`அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம்' வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

அர்ச்சகர் பயிற்சியை முடித்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கக் கூடாது என்று அரசுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Published:Updated:
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
0Comments
Share

தமிழகக் கோயில்களில் அர்ச்சர்கர்கள் மற்றும் பூசாரிகள் நியமிப்பது தொடர்பாக 2020 - ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை புதிய விதிகளை வெளியிட்டது. அதன்படி ஆகமப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி பெற்ற, பதினெட்டு வயது முதல் முப்பதைந்து வயதுக்கு உட்பட்ட நபரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதிசைவ சிவாசார்யர்கள் சேவா சங்கம் மற்றும் சில தனிநபர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

கோயில்
கோயில்

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அர்ச்சகர் நியமனம் தொடர்பான இந்த வழக்கு நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என 2021 அக்டோபர் மாதம் தெரிவித்தது. அதன்பின்னர், இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான முதல் அமர்வு விசாரித்தது.

அப்போது எதிர்தரப்பில், கோயில்களுக்குப் பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், தக்கார்கள் மூலம் அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்ட விரோதமானது என்று வாதிட்டனர். அறங்காவலர்கள் மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க முடியும் என்று வாதம் செய்தனர். மேலும் ஆகம விதிகளின் படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து பதில் அளித்த அரசுத் தரப்பு, உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்து, அதன் பிறகே ஒரு வருட பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டதாக பதில் மனு தாக்கல் செய்தது. மேலும் சிவாச்சார்யர்கள் வழக்கில், ஆகம விதிகள் கற்றவர்கள் அர்ச்சகர் ஆகலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளதையும் சுட்டிக் காட்டி வாதிடட்டது.

அர்ச்சகர் நியமனம்
அர்ச்சகர் நியமனம்

இந்நிலையில் இந்த வழக்குக்கான இறுதித் தீர்ப்பு இன்று வெளியானது. இதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் வழக்கில் அரசு வெளியிட்ட விதிகள் செல்லும் என்று உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேவேளை ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஆகம விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.