Live அதிமுக: ``அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது; பதவிவெறியில் நடந்தது பொதுக்குழு அல்ல” - வைத்திலிங்கம்

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சைகள் வெடித்திருக்கும் நிலையில் இன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான செய்திகளின் முழுமையான தொகுப்பு..!

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்
0Comments
Share
Jun 23, 2022 03:33 PM IST

``அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது!” - வைத்திலிங்கம்

அதிமுக பொதுக்குழுk கூட்டம் இன்று பல்வேறு சர்ச்சைகளுடன் நடந்து முடிந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிவருகிறார். அப்போது அவர், ``அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனைத் தேர்வுசெய்தது செல்லாது. தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் பொதுக்குழுவும் ரத்துபோல் ஆகும்.

வைத்திலிங்கம் - செய்தியாளர் சந்திப்பு
வைத்திலிங்கம் - செய்தியாளர் சந்திப்பு

பொதுக்குழுவில் இன்று கத்தியவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் அல்ல. கூலிக்கு அழைத்துவரப்பட்டவர்கள். இன்றைய பொதுக்குழு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும். வரும் ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு நடப்பதற்கு எந்தச் சாத்தியமும் இல்லை. பொதுக்குழுக் கூட்டத்தை ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்தான் ஒன்றாகக் கூட்ட முடியும். பொதுக்குழுவில் பொய்யான கையெழுத்து போட்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்திருக்கின்றனர். பதவிவெறியில் நடந்தது பொதுக்குழு அல்ல; ஓரங்க நாடகம்” என்றார்.

Jun 23, 2022 02:55 PM IST

இபிஎஸ்-ஸுடன் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி சந்திப்பு!

பரபரப்பான சூழலில் தொடங்கிய அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம், சலசலப்புடன் முடிந்திருக்கும் நிலையில், பா.ஜ.க-வின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தற்போது எடப்பாடி பழனிசாமியை அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். இந்தச் சந்திப்பில் எடப்பாடியுடன் அவரின் ஆதரவுத் தலைவர்களும் இருக்கிறார்கள்.

சி.டி.ரவி  - இபிஎஸ்
சி.டி.ரவி - இபிஎஸ்

அ.தி.மு.க-வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசிவிட்டு, சி.டி.ரவி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தையும் சந்தித்துப் பேசவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Jun 23, 2022 12:29 PM IST

`சட்டத்துக்குப் புறம்பான பொதுக்குழு’

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

அதிமுக பொதுக்குழுக் கூட்ட மேடையிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பாதியில் வெளியேறினர். அதைத் தொடர்ந்து வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம், ``சட்டத்துக்குப் புறம்பான முறையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. புதிய பொதுக்குழுத் தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது. ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட்டால்தான் புதிய பொதுக்குழுவுக்கான தேதி செல்லும். அதிமுக-வை அழிவுப்பாதைக்குச் சதிகாரர்கள் கொண்டு செல்கிறார்கள்” என்றார்.

Jun 23, 2022 12:14 PM IST

வெளியேறினார் பன்னீர்செல்வம்! 

அதிமுக-வில் ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த அவைத்தலைவருக்கு கோரிக்கை வைக்கிறோம் எனப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டிருப்பதாக சி.வி.சண்முகம் கடிதம் மூலம் வலியுறுத்தினார். இரட்டைத் தலைமையை இப்போது ரத்துசெய்து ஒரே தலைமையின்கீழ் கொண்டுவருவது பற்றி இங்கு விவாதித்து முடிவுசெய்ய வேண்டும். மேலும் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்துக்கான தேதியையும் இப்போதே முடிவுசெய்ய வேண்டும் என்று கடிதத்தில் இருந்ததைப் பேசியதுடன், அந்தக் கடிதத்தை அவைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேனிடம் வழங்கினார்.

Live அதிமுக: ``அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது; பதவிவெறியில் நடந்தது பொதுக்குழு அல்ல” - வைத்திலிங்கம்

அதைத் தொடர்ந்து பேசிய அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், `தொண்டர்களின் கடிதத்தை அடுத்து, அடுத்த மாதம் அதாவது ஜூலை 11-ல் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்” என அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம், `சட்டத்துக்குப் புறம்பான பொதுக்குழுக் கூட்டம்’ எனக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டு கீழே இறங்கினார். அதைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் கூட்டத்திலிருந்து வெளியேறினார். அரங்கில் இருந்தவர்கள் தொடர்ச்சியாக பன்னீர்செல்வத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தண்ணீர் பாட்டில்களும் வீசப்பட்டன.

