மோடி - பாஜக நிர்வாகிகள் சந்திப்பு... அண்ணாமலைக்கு `அசைன்மென்ட்’ தரப்பட்டதா?!

“அண்ணாமலை - மோடி சந்திப்பு ராஜ்பவனில் நடந்திருப்பதால் கவனம் பெற்றிருக்கிறது.”

Published:Updated:
மோடி, அண்ணாமலை, எல்.முருகன்
மோடி, அண்ணாமலை, எல்.முருகன்
0Comments
Share

பிரதமர் மோடி ஒவ்வொருமுறை தமிழ்நாட்டுக்கு வந்து செல்லும்போதும் அடுத்த ஒரு வாரத்துக்கு அவர் கலந்துகொண்ட நிகழ்வு, அந்த நிகழ்வில் பேசப்பட்ட சொற்கள், கருத்துகள் போன்றவைதான் விவாதப்பொருளாகும். ஆனால், இந்த முறை இரு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் தி.மு.க-வும், பா.ஜ.க-வும் விட்டுக்கொடுத்துச் சென்றதாகவே தெரிகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

மோடி, ஸ்டாலின்
மோடி, ஸ்டாலின்

மேலும், ``மாநில உரிமை, வடவர் ஆதிக்க எதிர்ப்பு போன்ற இடத்தில் தி.மு.க பின்தங்கினால் தி.மு.க-வால் வளர முடியாது. அதேவேளையில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே நல் உறவைப் பாதிப்பதன் மூலம் அரசுக்கும் பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற கட்டாயத்திலும் தி.மு.க இருக்கிறது. இந்த இரண்டுக்கும் இடையில் பேலன்ஸ் செய்து வேகமாகவும் இல்லாமல், மெதுவாகவும் இல்லாமல் மிதமான எதிர்ப்பை மத்திய அரசிடம் கையாண்டு தி.மு.க காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது” என்கிறார்கள்.

இது ஒருபுறம் இருந்தாலும், செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஆளுநர் மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடியுடன், தமிழ்நாடு பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர்கள் ஆலோசனை மேற்கொண்டது கவனம் பெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, எல்.முருகன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்தனர். இவர்களோடு அமர்பிரசாத் ரெட்டி, ஏ.பி.முருகானந்தம், இயக்குநர் பேரரசு, நடிகர் ஆர்.கே.சுரேஷ், இசையமைப்பாளர் தீனா, குஷ்பு, மாநில-மாவட்ட நிர்வாகிகள் மோடியை சந்தித்துள்ளனர்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து பா.ஜ.க வட்டத்தில் விசாரித்தபோது, ``பிரதமர் எப்போதும் தமிழ்நாடு வருகையில் நிர்வாகிகளைச் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். அதில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன... எந்த மாதிரியான வளர்ச்சிகள் நோக்கி செயலாற்றப்போகிறோம் என்பது விவாதிக்கப்படும். அந்த வகையில், `வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து 24 எம்.பி-களாவது பெற வேண்டும். கூட்டணி பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். தீவிரமாக வேலை செய்ய வேண்டும்’ என்று பிரதமர் கூறியிருக்கிறார். இந்தச் சந்திப்பு ராஜ்பவனில் நடந்திருப்பதால் கவனம் பெற்றிருக்கிறது அவ்வளவுதான்” என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, மோடி
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, மோடி

பிரதமர் ஆளுநர் மாளிகைக்கு வந்த நேரத்தில் ராஜஸ்தான், பார்மர் மாவட்டத்தில் நடந்த விமானப்படை விமான விபத்து குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. முதலில் அதில் கவனம் செலுத்திய பிரதமர், அதன் பிறகுதான் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளைச் சந்தித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சிகளையெல்லாம் முடித்துவிட்டு டெல்லிக்குச் செல்வதற்கு முன் ராஜ்பவனில் வில்வ மரம் ஒன்றை நட்டுவைத்துச் சென்றிருக்கிறார் மோடி என்பது ராஜ்பவன் வட்டாரத் தகவல்.