்பூர் லஸ்ஸில் ‘கார்னர் ஹவுஸ்' என்று பலராலும் செல்லமாய் அழைக்கப்பட்டு வந்த பங்களா, கர்நாடகத்தைச் சேர்ந்த மாதவராவ் என்பவருக்குச் சொந்தமானது. இந்த பங்களாவுக்கு 'மாதவராவ் பார்க்' என்று இன்னொரு பெயரும் உண்டு! மைசூர் மகாராஜாவிடம் திவானாக வேலைபார்த்த மாதவராவ்,ரிட்டையர்ட் ஆன பிறகு கிடைத்த பணத்தைக் கொண்டு இந்த பங்களாவைக் கட்டியதாகச் சொல்கிறார்கள்.

பங்களாவின் முன் பகுதியில், பெரிய தோட்டம் இருந்ததாம். காலப்போக்கில் துண்டாகப் பிரித்து விற்கப்பட்டு, இன்று அந்தப் பகுதி லாட்ஜுகளும், ஒட்டல்களுமாய் மாறிவிட்டது. சிறிது சிதைந்து போனநிலையில் பங்களா மட்டுமே அப்படியே இருக்கிறது. தற்சமயம் அந்த பங்களாவின் ஒரு பகுதியில் தனியார் அலுவலகம் இயங்கி வருகிறது. இன்னொரு பகுதியில் மாதவராவின் மகள் வசித்து வருகிறார். அவரது மகன்கள், மகள்கள் எல்லாம் பெங்களூரிலேயே நிரந்தரமாக செட்டிலாகிவிட்டார்களாம். பங்களாவின் கீழ்ப்பகுதியில் பெரிய நிலவறை ஒன்று இருக்கிறது. அந்தக் காலத்தில் தட்டு முட்டுச் சாமான்களை எல்லாம் அதில் போட்டு வைப்பார்களாம்.

 அந்தக் காலத்தில் விடியற்காலை ஐந்து மணிக்குள் வீட்டு எருமையையோ, பசுவையோ கொண்டுவத்து கட்டித்தான் பால் கறந்து கொடுப்பார்கள். டிகிரி காபி என்று சொல்லக்கூடிய சுவையாவன காபியை சென்னைவாசிகள் அனுபவித்து வந்தார்கள். கைப் பால் என்று சொன்னால்; சிறிதளவு மட்டும் தண்ணீர் கலந்து (நியாயத்துக்குக் கட்டுப்பட்டு!) ஜோடு தவலையில் கொண்டு வருவார்கள். அது விலை சற்றுக் குறைவாக இருக்கும்.நான் குடியிருந்த வீட்டில் நான்கு குடித்தனங்கள்.

Old Madras!
Old Madras!

இரண்டு பேர் கைப்பால் வாங்குவார்கள். மாடியில் உள்ளவர்கள் பண வசதியானவர்கள் (தற்போதைய வேணுகோபாலின் சம்பந்திகள்). நாங்கள் கீழே குடியிருந்தோம். மாடி வீட்டு மாமி சுமார் ஒரு படி அளவில் இரண்டு வேளையும் கறந்த பால் வாங்குவார். என் வீட்டில் நபர்கள் குறைவாக இருந்ததால் காலை, மாலை இருவேளையும் ஒரு ஆழாக்கு (சுமார் இருநூறு மில்லி) வாங்குவோம், பால்காரரும் ஒரு படி கிராக்கி நிரந்தரமாக இருந்ததால் எங்களுக்கும் ஊற்ற ஆரம்பித்தார்.

இல்லாவிடில் ஆழாக்கு பாலுக்கு மாடு கொண்டு வந்து கட்ட முடியுமா என்ன? எங்கள் வீட்டு பால்காரர் இருக்கிறாரே அவர் ஒரு வஸ்தாது போன்ற தோற்றமுடையவர். புஜத்தில் கறுப்பு நிறத் தாயத்து அணிந்திருப்பார். கழுத்திலும் சிவப்பு நிறத்தில் ஏதோ ஒரு நூல் அணிந்திருப்பார். நல்ல சிவந்த நிறம். யமகிங்கரன் போன்ற மீசை. கட்டுமஸ்தான உடல். கைலிதான் அணிவார்.

