அக்டோபர் முதல் மின்கட்டணம் உயர்கிறது..! - கருத்துக்கேட்பு கூட்டம் கண்துடைப்பா?!

``மின் கட்டண உயர்வுக்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் புதிய மின்கட்டணம், அடுத்த மாதம் முதல் அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுவருகிறது.” - செந்தில் பாலாஜி

Published:Updated:
மின்கட்டணம்
மின்கட்டணம்
0Comments
Share

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது மின்வாரியம் ரூ.1.59 லட்சம் கோடி கடனில் சிக்கியிருப்பதாகவும், இந்தக் கடனுக்கு ஆண்டுதோறும் ரூ.13 ஆயிரம் கோடி வட்டி மட்டுமே கட்டுவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். எனவே, மின்வாரியத்துக்கான கடனைச் சரிசெய்ய மின்கட்டணத்தை உயர்த்த முடிவுசெய்யப்பட்டது. அந்தவகையில், தமிழ்நாடு மின் வாரியம், மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தித் தரக் கோரிய மனுக்களை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஜூலை 18-ம் தேதி சமர்ப்பித்தது.

கருத்துக்கேட்பு கூட்டம்
கருத்துக்கேட்பு கூட்டம்

அதன்படி, மின்கட்டண உயர்வு குறித்து ஆகஸ்ட் 16-ம் தேதி கோவையிலும், 18 -ம் தேதி மதுரையிலும், 22-ம் தேதி சென்னையிலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் பல தொழில்துறை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு மின் கட்டண உயர்வு தொழில்களை முடக்கும் எனக் கருத்துக்கேட்பு கூட்டத்தில் கூறினர்.

இதேபோல், மதுரை, சென்னை நடைபெற்ற கூட்டத்தில் மின்கட்டண உயர்வுக்குப் பொதுமக்கள் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். பலர் மனுக்களாகவும் வழங்கினர். அந்தவகையில், ஆகஸ்ட் 24 -ம் தேதி வரை 4,500-க்கும் மேற்பட்டோர் கருத்துகள் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு மின்வாரியம் சார்பில் பதில்கள் அளிக்கப்பட்டதுடன் அந்த விவரம் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்தச் சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, "தமிழ்நாடு முழுவதுமுள்ள மாநகராட்சி, நகராட்சி, மின் வாரிய அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதிகொண்ட சார்ஜிங் பாயின்ட் அமைப்பதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுவருகிறது.

முதற்கட்டமாக 100 இடங்களில் பார்க்கிங் உள்ளிட்ட நவீன வசதியுடன் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான அளவு மின்கம்பங்கள் தயாராக உள்ளன. 80% வலுவற்ற மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. மின் கட்டண உயர்வுக்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்கவிருக்கிறது. ஒப்புதல் கிடைத்தவுடன் திருத்திய புதிய மின் கட்டணம் அடுத்த மாதம் முதல் அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுவருகிறது" என்றார்.

செல்வராஜ்
செல்வராஜ்

இது குறித்து, ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளர் செல்வராஜ், "மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, கடந்த மாதம் 22-ம் தேதி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். அப்போது, மின்கட்டணத்தை உயர்த்தினால் பொதுமக்களும், சிறு, குறு தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்படும் எனக் கூறினேன். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துப் பேசும்போது பேச நேரம் கொடுக்காமல், `உட்காருங்கள்’ என்றார்கள். அப்போதே தெரியும் கண்டிப்பாக மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்று. ஆணையம் என்பதே வெறும் கண்துடைப்புக்குத்தான். மின்சாரத்துறையில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்காமல் மின்கட்டணத்தை மட்டும் உயர்த்தினால் அரசுக்கு எப்படி வருவாய் அதிகரிக்கும்... இதனால், மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்" என்றார்.

கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினால், அதில் மக்கள் சொல்லும் கருத்துகளைப் பரிசீலிக்க வேண்டும். ஆனால் கூட்டத்தை நடத்திவிட்டு, முன்னர் சொன்னதுபோலவே கட்டணத்தை உயர்த்தினால், கருத்துக்கேட்பு கூட்டம் கண்துடைப்பா என்கிற கேள்விதான் எழுகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் சொன்ன கருத்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டனவா என்பது கட்டண உயர்வு விவரங்கள் வெளியாகும்போது தெரிந்துவிடும்.