நரசிம்ம ராவ் + மன்மோகன் சிங் கூட்டணி: இந்தியா மறுஜென்மம் எடுத்த 1991... #IndependenceDay2022

இன்றைக்கு இந்திய உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக இருப்பதற்கு முக்கியமான காரணம், அந்த ஆண்டில் நடந்த சில முக்கியமான விஷயங்கள். 1991-க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு 1990-க்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது என்று தெரியாது. அதைச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.

Published:Updated:
நரசிம்ம ராவ்,  மன்மோகன் சிங்
நரசிம்ம ராவ், மன்மோகன் சிங்
0Comments
Share

வளர்ச்சிக்கான ஆரம்பம்

75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட இருக்கும் நம் நாடு கடந்து வந்த வரலாறு என்பது மிகப் பெரியது. பிரிட்டிஷார் இந்தியாவுக்குள் நுழைகிற வரை செழிப்பாக இருந்த இந்தியப் பொருளாதாரம், பிற்பாடு சுணங்கத் தொடங்கியது. சுதந்திரம் பெற்ற பிறகுகூட இந்தியப் பொருளாதாரம் வறுமையில் உழல்வதாகவே இருந்தது.

ஆனால், 1991-க்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் கண்ட மாற்றங்கள் கற்பனைக்கு எட்டாதவையாக இருந்தன. 1991 என்பது இந்தியா மறுஜென்மம் எடுத்த ஆண்டு என்றுகூட கூறலாம். காரணம், இன்றைக்கு இந்திய உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக இருப்பதற்கு முக்கியமான காரணம், அந்த ஆண்டில் நடந்த சில முக்கியமான விஷயங்கள். 1991-க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு 1990-க்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது என்று தெரியாது. அதைச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.

நேரு
நேரு

முதலில் 1991-ல் என்ன நடந்தது என்று பார்த்துவிடுவோம்.

1991 ஜூலை 24-ம் தேதி நிதி அமைச்சர் மன்மோகன் சிங் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அப்போது, ``குறிப்பிட்ட மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டால் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என்று பிரபல பிரெஞ்ச் எழுத்தாளர் விக்டர் ஹியுகோ சொன்ன கருத்தாக்கத்தைக் குறிப்பிட்டு அறிக்கை தாக்கலை ஆரம்பித்தார். அன்று மன்மோகன் சிங் அறிவித்த அறிவிப்புகள் அதுவரை இருந்த இந்தியாவின் போக்கைத் தலைகீழாக மாற்றியது.

இன்று உலகில் எந்த மூலையில் ஒரு பொருள் அறிமுகமானாலும் அடுத்த நாளே அது இந்தியாவுக்கு நுழைந்துவிடுகிறது. இதற்கு முக்கியமான 1991-ல் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள்தான். இதற்கான ஆரம்ப விதை அன்று போட்டதுதான்.

1990-க்கு முன் இந்தியப் பொருளாதாரம்

1990-க்கு முன் இந்தியப் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கி இருந்தது. உலக நாடுகள் பலவும் 20, 30 ஆண்டுகள் முன்னால் இருந்தன. தொழில்நுட்ப ரீதியிலும் சரி, வாழ்க்கை முறையிலும் சரி, உலக மக்கள் அனுபவித்து வந்த பல வசதிகள் நம் மக்களுக்குக் கிடைக்கவே இல்லை.

இதற்குக் காரணம் வேறு யாரும் அல்ல; நாம்தான். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சோசலிஸ பாணியில் நம் இந்தியப் பொருளாதாரம் செல்ல வேண்டும் என்று விரும்பினார் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு. அவர் அப்படி நினைத்ததில் எந்தத் தவறும் இல்லை. காரணம், அன்றைய நிலையில், உலகப் பொருளாதாரம் சோசலிசம் (அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து), கம்யூனிசம் (ரஷ்ய மற்றும் நேச நாடுகள்) என இரண்டாகப் பிரிந்து கிடந்தது.

