நித்தியானந்தா: ``உடல்நிலை மோசம்; உதவி செய்யுங்க..." - இலங்கை அரசுக்குக் கடிதம் மூலம் கோரிக்கையா?!

தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக இலங்கையில் தஞ்சமடைய அந்த நாட்டு அரசுக்கு நித்தியானந்தா தரப்பு கடிதம் எழுதியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
நித்தியானந்தா
நித்தியானந்தா
0Comments
Share

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்தியானந்தா இந்தியாவிலிருந்து தலைமறைவானார். பின்னர், கைலாசா என்ற தனித்தீவு வாங்கி அங்கு குடியேறிவிட்டதாக அவரே அறிவித்தார். அவ்வப்போது, ஆன்லைன் மூலமாகத் தன் பக்தர்களுக்குக் காட்சியளித்து உரையாற்றிவந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவர் உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்துவிட்டதாகக்கூட தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவல் பொய் என்று அவர் தரப்பு கூறிய நிலையில், கடந்த ஜூலை மாதம் ஆன்லைனில் தோன்றி பக்தர்களிடம் உரையாற்றினார்.

நித்தியானந்தா
நித்தியானந்தா

அப்போது பேசிய நித்தியானந்தா, ``தான் குணமடைந்து விட்டதாகவும், தற்போது மறுபிறவி எடுத்து வந்திருப்பதாகவும்" கூறினார். இந்தச் சூழலில், நித்தியானந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும், அவருக்குச் சிகிச்சை அளிக்க உதவும்படி இலங்கை அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலைப் பிரபல ஆங்கில ஊடகம் இலங்கை அரசுத் தரப்பில் உறுதிசெய்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கைலாசா தீவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஆனந்த சுவாமி என்பவர், ஆகஸ்ட் மாதம், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. அந்தக் கடிதத்தில், ``ஸ்ரீ நித்தியானந்தா பரமசிவம் சுவாமிகளின் உடல்நிலை மிகவும் மோசமான இருக்கிறது. தற்போது கைலாசாவில் உள்ள மருத்துவ வசதிகளைக்கொண்டு அவரின் உடலுக்கு என்ன என்பதைக் கண்டுபிடிக்க மருத்துவர்களால் முடியவில்லை. தற்போதைய நிலையில், நித்தியானந்தாவுக்கு அவசர மருத்துவச் சிகிச்சை தேவை. இலங்கை அரசு அவருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும். அவரின் மருத்துவத்துக்கு உதவி செய்வதுடன், அவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும்.

நித்தியானந்தா
நித்தியானந்தா

கைலாசா, இலங்கையுடன் அரசுரீதியான உறவை ஏற்படுத்த விரும்புகிறது. நித்தியானந்தாவின் மருத்துவச் சிகிச்சைக்குத் தேவையான அனைத்துச் செலவுகளையும் கைலாசா அரசே ஏற்றுக்கொள்ளும். அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களையும் கைலாசா அரசு வாங்கிக்கொடுக்கும். அதோடு, லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள அந்த அனைத்து மருத்துவ உபகரணங்களையும் உங்கள் நாட்டு மக்களுக்குக் கொடுத்துவிடுகிறோம். நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் கொடுக்கும் பட்சத்தில் நித்யானந்தா இலங்கையில் முதலீடு செய்வார்" என்று தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையில், நித்தியானந்தாவின் இந்தக் கோரிக்கை தொடர்பாக இலங்கை அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எப்படியாவது இலங்கையின் அனுமதியை வாங்க வேண்டும் என்பதற்கான நகர்வுகளைக் கைலாசா தரப்பு மேற்கொண்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.