Jun 23, 2022 12:02 PM IST

`ஒற்றைத் தலைமை நாயகர்’ , `வருங்காலத் தலைவர்!’

Live அதிமுக: ``அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது; பதவிவெறியில் நடந்தது பொதுக்குழு அல்ல” - வைத்திலிங்கம்

அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் பொதுக்குழுவில் தேர்வுசெய்யப்பட்டார். இதற்கான தீர்மானத்தைக் கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி மேடையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயகுமார் ஆகியோர் வழிமொழிந்தனர். அப்போது ஜெயக்குமார், `இப்போதைய இணை ஒருங்கிணைப்பாளரும், ஒற்றைத் தலைமை நாயகருமான எடப்பாடி’ என்றும், `முன்னாள் முதல்வரும், வருங்காலத் தலைவருமான எடப்பாடி’ என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.

Jun 23, 2022 11:49 AM IST

ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்!

Live அதிமுக: ``அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது; பதவிவெறியில் நடந்தது பொதுக்குழு அல்ல” - வைத்திலிங்கம்

அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் தற்போது தொடங்கியிருக்கிறது. கூட்டத்துக்கு தாமதமாக வந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதலில் மேடை ஏறினார். அவரைத் தொடர்ந்து கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மேடைக்கு வந்தார். அவரை நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். மேடையில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் நடுவில் அவைத்தலைவர் அமர்ந்திருந்தார்.

Live அதிமுக: ``அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது; பதவிவெறியில் நடந்தது பொதுக்குழு அல்ல” - வைத்திலிங்கம்

பொதுக்குழுத் தீர்மானங்களை நிறைவேற்றித் தர வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கைவைத்த நிலையில், அதை வழிமொழிந்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது `அண்ணன் ஓபிஎஸ்’ எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது சி.வி.சண்முகம் திடீரென மைக்கைப் பிடித்து, ``23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிக்கிறது” என்று காட்டமாக அறிவித்தார்.

இந்த நிலையில் பேசிய கே.பி.முனுசாமி, ``பொதுக்குழுவின் 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்படாது. இதைப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரிக்கிறார்கள். ஒற்றைத் தலைமை வந்தால் மட்டுமே அந்த தீர்மானங்கள் நிறைவேறும்” என்றார்.

Jun 23, 2022 11:24 AM IST

கூட்ட அரங்குக்கு வந்த எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது. வாகன நெரிசல் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக வந்த எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு வழங்கிவருகின்றனர். இதற்கிடையே கூட்ட அரங்கில் கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிராகத் தொடர்ந்து கோஷம் எழுப்பப்பட்டுவருகிறது.

Live அதிமுக: ``அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது; பதவிவெறியில் நடந்தது பொதுக்குழு அல்ல” - வைத்திலிங்கம்

மேலும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான ஜே.சி.டி.பிரபாகரன், வைத்திலிங்கம் ஆகியோருக்கு எதிராகவும் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதன் காரணமாக வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் மேடையிலிருந்து கீழே இறங்கும் சூழல் ஏற்பட்டது. இதற்கிடையில் மேடையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, வீரமணி, அன்பழகன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கூடி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.

Jun 23, 2022 10:58 AM IST

அதிமுக கூட்டத்தில் `கோஷம்' அரசியல்!

அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்ட அரங்குக்கு அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அப்போது அரங்கிலிருந்த நிர்வாகிகள், `துரோகி ஓபிஎஸ் வெளியேறு...’ எனக் கூறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், `வேண்டும் வேண்டும் ஒற்றைத் தலைமை வேண்டும்’ என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. இதைத் தொடர்ந்து நிர்வாகிகளை அமைதி காக்க ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்தார். ``உங்கள் பாதங்களைத் தொட்டுக் கேட்டுக்கொள்கிறோம். சற்று அமைதியாக இருங்கள்’’ என்று அவர் கேட்டுக்கொண்டார்.

