``இந்து, முஸ்லிம் என இரண்டு மதங்களையுமே மம்தா சீரழிக்கிறார்" - பாஜக விமர்சனம்

``எங்கள் முதல்வர்(மம்தா) ஒரு இந்து பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவர் நமாஸும் செய்கிறார், விரதமும் இருக்கிறார். இந்து, முஸ்லிம் என இரண்டு மதங்களையுமே அவர் சீரழித்து வருகிறார்" - திலீப் கோஷ்

Published:Updated:
பா.ஜ.க-வின் தேசிய துணைத் தலைவரான திலீப் கோஷ்
பா.ஜ.க-வின் தேசிய துணைத் தலைவரான திலீப் கோஷ்
0Comments
Share

நாட்டில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக நடந்துவரும் மதம் தொடர்பான கலவரங்களுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில், பா.ஜ.க-வின் தேசிய துணைத் தலைவரும், எம்.பி-யுமான திலீப் கோஷ், ``இந்து, முஸ்லிம் என இரண்டு மதங்களையுமே மம்தா சீரழித்து வருகிறார்" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்தியா டுடேவின் கான்க்ளேவ் ஈஸ்ட் 2022 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திலீப் கோஷ், ``பிற மதங்களை மதியுங்கள், சொந்த மதத்தைப் பின்பற்றுங்கள் என எங்களுக்கு ஒரு கூற்று உள்ளது. ஆனால், அதற்கு நேர் எதிரானதை நாம் இங்குப் பார்க்கிறோம். எங்கள் முதல்வர்(மம்தா) ஒரு இந்து பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவர் நமாஸும் செய்கிறார், விரதமும் இருக்கிறார். சில சமயங்களில், நிறைய சாப்பிட்டுவிட்டு இப்தார் நிகழ்ச்சிகளுக்கும் செல்வார். இப்படியாக இந்து, முஸ்லிம் என இரண்டு மதங்களையுமே அவர் சீரழித்து வருகிறார்" என மம்தாவை விமர்சித்தார்.

நுபுர் ஷர்மா
நுபுர் ஷர்மா

மேலும் நுபுர் ஷர்மா சர்ச்சை குறித்துப் பேசியபோது, ``நுபுர் ஷர்மாவின் கருத்துக்குப் பிறகு எத்தனை பேர் இறந்தனர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் சுதந்திரத்திற்கு முன்பு இங்கு கலவரம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அப்போது பாஜகவோ, நுபுர் ஷர்மாவோ அங்கு இல்லை. மேலும் இதுபோன்ற வன்முறைக்குப் பின்னல் இருக்கும் சித்தாந்தத்துக்கு எதிராகப் பேச இந்த உலகம் அஞ்சுகிறது. நுபுர் ஷர்மா சொன்னது தவறு என்று நீங்கள் நினைத்தால், வந்து வாதிடுங்கள். காலங்காலமாக ஆயிரக்கணக்கான இந்துக்கள் இங்கு கொல்லப்பட்டுள்ளனர், ஆனாலும் இந்து மதத்தின் மீதான நம்பிக்கையானது, நாட்டிலுள்ள 100 கோடி இந்துக்களிடம் உள்ளது" என திலீப் கோஷ் கூறினார்.