அழகிரியைச் சந்திக்கும் ஸ்டாலின் முதல் திமுக-வுக்குத் தாவும் முன்னாள் எம்எல்ஏ வரை - கழுகார் அப்டேட்ஸ்

மிரட்டும் அமைச்சர் உதவியாளர்... | வசூல்வேட்டையில் இளம் ஐ.பி.எஸ் அதிகாரி... | படையுடன் புகுந்த கதர் பிரதிநிதி... | மிரட்டிய மீசைக்கார அமைச்சர்... | வாரிக்குவித்த அதிகாரி! | கலக்கத்தில் இன்னோர் அமைச்சர்! | சரவணன் வழியில் மேலும் சில பா.ஜ.க-வினர்! | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்!
கழுகார் அப்டேட்ஸ்!
0Comments
Share
மு.க.அழகிரி உடல்நிலை...
நேரில் நலம் விசாரிக்கிறார் ஸ்டாலின்?!

ஆண்டுதோறும் கருணாநிதி நினைவுநாளில் (ஆகஸ்ட் 7) அவரின் நினைவிடத்துக்கு வரும் மு.க.அழகிரி, இந்த ஆண்டு வரவில்லை. காரணம், அவருக்கு உடல்நிலை சரியில்லையாம். காலில் இருக்கும் நீண்டகாலப் பிரச்னை காரணமாக, வீட்டிலிருந்தே சிகிச்சை பெறுவதால் அவரால் முன்புபோல வெளியே அதிகம் தலைகாட்ட முடியவில்லை. 2014-ல் தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து, மு.க.ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்துவந்தார் அழகிரி.

அழகிரி
அழகிரி

ஸ்டாலின் முதல்வரான பிறகும்கூட அவர்களுக்கிடையே இணக்கம் ஏற்படவில்லை. மு.க.தமிழரசுவின் மாமியார் இறப்புக்கு வந்தபோது, இருவரும் ஒரே இடத்தில் அரை மணி நேரத்துக்கும் மேலிருந்தும் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை. மே மாதம் நடந்த கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இல்லத் திருமணத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், “என் அண்ணன் அழகிரி...” என்று தன் பேச்சின்போது பாசத்தோடு பழைய நினைவுகளை அசைபோட்டார். இதற்கிடையே ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சியில் அழகிரியின் மகன் துரை தயாநிதி பங்கேற்றதுடன், சபரீசன், உதயநிதியிடம் சிரித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக ஓய்விலிருக்கும் அழகிரியை வீட்டுக்கே போய் நலம் விசாரிக்கவிருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின். இதற்கு அழகிரி குடும்பத்தில் எல்லோரும் சம்மதித்துவிட்டார்களாம். அழகிரிதான் எதுவுமே சொல்லவில்லை என்கிறார்கள்!

மிரட்டும் அமைச்சர் உதவியாளர்...
மிரளும் துறை அதிகாரிகள்!

ஊர் சுற்றும் துறையின் அமைச்சரிடம் ‘இனிப்பு’ வகை ஒன்றின் பெயர்கொண்டவர் உதவியாளராக இருக்கிறார். துறையில் அவரைத் ‘தலைவர்’ என்றே அழைக்கிறார்கள். அவ்வப்போது துறை அதிகாரிகளை அழைத்து, தன் சொந்த வேலைகளையும், தனக்கு வரும் சிபாரிசுகளையும் செய்யச் சொல்லிக்கொண்டிருக்கிறாராம் அவர். செய்துகொடுக்க மறுக்கும் அதிகாரிகளிடம், ‘என்னைப் பகைச்சுக்கிட்டா உன்னை ட்ரான்ஸ்ஃபர் செய்துவிடுவேன்’ என்று மிரட்டவும் செய்கிறாராம். வந்தாரை வரவேற்று உபசரிக்கவேண்டிய இந்தத் துறை அதிகாரிகளோ, அந்த உதவியாளர் போன் கால் வந்தாலே, “இன்னைக்கு என்ன வேலை கொடுக்கப்போகிறாரோ..?” என்று பதறுகிறார்கள்.

வசூல்வேட்டையில் இளம் ஐ.பி.எஸ் அதிகாரி...
கூடவே இருந்து உதவும் தந்தை ஐ.பி.எஸ்!

சென்னையில் வணிக நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கும் காவல் மாவட்டத்தில் பணியாற்றும் இளம் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், அவரின் வடமாநில நண்பர்கள் உதவியுடன் பல டீலிங்குகளை முடிக்கிறாராம். இவரின் கறார் வசூல்வேட்டையால், அதே காவல் மாவட்டத்தில் பணியாற்றும் உதவி கமிஷனர்களும், இன்ஸ்பெக்டர்களும் ‘வரும்படி’ கிடைக்காமல் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறார்களாம்.

லஞ்சம்
லஞ்சம்

சம்பந்தப்பட்ட இளம் ஐ.பி.எஸ் அதிகாரியின் தந்தையும் ஐ.பி.எஸ் அதிகாரி என்பதால் துறையின் நேக்குபோக்குகளைக் கற்றுக் கொடுத்திருப்பதோடு, பையனுக்குப் பக்க பலமாகவும் இருக்கிறாராம்.

படையுடன் புகுந்த கதர் பிரதிநிதி...
முகம் சுளித்த வி.ஐ.பி-க்கள்!