எனினும், தொடர்ச்சியாக ஓபிஎஸ்-ஸுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டுவருகின்றன. மேலும் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்கு எதிராகவும் பொதுக்குழுவில் கோஷங்கள் எழுப்பப்பட்டுவருகின்றன. `ஸ்டாலினைச் சந்தித்த பன்னீர்செல்வம் மகனுக்குப் பொதுக்குழுவில் வேலை இல்லை’ என்று உறுப்பினர்கள் கோஷம் எழுப்பிவருகின்றனர்.

இதற்கிடையே, `துரோகி பன்னீர்செல்வம், துரோகி வைத்திலிங்கம்’ என அரங்கில் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் மேடையில் இருந்த துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் மேடையிலிருந்து கீழே இறங்கினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Jun 23, 2022 10:37 AM IST

முதலில் வந்த பன்னீர்..!

அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தை வந்தடைந்திருக்கிறார். எனினும், முன்னதாகவே புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்னும் மண்டபத்துக்கு வந்து சேரவில்லை.

காலை 10 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 11 மணியளவில்தான் கூட்டம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே மண்டபத்துக்கு உள்ளே இருக்கும் அதிமுக நிர்வாகிகள், ``வேண்டும் வேண்டும் ஒற்றைத் தலைமை வேண்டும்” என்று கோஷம் எழுப்பிவருகின்றனர். மேலும் பன்னீர்செல்வம் வரும் வேளையில், அவருக்கு எதிராகவும் அரங்கில் கோஷம் எழுப்பட்டது. இதனால் அந்த இடம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

Jun 23, 2022 08:22 AM IST

புறப்பட்ட ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்!

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று காலை 9 மணிக்கு மேல் தொடங்கவிருக்கும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தனது வீட்டிலிருந்து, ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் புறப்பட்டார். புறப்படும் முன்னர் வீட்டில் கோமாதா பூஜைகள் நடத்தப்பட்டன.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தனது வீட்டிலிருந்து பூரண கும்ப மரியாதையுடன் புறப்பட்டார். அவருக்கு சாலையின் இருபுறமும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கூட்டம் நடைபெறும் வானகரம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. கூட்டம் நடக்கும் மண்டபத்துக்கு நிர்வாகிகள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். முறையான அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டுவருகிறார்கள்.

Jun 23, 2022 07:41 AM IST

``இது பின்னடைவு கிடையாது!” - ஜெயக்குமார்

 ஜெயக்குமார்
ஜெயக்குமார்

ஓ.பி.எஸ் தரப்பு பொதுக்குழு தொடர்பாகத் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவுக்குப் பிறகு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறோம். இது அதிமுக-வுக்குப் பின்னடைவு கிடையாது. உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வது குறித்து தலைமை முடிவெடுக்கும். ஒற்றைத் தலைமை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.

Jun 23, 2022 07:33 AM IST

அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் ஏற்பாடுகள் தயார்.... பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் - ஒரு புகைப்படத் தொகுப்பு

Jun 23, 2022 06:25 AM IST

`பொதுக்குழுக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்பார்!’

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை அடுத்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். அதன்படி செயல்படுவோம். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு நீதிபதிகள் எந்தத் தடையும் விதிக்கவில்லை. இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்பார்” என்றார்

Jun 23, 2022 06:25 AM IST

பன்னீர்செல்வம் தரப்பு கொண்டாட்டம்!

பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்தில் நள்ளிரவில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது. விடிய விடிய நடந்த விசாரணைக்குப் பிறகு ``அதிமுக பொதுக்குழுத் கூட்டம் நடத்தத் தடையில்லை’’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் கூடுதலாக, ``பொதுக்குழுவில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றலாம். மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம். ஆனால் எந்த முடிவும் எடுக்கக் கூடாது’’ என்று தெரிவித்தனர். அந்த 23 தீர்மானங்களில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Jun 23, 2022 06:25 AM IST

பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடையில்லை என உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று உத்தரவிட்டார். இதை எடப்பாடி தரப்பினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடிவந்தனர்.

எடப்பாடி - பன்னீர்
எடப்பாடி - பன்னீர்

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நேற்று இரவு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.