டோக்லாம் எல்லையில் புதிய கிராமத்தை உருவாக்கிய சீனா... அதிர்ச்சியூட்டும் `MAXAR' செயற்கைகோள் படங்கள்!

டோக்லாமின் கிழக்கு திசையில் 9 கி.மீ தொலைவில் சீனா ஒரு கிராமத்தை உருவாக்கி, அந்தக் கிராமத்துக்கு `பாங்டா' என்று பெயர் சூட்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Published:Updated:
இந்தியா - சீனா - டோக்லாம்
இந்தியா - சீனா - டோக்லாம்
0Comments
Share

அண்மைக்காலமாக இந்திய எல்லையில் சீனாவின் ஊடுருவல் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக சீனா-இந்தியா இடையே அடிக்கடி மோதல்கள் வெடித்த வண்ணமாக இருந்து வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு பூடான் எல்லையில் அமைந்திருக்கும் டோக்லாம் பகுதியில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே வெடித்த மோதல், சுமார் 73 நாள்கள் வரை நீடித்தது. அந்தப் பகுதியில் சீன ராணுவத்தினர் சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதாகவும் அப்போது தகவல் வெளியானது.

டோக்லாம் அருகே பூடானுக்குச் சொந்தமான பகுதியில் சீன ராணுவம் கிராமங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், சீன ராணுவத்தினர் தற்போது அந்தப் பகுதிக்கு முழுமையாக குடியேறிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. (MAXAR ) மேக்ஸாா் என்ற விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் படம்பிடித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஆங்கில செய்தித் தொலைக்காட்சியில் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக சில தகவல்களும் வெளியாகியிருக்கின்றன. டோக்லாமின் கிழக்கு திசையில் 9 கி.மீ தொலைவில் சீனா ஒரு கிராமத்தை உருவாக்கி, அந்தக் கிராமத்துக்கு `பாங்டா' என்று பெயர் சூட்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

பூடான் எல்லைக்குட்பட்ட `பாங்கடா' என்ற அந்தக் கிராமத்திலிருந்து இந்தியாவின் படைகளை நேரடியாக கண்காணிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக இந்தியா தரப்பில் இதுவரை எந்த தகவலும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.