ஓய்வெடுத்து ஓய்வெடுத்து டயர்டான தினகரன்... திமுக கூட்டணிக்கு அடிபோடும் ராமதாஸ்! - கழுகார் அப்டேட்ஸ்

3.5 லட்சம் வசூலும்... நிர்வாகிகள் புறக்கணிப்பும்... | கை வைத்தவர்மீது நடவடிக்கை இல்லை... | ஏமாற்றத்தில் அ.ம.மு.க நிர்வாகிகள்! | புதுவை பா.ஜ.க நிர்வாகியின் `அடடே’ விளக்கம்! | ஸ்டாலினைப் புகழும் ராமதாஸ்... | கடுப்பான அண்ணாமலை!

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்!
கழுகார் அப்டேட்ஸ்!
0Comments
Share
3.5 லட்சம் வசூலும்... நிர்வாகிகள் புறக்கணிப்பும்...
தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு சர்ச்சை!

ராகுல்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்று ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டிகள் தீர்மானம் நிறைவேற்றின. தம் பங்குக்கும் அவசர அவசரமாக பொதுக்குழுவைக் கூட்டி, அதே தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ். கூட்டத்தில், `அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தியைத் தேர்வு செய்ய வேண்டும், மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தேசியத் தலைவருக்கு வழங்குகிறோம்’ என இரண்டே இரண்டு தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

ஓய்வெடுத்து ஓய்வெடுத்து டயர்டான தினகரன்... திமுக கூட்டணிக்கு அடிபோடும் ராமதாஸ்! - கழுகார் அப்டேட்ஸ்

இந்தப் பொதுக்குழுவில் ஜோதிமணி உள்ளிட்ட ஐந்து எம்.பி-க்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருக்கிறார்கள். பொதுக்குழுவில் 689 பேர் கலந்துகொண்டதாகவும், அவர்களிடம் நுழைவுக் கட்டணமாக தலா 500 ரூபாய் வீதம் மொத்தம் 3,44,500 ரூபாய் வசூல் செய்யப்பட்டதாகவும் சொல்கிறார்கள். கூட்டம் காட்ட வேண்டும் என்பதற்காக, யாரென்றே தெரியாத பலரையும் அழைத்துவந்துவிட்டார்கள் என்று பேச்சு எழுந்திருக்கிறது.

கை வைத்தவர்மீது நடவடிக்கை இல்லை...
துக்கத்தில் சசிகலா புஷ்பா தரப்பு!

பரமக்குடி பாலியல் சீண்டல் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சசிகலா புஷ்பா தரப்பு, மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு குறுஞ்செய்தி மூலம் புகார் அனுப்பியது. புகாரைப் படித்துப் பார்த்த அண்ணாமலை, ‘விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று பதிலும் அனுப்பினாராம். ஆனால், 10 நாள்களுக்கு மேலாகியும் இதுவரை பொன்.பாலகணபதியை நேரில் அழைத்தோ, தொலைபேசி மூலமாகவோகூட அண்ணாமலை விசாரிக்கவில்லையாம். விளக்கம் கேட்டதாகக்கூட தகவல் இல்லை. இதனால், சசிகலா புஷ்பா தரப்பு தலைமை மேல் அதிருப்தியில் இருக்கிறதாம். தூத்துக்குடிக்குச் சென்ற சசிகலா புஷ்பா தன் ஆதரவாளர்களிடம், ‘மாநில நிர்வாகியான என் புகாருக்கே இந்தக் கட்சியில் இவ்வளவுதான் மரியாதை’ என்று சொல்லி வருத்தப்பட்டாராம்.

ஓய்வுக்குச் சென்ற தினகரன்...
ஏமாற்றத்தில் அ.ம.மு.க நிர்வாகிகள்!

ஓய்வெடுத்து ஓய்வெடுத்தே களைத்துப்போய், அதற்காக இன்னொரு ஓய்வுக்குச் செல்வதையே வழக்கமாக வைத்திருக்கிறாராம் டி.டி.வி.தினகரன். அ.ம.மு.க பொதுக்குழு முடிந்த கையோடு அவர், புதுச்சேரியிலுள்ள பண்ணை வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்தார். ‘என்ன தலைவரே முக்கியமான காலகட்டத்தில், நாம ஏதாவது செய்ய வேண்டாமா?’ என்று கட்சி நிர்வாகிகள் சிலரின் வற்புறுத்தலின்பேரில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டார்.

டி.டி.வி தினகரன்
டி.டி.வி தினகரன்

ஆனால் என்ன நினைத்தாரோ, நிர்வாகிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கூட்டத்தை நடத்தாமலேயே தஞ்சாவூருக்குப் பறந்தார். பின்னர் சென்னைக்கு வந்த தினகரன் தனது வீட்டில் ஒருசில மூத்த நிர்வாகிகளை மட்டும் சந்தித்துவருகிறாராம். பொதுக்குழுவில் சொன்னபடி கட்சியை பலப்படுத்துவது குறித்த எந்த முயற்சியும் எடுக்காமல் அவர் ஏமாற்றிவருவதால் அப்செட்டில் இருக்கிறார்களாம் நிர்வாகிகள்.

‘கட்சி நலனுக்காகப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்...’
புதுவை பா.ஜ.க நிர்வாகியின் `அடடே’ விளக்கம்!

