அரசியல்
அலசல்

மிஸ்டர் மியாவ்

உச்ச புகழ் இசைக்காரரை எப்படியாவது தங்கள் பக்கம் கொண்டுவந்துவிடத் துடித்தார்களாம் பிரகாச சேனலும், நடிகர் பெயர்கொண்ட சேனலும்.

Published:Updated:
தேஜு அஸ்வினி
பிரீமியம் ஸ்டோரி
தேஜு அஸ்வினி
Comments
Share

அசுர நடிகர் அக்கட தேசத்துக்குப் போய், சொல்லிக்கொடுக்கும் பாத்திரத்தில் நடிக்கிறார். இரு மொழிகளில் ரெடியாகும் அந்தப் படத்துக்கான சம்பளத்தைத் தயாரிப்புத் தரப்பு கண்ணில் காட்டவே மறுக்கிறதாம். கிட்டத்தட்ட படம் முக்கால்வாசி முடிந்திருக்கும் நிலையில், பேசிய சம்பளத்தில் பாதியளவுகூட பாக்கெட்டுக்கு வரவில்லையாம். ஷூட்டிங் விஷயத்திலும் அநியாயக் குளறுபடி செய்து அசுர நடிகரை ரொம்பவே புலம்பவைத்துவிட்டார்களாம். ‘முழுப் பணமும் வந்தால்தான் பேலன்ஸ் வொர்க்கை முடித்துக் கொடுப்பேன்’ எனக் கறாராகச் சொல்லிக் கிளம்பி வந்துவிட்டாராம் அசுர நடிகர்!

மதுரைக்கார ஃபைனான்ஸியர் நெட்வொர்க்கில் வருடக்கணக்காக இணைந்திருப்பவர் இசைவழி ஹீரோவானவர். வாங்கிய கடனுக்கு வட்டி மேல் வட்டியாகக் கட்டியும், இன்னமும் மதுரைக்காரர் பிடியிலிருந்து அவரால் விடுபட முடியவில்லையாம். சம்பாதிக்கும் பணம் யாவும் கடனை பைசல் பண்ணவே சரியாக இருக்கிறதாம். ‘வேறு யாரிடமாவது குறைந்த வட்டிக்கு வாங்கி அவர் கடனை அடைச்சுடுங்க. அவருடனான தொடர்பு அறுந்தால்தான் சினிமாவில் மேலே வர முடியும்’ என ‘சென்டிமென்ட்’ சொல்லி இசைவழி ஹீரோவை இன்னமும் பயமுறுத்துகிறார்களாம்!

சூப்பர் நடிகர் படத்துக்கு பட்ஜெட் விஷயத்தில் ரொம்பவே கெடுபடி காட்டுகிறதாம் பிரகாச சேனல். கடந்த படத்தின் நஷ்டத்தைச் சொல்லி, சூப்பர் நடிகரின் சம்பளத்தில் கைவைத்த சேனல் நிறுவனம், தயாரிப்பும் கைக்கு அடக்கமாகத்தான் அமைய வேண்டும் என இறுக்கிப் பிடிக்கிறதாம். ஆனால், தன்னிடம் குறைத்த தொகையைப் படத்துக்குள் இறக்கிவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் சூப்பர் நடிகர், ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன் என உச்ச சம்பளம் வாங்குபவர்களையே ஃபிக்ஸ் பண்ணச் சொல்கிறாராம். ஒரு ஃப்ளாப் கொடுத்துவிட்டு இந்தப் படத்துக்கு வந்திருக்கும் இயக்குநரின் நிலைதான் இன்னமும் திண்டாட்டமாக இருக்கிறதாம்.

சைக்கிளிங் நடிகர் மீண்டும் சொந்தத் தயாரிப்பில் கால் வைக்கப்போகிறாராம். இரண்டு படங்கள் க்ளிக்காகி இப்போதுதான் வருமானம் பார்க்கத் தொடங்கியிருக்கும் சைக்கிளிங் நடிகர், கதை விஷயத்தில் மிகுந்த கவனம் காட்டி, தயாரிப்பாளராகவும் சாதிக்க முடியும் என நம்புகிறாராம். ‘நடிப்பை மட்டும் பாருங்கள்…’ என நெருங்கிய நண்பர்கள் சொல்ல, ‘நான் இப்போது முடித்திருக்கும் படத்தின் பிசினஸ் 60 கோடி…’ எனச் சொல்லி மலைக்கவைக்கிறாராம். தான் பிறந்த மண்ணிலிருந்து குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கி, படத் தயாரிப்பில் போடுவதில் உறுதியாக இருக்கிறார் சைக்கிளிங் நடிகர்.

உச்ச புகழ் இசைக்காரரை எப்படியாவது தங்கள் பக்கம் கொண்டுவந்துவிடத் துடித்தார்களாம் பிரகாச சேனலும், நடிகர் பெயர்கொண்ட சேனலும். ஆனால், அவர் மனதை அசைக்கவே முடியவில்லையாம். இரு சேனல்களும் பேசிய தொகையைவிடக் குறைவான தொகையைப் பேசிய சின்ன தலைவியின் சேனலுக்கு ஓகே சொல்லி, நிகழ்ச்சியையும் முடித்துக் கொடுத்திருக்கிறாராம் உச்ச புகழ் இசைக்காரர். ‘எப்போதுமே நல்ல அணுகுமுறைக்குத்தான் நான் மதிப்பு கொடுப்பேன்’ என அதற்கு விளக்கமும் சொல்கிறாராம்.