செலவுக்குப் புலம்பும் அமைச்சர்கள் முதல் ஆளுநர் தமிழிசையின் அத்துமீறல் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

தி.மு.க எம்.எல்.ஏ – எம்.பி மோதல்... | விட்டுக்கொடுத்தாரா... தட்டிப் பறித்தாரா?! | அமைச்சரின் ஓப்பன் டாக்... அதிர்ந்த உ.பி-க்கள்! | பா.ஜ.க-வுக்கு உதவும் ஆளுநர்! | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்
0Comments
Share
தி.மு.க முப்பெரும் விழா...
செலவுக்காகப் புலம்பும் அமைச்சர்கள்!

தி.மு.க-வின் முப்பெரும் விழாவை இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, வருகிற 15-ம் தேதி விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மூழ்கியிருக்கிறார்கள் அந்த மாவட்ட அமைச்சர்கள். விழாவுக்கான செலவுக்கு, தலைமையிலிருந்து சல்லிப் பைசாகூட வராது என்றும், ஒட்டுமொத்தச் செலவுகளையும் மாவட்ட அமைச்சர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லிவிட்டார்களாம்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

இதனால், ‘துறையின் பெயரில் வருவாய் இருக்கிறதே தவிர, அதைக் கையில் பார்க்க முடியவில்லை’ என்று மூத்த அமைச்சரும், ‘தமிழ்நாட்டில் தொழில், முதலீடுகள் குவிந்தாலும் ஒரு டெண்டர் விடுவதற்கே உரிமை இல்லாத நிலையில்தான் நான் இருக்கிறேன்’ என்று இளையவரும் மாறி மாறி பஞ்சப்பாட்டு பாடுகிறார்களாம். ‘யப்பா... ரெண்டு பேராலயே சமாளிக்க முடியலையா... நல்லவேளை முப்பெரும் விழாவை நம்ம மாவட்டத்தில் நடத்தச் சொல்லலை’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் மற்ற மாவட்ட அமைச்சர்கள்.

தி.மு.க எம்.எல்.ஏ – எம்.பி மோதல்...
கேன்சலான டெண்டர்!

நாமக்கல்லில், முதலைப்பட்டியில் 37 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதாக வந்த அறிவிப்புக்கு எதிராக, வணிகர்கள் போராடிவருகிறார்கள். ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாமல், அந்த டெண்டரை யார் எடுப்பது என்று எம்.எல்.ஏ., எம்.பி தரப்புகளுக்கு இடையே மல்லுக்கட்டு நடக்கிறது. மாவட்டப் பொறுப்பாளராக இருக்கும் எம்.பி தனக்கு வேண்டிய கான்ட்ராக்டர் ஒருவருக்கு டெண்டர் கேட்டாராம். ஆனால், எம்.எல்.ஏ-வோ, ‘என் தொகுதி இது... நான் சொல்ற ஆளுக்குத்தான் டெண்டர்’ என்று முஷ்டியை முறுக்கியிருக்கிறார். இவர்களின் சண்டையால் டெண்டரையே கேன்சல் செய்துவிட்டு இன்னொரு தேதிக்குத் தள்ளிவைத்துவிட்டார்களாம் அதிகாரிகள்.

தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழிசை...
விட்டுக்கொடுத்தாரா... தட்டிப் பறித்தாரா?!

கேரளாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து முதல்வர்களும் கலந்துகொண்டனர். ஆனால், புதுச்சேரி சார்பாக முதல்வர் ரங்கசாமிக்கு பதில், பொறுப்பு ஆளுநராக இருக்கும் தமிழிசை கலந்துகொண்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. “சட்டமன்றம் இல்லாத மாநிலங்கள் சார்பில்தான் ஆளுநர் கலந்துகொள்ள வேண்டும்... இதே மாநாடு முன்பு நடந்தபோது முதல்வர்களே பங்கேற்றார்கள்” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் கூறியிருக்கிறார்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

இது குறித்து முதல்வரிடம் ஆதங்கப்பட்டவர்களிடம், “அண்ணன் அண்ணன்னு சொல்லிட்டு அந்தம்மா எல்லா இடத்திலும் முன்னாடி நிக்குது. என்ன பண்ணச் சொல்றீங்க?” என்று விரக்தியாக பதிலளித்தாராம் ரங்கசாமி. `அவர் விட்டுக்கொடுத்தாரா... இல்லை தமிழிசை தட்டிப்பறித்தாரா?’ என்று கேட்கின்றன காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்!

நஷ்டஈடு கொடுக்க வேண்டாம்...
அமைச்சரின் ஓப்பன் டாக்... அதிர்ந்த உ.பி-க்கள்!

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த மண்டல ஆய்வுக் கூட்டம் அந்தத் துறையின் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்தது. இதில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ``திண்டுக்கல் மாநகராட்சிக்கு 15 ஏக்கர் நிலம் இருக்கிறது. அருகேயுள்ள 5, 10 ஏக்கரை எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் தொடங்கிவிடலாம்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

யாருக்கும் நஷ்டஈடு கொடுக்க வேண்டாம்” என்று போகிற போக்கில் வார்த்தையைவிட்டார். “அரசு திட்டத்துக்கு நிலம் எடுத்தால், நஷ்டஈடு கொடுக்கத்தானே வேணும்... ஏன் இப்படி நில அபகரிப்பு செய்யறதுபோலப் பேசுறார் அமைச்சர்.... ஏற்கெனவே இந்த விவகாரத்துல தி.மு.க-வினர் வாங்குன கெட்ட பேரு பத்தாதா?” என்று முணுமுணுத்தார்கள் உடன்பிறப்புகள்.

மகாராஷ்டிரா மேலவை உறுப்பினர்கள் நியமனம்...
பா.ஜ.க-வுக்கு உதவும் ஆளுநர்!

மகாராஷ்டிராவில் சட்டமேலவைக்கு நியமன உறுப்பினர்கள் 12 பேரை நியமிக்க வேண்டும். இதற்கான பட்டியலை கடந்த சிவசேனா கூட்டணி ஆட்சியின்போது ஆளுநர் பகத்சிங் கோஷாரியாவுக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர்களை நியமிக்காமல் ஆளுநர் இழுத்தடித்தார். இந்தப் பிரச்னை மும்பை உயர் நீதிமன்றம் மட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடி வரை சென்றது. ஆனாலும் சிவசேனா கூட்டணி அரசு பரிந்துரைத்தவர்களை சட்டமேலவை உறுப்பினர்களாக ஆளுநர் நியமிக்கவில்லை.

இப்போது மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி அரசு பதவிக்கு வந்தவுடன், முந்தைய அரசு அனுப்பிய 12 பேர் பட்டியலைத் திரும்ப அனுப்புவதாக ஆளுநர் தெரிவித்திருக்கிறார். விரைவில் பா.ஜ.க புதிய பட்டியலை அனுப்பிவைக்கும் என்றும், அந்தப் பட்டியலில் இருப்பவர்களை உடனடியாக மேலவையில் நியமிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.