புதுவை மாநில பா.ஜ.க இளைஞரணி பொதுச்செயலாளரும், காரைக்காலைச் சேர்ந்தவருமான கணேஷ், “என்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளாலும், பொய்ப் புகார்களாலும் கட்சிக்குக் களங்கம் ஏற்பட நான் காரணமாக இருக்கக் கூடாது என்பதற்காகப் பதவியைத் தானாக முன்வந்து ராஜினாமா செய்கிறேன்” எனக் கூறி கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்.

கணேஷ்
கணேஷ்

விசாரித்ததில் ‘அவர்மீது ரேஷன் கடை வசூல், சட்ட விரோதச் செயல்களில் மாமூல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட புகார்கள் தலைமைக்குச் சென்றன. இந்தப் புகார்கள் உண்மைதான் என்று உளவுத்துறை மூலம் விசாரித்து உறுதிசெய்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பரிந்துரையின் பேரில் அவரைக் கட்சியிலிருந்து நீக்க உத்தரவிடப்பட்டது. அதை முன்கூட்டியே அறிந்து, தானாக ராஜினாமா செய்துவிட்டார்’ என்கிறார்கள் புதுவை பா.ஜ.க-வினர். நல்ல நாடகம்தான்!

ஸ்டாலினைப் புகழும் ராமதாஸ்...
கூட்டணிக்கு அடிபோடும் முயற்சியா?!

முதலமைச்சர் ஸ்டாலினிடம் போனில் பேசியிருக்கிறாராம் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். இருவருக்குமான உரையாடலின்போது, ‘வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை சட்டமாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக’ முதல்வர் பதில் சொல்லியிருக்கிறார். ஸ்டாலின் ரகசியமாகச் சொன்னதை கடந்த 17-ம் தேதி, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் பகிரங்கப்படுத்தியிருக்கிறார்.

ராமதாஸ்
ராமதாஸ்

அதோடு, ‘உள் ஒதுக்கீடு தொடர்பாக நாம் போராட்டத்தைக் கையில் எடுக்கத் தேவையில்லை. தம்பி ஸ்டாலின் பார்த்துக்கொள்வார்’ என்றும் ராமதாஸ் சொல்லியிருக்கிறார். தனது அரை மணி நேர உரையில், முதல்வர் ஸ்டாலினைப் பற்றியே அவர் அதிகம் பேசியதால், ‘பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு இப்போதே அடிபோடுகிறாரா அய்யா?’ என்று குழம்பிப்போயிருக்கிறார்கள் பா.ம.க தொண்டர்கள்.

மூர்த்தி வீட்டில் கை நனைத்த பா.ஜ.க நிர்வாகிகள்...
கடுப்பான அண்ணாமலை!

மூர்த்தி நடத்திய ஆடம்பரத் திருமணத்தை வீடியோ பதிவுசெய்து, அம்பலப்படுத்துவார்கள் நம் நிர்வாகிகள் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எதிர்பார்த்திருந்தாராம். ஆனால், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் அந்த விழாவுக்குப் போய் விருந்தை சிறப்பித்துவிட்டு வந்திருக்கிறார்கள். கட்சியின் மூத்த நிர்வாகியான மதுரை பேராசிரியர் ஸ்ரீனிவாசன்கூட, அமைச்சர் மூர்த்தியின் இல்லத் திருமணம் குறித்து எந்த விமர்சனமும் செய்யாமல் மௌனமாக இருந்ததும் அண்ணாமலைக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்த நிலையில், காலியாக இருக்கும் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் பதவி கேட்டு சிலர் அவரை அணுகினார்களாம். கடுப்பான அண்ணாமலை, ``பி.டி.ஆர் மாதிரி ஆட்களிடம்தான் உங்க வீரத்தை எல்லாம் காட்டுவீங்கபோல... மூர்த்தி மாதிரி படைபலம் கொண்டவரிடம் இப்படி பம்முறீங்களே, உங்களுக்கெல்லாம் எதுக்குப் பதவி?” என்று கடிந்துகொண்டாராம்.

மூன்றாகக் குறைந்த மா.செ பதவி...
கோவை தி.மு.க-வில் உச்சகட்ட மல்லுக்கட்டு!

கோவை மாவட்ட தி.மு.க., அமைப்புரீதியாக ஐந்திலிருந்து மீண்டும் மூன்றாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவை மாநகர், கோவை மேற்கு, கோவை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் மூவரையுமே மாற்றுவதா அல்லது ஓரிருவரை மட்டும் தக்கவைத்துக்கொள்வதா என்று பேச்சுவார்த்தை ஓடிக்கொண்டிருக்கிறது. சமூகரீதியாக கொங்கு வேளாளர், நாயுடு, ஒக்கலிக கவுடர் என்று மூன்று சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் மா.செ தேர்வு இருக்கும் என்கிறார்கள்.

மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய, மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்புதான் ‘பவர்ஃபுல்’ என்பதால், அதற்குத்தான் அதிக மல்லுக்கட்டு நடக்கிறது. தற்போது பொறுப்பாளராக இருக்கும் கார்த்திக், துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் அந்தப் பதவிக்குக் கடுமையாக முயல்கிறார்கள். மூன்று மாவட்டச் செயலாளர்களில் இருவர் செந்தில் பாலாஜியின் தேர்வாகவும், ஒருவர் தலைமைக்கழகத்தின் சார்பில் ஆ.ராசாவின் தேர்வாகவும் இருப்பார்கள் என்கிறார்கள்.