`கர்மா அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்குத் தடை!' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

பணியிட மாற்றத்துக்கு எதிராக காவலர் தாக்கல் செய்த வழக்கில் கர்மா அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்திருக்கிறது.

Published:Updated:
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
0Comments
Share

பணியிட மாற்றத்துக்கு எதிராக காவலர் தாக்கல் செய்த வழக்கில் கர்மா அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள்கொண்ட அமர்வு தடைவிதித்திருக்கிறது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர், ``காவல்துறையில் 2003-ல் இரண்டாம் நிலை காவலராகப் பணியில் சேர்ந்தேன். 2011-ல் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து மருத்துவ விடுப்பில் இருந்தேன். தொடர்ந்து தலைவலி ஏற்பட்டதால் அடிக்கடி விடுப்பு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இது விதிகளைப் பின்பற்றாமல் விடுப்பு எடுத்ததாக துறைரீதியாக ஊதிய குறைப்பு, பணிப் பதிவேட்டில் கறுப்புப் புள்ளி என 13 முறை தண்டனை கொடுக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு

இவற்றை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததில் எனக்கு எதிரான உத்தரவுகளை ரத்துசெய்து சிறிய தண்டனை வழங்க உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். ஆனால், காவல்துறை அதிகாரிகள் அதை அமல்படுத்தவில்லை. இந்த நிலையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்து மதுரை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்" என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

"மனுதாரர் உயரதிகாரிகளை மதிப்பதில்லை. எதிராகச் செயல்பட்டார். அவரின் தவறான செயல்கள் குறித்து ஐ.ஜி-க்கு அறிக்கை அளிக்கப்பட்டது. நிர்வாகக் காரணங்களுக்காக தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்" என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஸ்ரீமதி, ``மனுதாரருக்கு கர்மா கொள்கை அடிப்படையில் இந்த நீதிமன்றம் நிவாரணம் வழங்க முனைகிறது. அதாவது, கர்மா கொள்கைகளில் `சஞ்சித கர்மா' (முழு கர்மா) `பிராரப்த கர்மா' (கர்மாவின் பகுதி) என்று பிரிக்கப்பட்டிருக்கிறது.

மனுதாரர் பல தண்டனைகளை அனுபவித்துவிட்டார். அவருக்கு `பிராரப்த கர்மா' (கர்மாவின் பகுதி)-க்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது. அவரை வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்தால் பொருளாதாரரீதியாக மிகவும் பாதிக்கப்படுவார். அதனால் இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்கிறேன். அவருக்குப் போக்குவரத்து பிரிவு காவலராக நியமிக்க ஐ.ஜி-க்கு உத்தரவிடுகிறேன்" என்றார்.

``கர்மா அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவு வழங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, பணியிட மாற்றம் என்பது துறைரீதியான நடவடிக்கை, அதில் இந்தப் பதவியில்... இந்த இடத்துக்கு மாற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்" என காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு

நீதிபதிகள் வேல்முருகன், குமரேஷ் பாபு அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பின் வாதத்தைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், காவலருக்குப் பணியிட மாற்றம் குறித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிப்பதாக உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையும், நீதிமன்ற உத்தரவுகளும் தற்போது விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன.