`எதிரெதிர் அணிகள்... ஆனால் சித்தாந்தம் ஒன்று?’ - குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள், ஒரு பார்வை

``வேட்பாளர்கள் இருவரும் இந்துத்துவ சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு தீவிரமாகச் செயல்பட்டவர்கள்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Published:Updated:
திரௌபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா
திரௌபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா
0Comments
Share

இந்தியாவின் குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களாக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு-வும், அவரை எதிர்த்து போட்டியிட எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். ”வேட்பாளர்கள் இருவரும் இந்துத்துவ சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு தீவிரமாகச் செயல்பட்டவர்கள்” என்கிற அரசியல் பார்வையாளர்கள், “இது போன்ற ஒரு நிலைமையை இந்தியத் துணைக் கண்டம் முன்னெப்போதும் சந்தித்தது இல்லை” என்கிறார்கள்.

திரௌபதி முர்மு ஒடிசா மாநிலத்தில் பழங்குடி (சந்தால்) வகுப்பைச் சார்ந்தவர். அரசு ஊழியராக இருந்து 1997-ல் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் பா.ஜ.க-வில் பயணிக்கத் தொடங்கி, பா.ஜ.க-வின் பட்டியல் பழங்குடி மோர்ச்சா துணைத் தலைவர், ஒடிசா மாநில சட்டப்பேரவை உறுப்பினர், மாநில அமைச்சர் எனத் தொடர்ச்சியாகப் பயணித்து, அதன் காரணமாக மேலிடத்தின் நம்பிக்கையைப் பெற்று 2015-ல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநரானார். இவரின் எளிய தோற்றம், சமூகப் பின்னணி, கட்சியில் உழைப்பு ஆகியவை அசுர வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துவிட்டன.

திரௌபதி முர்மு, மோடி
திரௌபதி முர்மு, மோடி

``இவர் ஆளுநராக இருந்தபோது ஜார்கண்டில் பா.ஜ.க ஆளுங்கட்சியாக இருந்தது. எனவே, அதன் ஒத்துழைப்போடு மத உரிமைச் சட்டம் ( மதமாற்ற சட்டம் ) உயிர்பெற்றது. சில தனியார் நிறுவனங்களின் கனிம வள சுரண்டலுக்கு ஏற்ற வகையில் வன உரிமை நிலம், அரசின் நிலம் ஆகியவை கையகப்படுத்த சோட்டானக்பூர் குத்தகைச் சட்டம், சந்தல் பர்கானா குத்தகைச் சட்டம் ஆகியவற்றில் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு பா.ஜ.க தலைமையிலான அந்த மாநிலத்தின் முந்தைய அரசு முயன்றது. அதற்கு கவர்னாராக இருக்கும்போது துணை போனவர்தான் இந்த திரெளபதி முர்மு. இதனால் பழங்குடிகள், சாமானிய மக்களின் மத மற்றும் நில உரிமைகள் பறிக்கப்பட்டன” என்கிற விமர்சனத்தை முன்வைக்கின்றன எதிர்க்கட்சிகளும், ஜனநாயக சக்திகளும்.

இதற்கு சற்றும் குறைவில்லாத இந்துத்துவ சந்தர்ப்பவாதத்தின் முழு உருவம் யஷ்வந்த் சின்ஹா என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். 1984-ம் ஆண்டு தனது IAS பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜனதா கட்சியின் சார்பாக நேரடி அரசியல் களத்துக்கு வந்தவர், அதன் முக்கியத் தலைவராகவும் உருவெடுத்தார். 1989 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சர் பதவி கிடைக்காத காரணத்தால், அப்போதைய பிரதமர் வி.பி.சிங், சமூகநீதியைக் காக்கும் வகையில் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த எடுத்த முடிவுகளில் உடன்பாடு இல்லாத நிலையில், சந்திரசேகருடன் இணைந்து வி.பி.சிங் ஆட்சியை அகற்றிவிட்டு சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில் (1990 - 1991) நிதியமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார் என்கிற விமர்சனமும் இவர்மீது முன்வைக்கப்படுகிறது.