முதல் தடவை பார்க்கும் யாரும் சற்று பயம்தான் கொள்வார்கள். ஆனால், பழகிய பின்னர் அவருடைய மென்மையான உள்ளம் தெரியும்.காலையில் மாட்டையும் கன்றுக்குட்டியையும் (பாதி நாள் வைக்கோல் அடைத்துதான்) வாசலில் கொண்டு வந்து கட்டிவிட்டு, "அம்மா... பால்..." என்று ஒரு குரல் கொடுத்தவுடன், நான் விழுந்தடித்துக் கொண்டு வாசலுக்கு ஓடுவேன்.

பளபளவென்று தேய்க்கப்பட்ட பித்தளை ஜோடுதவலையை ஒரு சுழற்றுச் சுழற்றிக் காட்டுவார், தண்ணிர் இல்லையென! மந்திரவாதி போன்று அவர் சுழற்றுவதில் நிச்சயம் ஒரு ஆழாக்குத் தண்ணீராவது பாத்திரத்தில் இருக்கும். ‘சர்..சர்..' என்று பால்காம்பைத் தடவி, அவர் பால் கறக்கும் அழகே அலாதி.

சுமார் பத்து நிமிடங்களுக்குள் நுரை ததும்ப, ஜோடுதவலை பூராவும் பால் நிரம்பிவிடும். மாடி வீட்டு மாமி பெரிய திருச்சூர் வெங்கலம் ஒரு படி கொள்ளளவு வைத்திருப்பார்.

பால்காரர் கைவிரலை ஜோடுதவலையின் வாய்ப் புறத்தில் தடுத்துக் கொண்டு, நுரை கலக்காமல் பாலை அளந்து ஊற்றுவார். கண்ணிமைக்கும் நேரத்தில் பாலுடன் கட்டாயம் நுரையையும் கலந்து ஊற்றி விடுவார். சுமார் அரை ஆழாக்கு லாபம் அவருக்கு. ஆனால், ஒரு வெங்கல தம்ளருடன் நான் நிற்பேன். வாடிக்கையாளரை ஏமாற்றும் அவர், எனக்கு மட்டும் தாராளமாக அந்த தம்ளர் வழிய வழிய பாலை ஊற்றி, "பாப்பா... சாப்பிடும்மா.... இன்னும் வேணுமா தாயி..." என்று வாஞ்சையாகக் கேட்பார். பாறைக்குள்ளும் தண்ணீர் போன்று இளகிய மனம் உள்ளவர் என்றாலும். மெமோரியல் ஹால் தெருவிலுள்ள கள்ளுக்கடையில்தான் அவருக்குப் பாதி நேரம் வாசம்!

Old Madras!
Old Madras!

ஆகவே, நாங்கள் குடியிருந்த பகுதியில் 'வஸ்தாதுக்கு வஸ்தாது’ என்று பெயர் வாங்கியிருந்தார்.அழகான சிறிய குடும்பம்தான் அவருக்கு. கள் குடிக்கப் பணம் பற்றவில்லையோ என்னவோ. அடிக்கடி பாலில் திரிசமன் பண்ண ஆரம்பித்துவிட்டார். பல முறை மாடிவீட்டு மாமி எச்சரிக்கை செய்தார். இருந்தபோதிலும் அவர் செயலைப் பொறுக்காத மாமி, ‘இனி பால் வேண்டாம்' என நிறுத்திவிட்டார். மாமி நிறுத்தியவுடன் வேறு வழியில்லாமல் என் அம்மாவும் நிறுத்த வேண்டியதாயிற்று.