இந்தியா |பொருளாதாரம்
இந்தியா |பொருளாதாரம்

முதலாளித்துவத்தின் எதிர்மறை விளைவுகளைப் புரிந்து கொண்ட நேரு, முழுக்க முதலாளித்துவமும், முழுக்க சோசலிசமும் இல்லாமல் இரண்டும் கலந்த கலவைப் பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கினார். பிற்பாடு, இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பன்னாட்டு நிறுவனங்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டன. ஏற்கெனவே மோசமான நிலையில் இருந்த இந்தியப் பொருளாதாரம், இன்னும் மோசமானது. இதனால் சர்வதேச சந்தையில் நமது நாடு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

மருத்துவம், தொழில்நுட்பம், எரிபொருள் என எல்லாவற்றுக்கும் வெளிநாடுகளை மட்டுமே நாம் நம்பியிருக்க வேண்டிய கட்டாயம். குறிப்பாக, கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும். இதற்கு அமெரிக்க டாலரை நாம் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால், 1991-ல் நம்மிடம் போதுமான அளவு அந்நியச் செலாவணிக் கையிருப்பு இல்லை. இதனால் தேவையான பொருள்களை இறக்குமதி செய்ய முடியாமல் நிறுவனங்கள் திணறின. விவசாயமும், அரசுத் துறை நிறுவனங்களும் ஒரு சில தனியார் தொழில் நிறுவனங்களும்தான் அப்போது இந்தியப் பொருளாதாரத்துக்கு ஆதாரமாக இருந்தன.

தாராளமயமாக்கல்

நம் நாட்டின் பொருளாதாரத்தின் போக்கை அப்போதைய நிலையில், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியுடன் போட்டியிட வேண்டும் எனில், என்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து பரிசீலனை வழங்க பிரதமர் நரசிம்மராவ் ஒரு குழுவை நியமித்தார்.

இந்தக் குழுவின் பரிந்துரைப்படி மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டன. அதாவது, தாராளமயமாக்கலின் மூலமே இந்தியா இனி உலக நாடுகளுடன் போட்டி போட முடியும் என்கிற முடிவை அந்தக் குழு பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக்கொண்ட நரசிம்மராவ், மன்மோகன் சிங் கூட்டணி தாராளமயமாக்கல் கொள்கையைப் பின்பற்றி முடிவு செய்து, இந்தியாவின் சந்தை உலக நாடுகளுக்காகத் திறந்துவிட்டது. அதுதான் நாட்டின் வளர்ச்சியை விரிவுபடுத்த காரணமானது.

இந்தியா | தொழில் துறை
இந்தியா | தொழில் துறை

தனியார் நிறுவனங்கள் தொழில் செய்வதற்குமான சூழல் அதுவரை மிகக் கடுமையாக இருந்தது. எல்லாவற்றுக்கும் அரசின் அனுமதி பெற வேண்டும் என்கிற நிலை இருந்தது. இதில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் செய்யவும், முதலீடு செய்யவும் பல அம்சங்கள் கொண்டு வரப்பட்டன. நாட்டின் பாதுகாப்பு சார்ந்த 18 துறைகள் தவிர்த்து, பிற துறைகளில் தனியார் பங்குக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தொழில் செய்வதற்கான சூழலும் மேம்படுத்தப்பட்ட பிறகு இந்தியச் சந்தைகளில் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி பெருகியது. முதலீடுகள் குவிந்தன.

உதாரணமாக, இன்று அனைவரும் பல விதமான ஓ.டி.டி தளங்களில் சினிமாக்களைக் கண்டு களிக்கிறோம். ஆனால், 1990-களில் தூர்தர்ஷன் என்ற ஒரே ஒரு சேனல் மட்டுமே இருந்தது. இன்று தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கை எத்தனை, செய்தி சேனல்களின் எண்ணிக்கை எத்தனை என்று கணக்கிட்டுப் பார்க்கவே முடியவில்லை. கணினியும், இன்டர்நெட்டும் தாராளமயமாக்கலின் காரணமாக இந்தியாவில் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது.

தொழில்துறை வளர்ச்சி

தொழில்நுட்பத்தின் அவசியமும், உற்பத்தியை ஊக்குவிப் பதற்கான திட்டங்களும் அதன் பிறகே இந்தியா கற்றுக் கொண்டது. தொழில்துறை வளர்ச்சி அடைந்ததால், வேலை வாய்ப்புகளும் அதிகரித்தன. தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்களின் கனவுலகமாக மாறியது. வேலைவாய்ப்பும் வருமானமும் அதிகரிக்க ஆரம்பித்தது. மக்களின் `வாங்கும் திறனும்’ கணிசமாக அதிகமானது. இதனால் சேவைத் துறையின் வளர்ச்சியும் வளரத் தொடங்கியது.

