அதிமுக தலைமை அலுவலகம்: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாபோல எடப்பாடிக்கும் முழு உருவப்படம்!

அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப்போல எடப்பாடிக்கும் முழு உருப்படம் வைக்கப்படவிருக்கிறது.

Published:Updated:
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி
0Comments
Share

ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அந்தநேரத்தில் பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களோடு, அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு செல்ல முயன்றபோது, அவரின் ஆதரவாளர்களுக்கும், அங்கிருந்த எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறை அரங்கேறியது. இதனால், கட்சி அலுவலகத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் வைத்த சீலை, நீதிமன்றம் சென்று அகற்றி சாவியை எடப்பாடி பெற்றிருந்தாலும், ஆக.20-ம் தேதி வரை அலுவலகம் செல்ல நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

கலவரமான அதிமுக கட்சி அலுவலகம்
கலவரமான அதிமுக கட்சி அலுவலகம்

மேலும், பொதுக்குழு தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால், எடப்பாடியால் அலுவலகத்துக்குச் செல்ல முடியவில்லை. இந்நிலையில்தான், 7-ம் தேதி சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் சேதம் குறித்து அலுவலகத்தில் நேரில் ஆய்வு நடத்தினர். இதைத் தொடர்ந்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடியும், அவர் நியமித்த அமைப்புச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆகியோர் பொறுப்பேற்பதற்காக 8-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, காலை 10:38 மணிக்கு பசுமைவழிச் சாலை இல்லத்திலிருந்து கிளம்பிய அவருக்கு, வழிநெடுக தொண்டர்கள் மலர்தூவி வரவேற்றனர்.

பின்னர், 11:45 மணிக்கு அலுவலகம் வந்த அவர், வளாகத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செய்தார். இதையடுத்து அலுவலகத்தின் உள்ளே செல்லும் முன்பாக வாசலை மூன்றுமுறை தொட்டு வணங்கினார். பின்னர் முதல்தளத்தில் இருக்கும் கூட்டரங்கில் நிர்வாகிகளுடன், இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தலைமை அலுவலகத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள்
தலைமை அலுவலகத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள்

கூட்டரங்கில், அதிமுக-வின் பொதுச்செயலாளருக்கு முழு உருவ புகைப்படம் வைப்பது வழக்கம். அதன்படி, எம்.ஜி.ஆரின் முழு உருவப்படம் இருக்கிறது. அதேபோல, முதன்முறையாக பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றபோது ஜெயலலிதாவின் முழு உருவப்படம் அங்கு வைக்கப்பட்டது. அதேபோல, மற்றொரு ஜெயலலிதா படமும் அங்கு உள்ளது.

புதிதாக வைக்கப்பட்ட எடப்பாடியின் படம்
புதிதாக வைக்கப்பட்ட எடப்பாடியின் படம்

இந்நிலையில், இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடியின் முழு உருவப்படத்தை அவருக்கு நிர்வாகிகள் வழங்கினர். அந்தப் படமும் கூட்டரங்கில் விரைவில் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.