இரண்டு தாள் கழித்து ஒரு மாலை நேரம். நான் பள்ளிப் பாடம் எழுதிக் கொண்டிருத்தேன். திடீரெனப் புயல் போல உள்ளே நுழைந்தார் பால்காரர். நாற்றம் வயிற்றைப் புரட்டியது. கண் கோவைப்பழமாகச் சிவந்திருத்தது. சோதனையாக என் அம்மா அவர் கண்ணில் பட்டுவிடவே, அவருடைய பாஷையில் ஆரம்பித்துவிட்டார்: “ஏண்டி ஆழாக்குக்காரி, நீ கலகம் பண்ணி ஒருபடிக்காரியை விட்டாயா..?" என்று பலவாறாக, என் அம்மாவுக்குக் கண்கலங்க ஆரம்பித்துவிட்டது. "ஐயோ, நான் ஒரு பாவமும் அறியமாட்டேனே. இந்தக் கடன்காரன் என் வயிற்றெரிச்சலக் கொட்டுகிறானே.." என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். சத்தம் கேட்டு மாடிவீட்டு மாமி கீழே இறங்கியவுடன், தடாலென்று பால்காரர் அவர் காலில் விழுத்து “அம்மா, நீ மகாலட்சுமி (நிச்சயமாக அந்த மாமி மகாலட்சுமி மாதிரிதான் இருப்பார். நெற்றி நிறைய குங்குமம், வாயில் வெற்றிலை. பளிரிடும் வைரத் தோடுகள், பேசரிகள். இது தவிர, மாமியிடம் ஒரு சுகத்தமான மணமும் வீசும்!). நீ இப்படிச் செய்ய மாட்டாய் தாயே. இந்த ஆழாக்குக்காரி உன்னைக் கலைத்துவிட்டாளே. நீ அவள் பேச்சைக் கேட்டு வாடிக்கையை நிறுத்திவிட்டாயே. உன் காலை விடமாட்டேன் தாயி..." என்று பலவாறாகப் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

மாமிக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. உண்மையில் மாமிதான் வாடிக்கையை நிறுத்தினார். இதற்குள் பால்காரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவரைக் குண்டுக்கட்டாகக் கட்டி இழுத்துச் சென்றனர். அதுதான் தாங்கள் அவரைக் கடைசியாகச் சந்தித்தது.

Old Madras!
Old Madras!

சுமார் இரண்டு நாட்கள் சென்றிருக்கும். பாரத தேவியோ அல்லது சுதேசமித்திரனோ கவனமில்லை. காலைப் பத்திரிகையில் ‘சென்னை ஜி.ஹெச்-சில் ஆர்.எம்.ஒ. படுகொலை' என்று செய்தி வந்தது. சென்னை நகரமே கலங்கிப் போயிருந்தது. அந்தக் கால பிரபலமான கொலை வழக்குகளில் இதுவும் ஒன்று. சுமார் ஒரு வாரம் சென்றிருக்கும். கொலையாளிகளைக் கண்டுபிடித்துக் கைது செய்திருந்தனர்.

அதில் ஒருவராக கோவிந்தப் பிள்ளை. 'அரசு மருத்துவமனை பால் சப்ளை செய்பவர் அப்ரூவராக மாறினார்' என்ற செய்தி கேட்டபோது, எங்களுக்கெல்லாம் ஒரே அதிர்ச்சி. எங்கள் வீட்டுப் பால்காரர்தான் கோவிந்தப் பிள்ளை.

ஐயோ, ஒரு கொலையாளியாகவும் மாறிப் போனாரா? எனக்குத் தினமும் ஓசியில் பால் வழங்கும் நல்ல மனமுள்ளவராயிற்றே என்று வெகுகாலம் ஏங்கிப் போனதென்னவோ உண்மை - பத்மா மணி சென்னை-18

(06.06.1990 தேதியிட்ட ஜுனியர் விகடன் இதழில் இருந்து...)