1991-க்கு முன்பு இந்தியன் ஏர்லைன்ஸ் என்ற ஒரே ஒரு விமான சேவை நிறுவனம் மட்டுமே இருந்தது. 1991-க்குப் பிறகு தனியாருக்கு விமான சேவைத்துறை திறந்து விடப்பட்ட பிறகு, பல நிறுவனங்கள் பிசினஸை முன்னெடுத்தன. குறைந்த விலையில் விமான சேவையைக் கொடுக்கும் நிறுவனங்களும் உருவெடுத்த பிறகு போட்டி அதிகரித்து யார் வேண்டுமானாலும் விமானத்தில் பயணிக்கலாம் என்ற நிலை உருவானது.

ஜி.டி.பி வளர்ச்சி
ஜி.டி.பி வளர்ச்சி

அதே போல, பொருளாதாரத்தின் முக்கிய முதுகெலும்பாக இருக்கும் வங்கித் துறையும் முக்கியமான மாற்றங்களைக் கண்டது. இந்திராகாந்தி வங்கிகளை எல்லாம் தேசியமய மாக்கினார். 1991-க்குப் பிறகு, வங்கித் துறையில் மீண்டும் தனியார் நிறுவனங்கள் வர ஆரம்பித்தன. வங்கித் துறையின் வளர்ச்சியில் கடன்கள் வழங்குவது பெருகின. இதன்மூலம் சொத்து வாங்குவது அதிகரித்தது. ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக உயர்ந்தது.

இந்தியாவில் 1991-க்கு முன்பு விவசாயம் அதிக வேலைவாய்ப்பைக் கொண்ட துறையாக இருந்தது. 1991-க்குப் பிறகு தொழில்துறையும், கட்டுமானத் துறையும் அதிக வேலைவாய்ப்புகளை வழங்க ஆரம்பித்தன. 2000-க்குப் பிறகு சேவைத் துறை அந்த இடத்தைப் பிடித்தது.

இன்னொரு முக்கியமான துறை தொலைத்தொடர்புத் துறை. 1990-களில் தொலைபேசி இருக்கும் வீடுகள்தான் பணக்கார வீடுகள் என்ற நிலை இருந்தது. 1991-க்குப் பிறகு பல நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் கால்பதிக்க ஆரம்பித்ததும், தொலைத்தொடர்புப் பயன்பாடு பரவலானது. அதன்பிறகு அலைக்கற்றை மூலமாகத் தகவல்தொடர்பு பரிணாமம் அடைந்த பிறகு செல்போன்களின் பயன்பாடு அதிகரித்தது. இன்று பசிக்கு சோறு இருக்கிறதோ, இல்லையோ எல்லோர் கையிலும் செல்போன் இருக்கிறது.

இவ்வாறு போக்குவரத்து, தொழில்நுட்பம், உற்பத்தி, நுகர்வு என எல்லாவற்றிலும் இந்தியா உலக நாடுகளோடு போட்டி போடும் அளவுக்கு மாறியது. தாராளமயமாக்கலுக்குப் பின்பு நாடு கண்ட மாற்றத்தை எண்களில் சொல்ல வேண்டுமெனில், 1991-ல் இந்திய ஜி.டி.பி-யின் மதிப்பு ரூ.5,86,212 கோடியாக இருந்தது. 2016-ல் இது ரூ.1,35,76,086 கோடியாகவும், 2022-ல் ரூ.2,41,53,819 கோடியாகவும் வளர்ச்சி கண்டிருக்கிறது. இன்று 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

வறுமை
வறுமை

தாராளமயமாக்கல் நம் நாட்டில் இவ்வளவு பெரிய வளர்ச்சியைக் கொண்டுவந்திருந்தாலும், இதன் சில பாதகமான விஷயங்கள் நடந்ததை யாராலும் மறுக்க முடியாது. முக்கியமாக, ஏழை, பணக்காரர்களிடம் மிகப் பெரிய இடைவெளியை தாராளமயமாக்கல் உருவானது. கடந்த 30 ஆண்டுகளில் சாதாரண மக்கள் பொருளாதார ரீதியாக அடைந்த முன்னேற்றத்தைவிட பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாக மாறியது அதிகம்.

இது ஒரு சில எதிர்மறையான விளைவுகளைத் தாராளமயமாக்கல் ஏற்படுத்தி இருந்தாலும், பல பாசிட்டிவ் விஷயங்களையே இதனால் உருவாகி இருக்கிறது என்பதே உண்மை!