மோடி படம்: `நிர்மலா சீதாராமன் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து திகைத்துப்போனேன்' - சாடிய கே.டி.ஆர்

`ரேஷன் கடையில் பிரதமர் மோடி படம் இல்லாதது ஏன்?’ என தெலங்கானா ஐஏஎஸ் அதிகாரியிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ பேசுபொருளாக மாறியிருக்கிறது.

Published:Updated:
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
0Comments
Share

தெலங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், பீர்கூரில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வுசெய்யச் சென்றார். அவருடன் ஐஏஎஸ் அதிகாரி ஜிதேஷ் பாட்டீலும் உடன் சென்றார். அப்போது ஐஏஎஸ் அதிகாரியிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ``ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் அரிசியில், மத்திய அரசின் பங்கு என்ன?” என்று அவரிடம் கேட்டார்.

அதற்கு அவர் தனக்குத் தெரியாது என்று பதிலளித்தார். இதைக் கேட்டு கோபமடைந்த நிர்மலா சீதாராமன், ``நீங்கள் கலெக்டராக இருந்தும், இது குறித்த விவரம்கூட உங்களுக்குத் தெரியாதா... அரை மணி நேரத்தில் இதற்கான பதிலை அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

பிரதமர் மோடியுடன் நிர்மலா சீதாராமன்
பிரதமர் மோடியுடன் நிர்மலா சீதாராமன்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,`` ஏழைகளுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியில் ஒரு கிலோ ரூ.35-க்கு வாங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் வழங்கும் அரசிக்காக மத்திய அரசு ரூ.30 பங்களிப்பு வழங்குகிறது. மாநில அரசோ ரூ.4 வழங்குகிறது. பயனாளர்களிடம் ஒரு ரூபாய் மட்டும்தான் வசூலிக்கப்படுகிறது. ஆனாலும் ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஏன் வைக்கவில்லை... மாலைக்குள் ரேஷன் கடை முன்பு பிரதமர் மோடியின் படத்துடன் பேனர் வைக்க வேண்டும். பேனர் இல்லையென்றால், நான் மீண்டும் இந்த இடத்துக்கு வருவேன்'' என்றார் காட்டமாக.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்தப் பேச்சுக்கு தெலங்கானவைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்வினை ஆற்றிவருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக தெலங்கானா அமைச்சர் ஹரிஷ் ராவ் தெரிவித்திருப்பதாவது, `` நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சரைப்போல பேசவில்லை. அவரின் பேச்சு மிக அபத்தமாக இருக்கிறது'' என்றார்.

மேலும் இது தொடர்பாக கேடிஆர் தனது ட்விட்டர் பதிவில், ``நிர்மலா சீதாராமன் ஐஏஎஸ் அதிகாரியிடம் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து நான் திகைத்துப்போனேன். சில அரசியல்வாதிகள் ஐஏஎஸ் அதிகாரிகளின் உழைப்பை மதிக்காமல் துச்சப்படுத்துவார்கள். ஐஏஎஸ் ஜித்தேஷுக்கு எனது வாழ்த்துகள்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர்பதிவில், ``மோடியின் புகைப்படம் இல்லாதது குறித்து பொது விநியோகத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கலாம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.