அதன் பிறகு 1992-ல் அத்வானி தலைமையில் பா.ஜ.க-வில் இணைந்தவர், 1992 பாபர் மசூதி இடிப்பு நடந்தபோது அத்வானியைப் புகழ்ந்தார். 1996-ல் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர், 1998 முதல் 2004 வரையில் வாஜ்பாய் அமைச்சரவை, 1998 முதல் 2002 வரை நிதியமைச்சராக இருந்தார். 2002-ல் நாட்டில் ஏற்பட்ட கலவரம் காரணமாக வெளிநாடுகளிலிருந்து இந்தியாவின் மீது கடும் கண்டனங்கள் எழுந்தன. அதை முறியடிக்க 2002-ல் யஷ்வந்த் சின்ஹா வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதன் மூலம் மோடி மற்றும் பா.ஜ.க கட்சியின் மீது சர்வதேச அளவில் உருவான நெருக்கடியைச் சமரசத்துக்கு இட்டுச் சென்று மோடியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவியதில் இவருக்கான பங்கும் உண்டு.

இதைத் தொடர்ந்து 2004 தேர்தலில் தோல்வி, 2005-ல் பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினரானார். 2009-ல் மக்களவைத் தேர்தலில் வெற்றி, ஆனால் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க முடியாததால் கட்சியின் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். 2012-ல் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க முடிவுக்கு எதிராக மாறி பிரணாப் முகர்ஜியை ஆதரித்து கட்சியின் எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொண்டார்.

அத்வானி, வாஜ்பாய்
அத்வானி, வாஜ்பாய்

நிதின் கட்கரி பா.ஜ.க தலைவரான பிறகு அத்வானி ஓரங்கட்டப்பட்ட நிலையில், அத்வானி ஆதரவாளரான இவரும் ஓரங்கட்டப்பட்டார். 2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க இவருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. இவருக்கு பதில் இவர் மகன் ஜெயந்த் சின்ஹா அதே தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வென்று அமைச்சரானார். தனக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராத காரணத்தால் மோடியின் ஆட்சியையும் கட்சியையும் விமர்சித்துவந்தார் என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் பா.ஜ.க-வினர்.

இதனையடுத்து 2017-ல்தான் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முயன்றார். ஜார்க்கண்ட், ஹாஜாரியாபாக்கில் தடைசெய்யப்பட்ட பகுதியான மஹூடி கிராமத்தில் ராம நவமி ஊர்வலம் செல்வதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டார். கட்சியின் ஆதரவைச் சரிவரப் பெறாததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன் பிறகுதான் 2018-ல் கட்சியிலிருந்து வெளியேறினார்.

“2014-க்கு பிறகு பாஜ.க-வின் தீவிர மதவாத அணுகுமுறைகள், கட்சிக்குள் ஜனநாயக மறுப்பு, மூத்த தலைவர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டது, முதிர்ச்சியற்ற வகையில் தான்தோன்றித்தனமான தலைமையின் செயல்பாடு, தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கட்சிக்குள் இருந்துகொண்டே கண்டித்து, சீர்திருத்த முயன்று தோற்றுப்போனார் யஷ்வந்த் சின்ஹா!” என்கிற அவருடைய ஆதரவாளர்கள் “ஜனநாயகம் சிதைக்கப்படுகிறது. அதைக் காப்பாற்ற வேண்டும்” என வெளிப்படையாகப் பேசியும் எழுதியும் வந்தார்.

LK Advani, MM Joshi, Yashwant Sinha
LK Advani, MM Joshi, Yashwant Sinha

அந்த வகையில் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் என்பதற்காக பா.ஜ.க-விலிருந்து விலகி மம்தா பானர்ஜியின் வேண்டுகோளுக்கு இணங்க திரிணமுல் கட்சியில் இணைந்து துணைத் தலைவராகி பா.ஜ.க-வுக்கு எதிரான அரசியலை மம்தா முன்னெடுக்கத் துணை நின்றார்” என்கிறார்கள்.

மம்தா, யஸ்வந்த் சின்ஹா
மம்தா, யஸ்வந்த் சின்ஹா

“ஆனால், எது எப்படியிருந்தாலும் இருவரது பின்புலங்கள் அனைத்தையும் மறைத்து அல்லது மறந்துவிட்டு யஷ்வந்த் சின்ஹாவை மதச்சார்பின்மை, அமைதி, சமூகநீதியின் தூதுவராக காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் முன்னிறுத்துவது அரசியல் அபத்தம். மதவாத எதிர்ப்பைக் கொள்கையாகக்கொண்ட நபரைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்த முடியாத அளவுக்குத்தான் நாடாளுமன்ற வாதத்தை முதன்மையாக நம்பும் இடதுசாரி கட்சிகளும் வலுவிழந்துள்ளன” என்கிற காட்டமான விமர்சனத்தை முன்வைக்கின்றனர் இடதுசாரிச் சிந்தனையாளர்கள்.