``தர்மத்தை நம்பினேன்... கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்!'' - ஓபிஎஸ்

``தர்மத்தை நம்பினேன், நீதிமன்றங்களை நம்பினேன், கழகத்தை உயிராக நேசிக்கும் கழக கண்மணிகளை, தொண்டர்களை நம்பினேன்." - ஓபிஎஸ்

Published:Updated:
ஓபிஎஸ்
ஓபிஎஸ்
0Comments
Share

அ.தி.மு.க-வில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அ.தி.மு.க-வில் ஜூன் 23-ம் தேதி இருந்த நிலையே நீடிக்கும். எடப்பாடி பழனிசாமியின் தற்காலிக பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தீர்ப்பு வெளியானதையடுத்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

இந்த நிலையில், இது தொடர்பாக ஓ.பி.எஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``தர்மத்தை நம்பினேன், நீதிமன்றங்களை நம்பினேன், கழகத்தை உயிராக நேசிக்கும் கழக கண்மணிகளை, தொண்டர்களை நம்பினேன். உண்மையும் தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமாற நம்பி... தமிழ்நாட்டு மக்களை நம்பினேன். தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து வளர்த்தெடுத்து, பாதுகாத்து, தங்கள் ஆயுளையே அர்ப்பணித்த இயக்கத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் ஆசைகளை நம்பினேன். இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாக இருக்கிறது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக சட்டத்துக்கு புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொதுமக்களும் குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்பித்திருக்கிறது.

கழக நிறுவன புரட்சித் தலைவர் வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இனி கழகத்தின் ஒற்றுமை நிலை நிறுத்தப்பட்டு அசைக்க முடியாத எஃக்கு கோட்டையாக அ.தி.மு.க வெற்றி நடைபோடும். அ.தி.மு.க-வின் நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித் தலைவி அம்மா என்னும் உணர்வுகொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்து செல்வேன். கழகத்தின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.