பட்டாசு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில், காங்கிரஸைச் சேர்ந்த டெல்லி பிரதிநிதி தன் படை பலத்துடன் கலந்துகொண்டு அலப்பறை செய்தது, விழாவுக்கு வந்திருந்த வி.ஐ.பி.களை முகம் சுளிக்க வைத்துவிட்டதாம். குடும்பத்தினருடன் அமர்ந்திருந்த அதிகாரிகளின் கேலரியில் அந்த மக்கள் பிரதிநிதியோடு தொண்டர் படையினரும் புகுந்துகொண்டதால் ‘பிரைவசி’ பறிபோனதாக அதிகாரிகளும், வி.ஐ.பி-களின் உறவினர்களும் புலம்பியிருக்கிறார்கள்.

மிரட்டிய மீசைக்கார அமைச்சர்...
கதிகலங்கிய மேயர்!

அணில் அமைச்சரின் பொறுப்பில் இருக்கும் மாவட்டத்துக்குச் சமீபத்தில் சென்றிருக்கிறார் மீசைக்கார அமைச்சர். அந்த மாவட்ட மாநகராட்சி மேயர் கட்சியைவிட, அணில் அமைச்சரின் விசுவாசியாக இருப்பதையே பெருமையாக நினைப்பவர் என்பதால் மீசைக்காரருக்குக் கோபம் இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் மேயரின் கணவர் தொடர்பான ஓர் ஆடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மேயரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் மீசை. அதற்கு மேயர், “அதெல்லாம் சும்மா கிளப்பிவிடறாங்க அண்ணா...” என்று சமாளிக்க முயல... கடுப்பான மீசைக்காரர், “நானே அந்த ஆடியோவக் கேட்டு விசாரிச்சுட்டுதான் பேசறேன். தொலைச்சுடுவேன்... பார்த்து இருந்துக்கோங்க” என்று மிரட்டியதில் கதிகலங்கிப்போயிருக்கிறார் மேயர்.

பல்கலை ஆசிரியர் இடமாற்றம்...
வாரிக்குவித்த அதிகாரி!

நிர்வாகச் சீர்கேட்டால் திவாலான சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை, 2013-ம் ஆண்டு அரசுடைமையாக்கியது தமிழ்நாடு அரசு. அப்போது அங்கு உபரியாக இருந்த 1,204 ஆசிரியர்களையும், 3,246 ஆசிரியர்களல்லாத ஊழியர்களையும் தமிழ்நாடு முழுக்க இருக்கும் அரசுக் கல்லூரிகளுக்குப் பணியிட மாற்றமும் செய்தது தமிழ்நாடு அரசு. மேலும் உபரியாக இருக்கும் 369 ஆசிரியர்களையும், 1,031 ஆசிரியரல்லாத ஊழியர்களையும், புதிதாகத் தொடங்கியிருக்கும் கல்லூரிகளில் பணியமர்த்த வேலைகள் நடப்பதாக சமீபத்தில் அறிவித்தது உயர்கல்வித்துறை.

அதையடுத்து விருப்பப்பட்ட கல்லூரிகளுக்கு மாற்றம் பெற ஆசிரியர்களுக்கு ஆறு ‘லட்டு’, ஆசிரியர்களல்லாத ஊழியர்களுக்கு மூன்று ‘லட்டு’ என்று வசூலித்தே சுமார் 50-க்கும் மேற்பட்ட ‘ஸ்வீட் பாக்ஸ்’களைத் தேற்றிவிட்டார்களாம் சிலர். அயோத்தி அரசரின் மகன் பெயர்கொண்ட அதிகாரிதான் முன்னின்று இந்த வேலையைச் செய்தவராம்.

நெருக்கும் அமலாக்கத்துறை வழக்கு...
கலக்கத்தில் இன்னோர் அமைச்சர்!

கடலோர மாவட்டம் ஒன்றில் தி.மு.க-வுக்கு இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். இருவருக்குமே அமலாக்கத்துறையின் வழக்கு, தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்த அமைச்சர் மீதான வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முதல் குற்றவாளியாக அவரின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சமீபத்தில் நீக்கியது சென்னை உயர் நீதிமன்றம். இனி, எப்போது வேண்டுமானாலும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக அழைக்கப்படலாம் என்கிற நிலை இருப்பதால் கலக்கத்தில் இருக்கிறாராம் அமைச்சர். “அவர் தன்னைப் பத்திகூடக் கவலைப்படலை. அவரோட மனைவி, மகன்கள், சகோதரர்கள் மேலயும் நடவடிக்கை பாயுமேன்னு நினைச்சுத்தான் ரொம்ப கவலைப்படுறார்” என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

தி.மு.க-வுக்குத் தாவும் இன்னொரு முன்னாள் எம்.எல்.ஏ...
சரவணன் வழியில் மேலும் சில பா.ஜ.க-வினர்!
டாக்டர் சரவணன்
டாக்டர் சரவணன்

“தாய்க் கழகத்துக்கு மறுபடியும் போனா என்ன தப்பு?” என்று கூறி, மீண்டும் தி.மு.க-வில் சேர முனைப்பு காட்டும் டாக்டர் சரவணன், அப்படியே மதுரை எம்.பி சீட்டுக்கும் அடிபோடுகிறாராம். தனியாகப் போனால் மரியாதை இருக்காது என்பதால், சில முக்கியப் புள்ளிகளையும் பா.ஜ.க-விலிருந்து அறிவாலயத்துக்கு அழைத்துச் செல்லவிருக்கிறாராம். அ.தி.மு.க-விலிருந்து பா.ஜ.க-வுக்குத் தாவிய மதுரையைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரும் அந்தப் பட்டியலில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.