'இது நான் கட்டிய அறிவாலயம்’ எகிறிய எம்.பி முதல் வைத்தியின் ‘ஸ்லீப்பர் செல்’ வரை - கழுகார் அப்டேட்ஸ்

செலவழிப்பது நாங்க... பெயர் வாங்குவது மாவட்டச் செயலாளர்களா?!| கண்ணீர் சிந்தும் பெண் மேயர்! | சி.வி.சண்முகத்துக்கு வாய்ப்பூட்டு | ஜக்கையன் மூலம் காய்நகர்த்தும் எடப்பாடி! | வைத்திலிங்கத்தின் ‘ஸ்லீப்பர் செல்’லா? | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்
0Comments
Share
செலவழிப்பது நாங்க...
பெயர் வாங்குவது மாவட்டச் செயலாளர்களா?!

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று, கழக முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கிவருகிறார் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். நிகழ்ச்சிக்கான செலவுகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்களே ஏற்று நடத்த வேண்டும் எனத் தலைமை சொல்லியிருக்க, சில மாவட்டச் செயலாளர்களோ ஒன்றியச் செயலாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நகர்ந்துவிட்டனர்.

உதயநிதி
உதயநிதி

ஏற்கெனவே உட்கட்சித் தேர்தல் பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதாலும், உதயநிதி கலந்துகொள்ளும் நிகழ்வு என்பதாலும் வேறு வழியின்றி ஒன்றியச் செயலாளர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டிலிருந்து, பொற்கிழிக்கான தொகை வரை எல்லாச் செலவுகளையும் பார்த்துக்கொள்கிறார்களாம். ஆனால், நிகழ்ச்சி நடக்கும் நாளன்று மா.செ-க்கள் தாங்களே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததுபோலக் காட்டிக்கொள்வதோடு, ஒன்றியச் செயலாளர்களை மேடைக்குப் பக்கத்திலேயே விடுவதில்லையாம். ‘செலவழிப்பது நாங்க... பெயர் வாங்குவது மாவட்டச் செயலாளர்களா?!’ என்று கடுப்பில் இருக்கிறார்கள் ஒன்றியச் செயலாளர்கள்.

திரும்பிய பக்கமெல்லாம் எதிர்ப்பு...
கண்ணீர் சிந்தும் பெண் மேயர்!

கொங்கு மண்டல முக்கிய மாநகராட்சியின் பெண் மேயருக்குத் திரும்பிய பக்கமெல்லாம் எதிர்ப்புகள் வலுக்கின்றனவாம். மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகளில் தொடங்கி, துணை மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், கவுன்சிலர்கள் என அனைவரும் அந்த ‘விண்வெளி’ வீராங்கனை பெயரைக்கொண்ட மேயருக்கு எதிராகவே செயல்படுகிறார்களாம். `கட்சியில் தகுதியான பலர் இருந்தும் திடீரென மேலிருந்து திணிக்கப்பட்ட மேயர் அவர்’ என்பதே கட்சிக்காரர்களின் கோபத்துக்குக் காரணம். மாமன்றக் கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் செய்யும் அமளியைவிட, தி.மு.க கவுன்சிலர்கள் செய்யும் அலப்பறைதான் அதிகம்.

‘முடியலை தலைவரே...’ எனத் தனக்கு பதவி வாங்கித்தந்த ‘ஷாக்’ அமைச்சரிடம் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார் அந்த மேயர்.

'இது நான் கட்டிய அறிவாலயம்...’
எகிறிய தி.மு.க எம்.பி!

தஞ்சை மாவட்டத் தி.மு.க-வில் பிரச்னைக்குப் பஞ்சமேயில்லை. நடைபெற்றுவரும் உட்கட்சித் தேர்தல் தொடர்பாக, சீனியரான பழநிமாணிக்கம் எம்.பி தரப்புக்கும், தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளரும், திருவையாறு எம்.எல்.ஏ-வுமான துரை.சந்திரசேகரன் தரப்புக்கும் நேரடியாகவே பிரச்னை வெடித்திருக்கிறது. தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் நடந்த இந்தப் பிரச்னை கைகலப்பு வரை போனதாம்.

பழநிமாணிக்கம்
பழநிமாணிக்கம்
ம.அரவிந்த்

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பழநிமாணிக்கம், ‘இது நான் கட்டிய அறிவாலயம்... எல்லாரும் எந்திரிச்சு வெளிய போங்க...’ என்று சீற, கூட்டம் ‘கப்சிப்’ ஆகியிருக்கிறது. எனினும், ‘கட்சிக்காகக் கட்டப்பட்ட அரங்கத்தை எப்படித் தனக்கானதாகச் சொல்லலாம்?’ என்று விவகாரத்தை சென்னை அண்ணா அறிவாலயம் வரை கொண்டு சென்றிருக்கிறது எம்.எல்.ஏ தரப்பு.

எடப்பாடி அப்செட்டு...
சி.வி.சண்முகத்துக்கு வாய்ப்பூட்டு!
சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்
தே.சிலம்பரசன்

ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் சி.வி.சண்முகத்தின் அதிரடிப் பேச்சு, பன்னீர்செல்வம் மீதான அனுதாபம் அதிகரிக்கவே உதவியிருக்கிறதாம். இதனால் அப்செட்டான எடப்பாடி, “சண்முகத்தை கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிக்கச் சொல்லுங்க. தேவையில்லாததைப் பேசி பிரச்னையைப் பெருசு பண்ண வேண்டாம்” என்று தங்கமணி, வேலுமணி மூலமாகச் சொல்லி அனுப்பியிருக்கிறாராம்.

ஓ.பி.எஸ் கூடாரம் காலி...
ஜக்கையன் மூலம் காய்நகர்த்தும் எடப்பாடி!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஜக்கையன், தன்னுடைய ஆதரவாளருடன் சேர்ந்து இ.பி.எஸ்-ஸைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவரிடம் முக்கியமான ‘அசைன்மென்ட்’டை கொடுத்திருக்கிறதாம் எடப்பாடி தரப்பு. ஓ.பி.எஸ்-ஸின் சொந்த மாவட்டமான தேனி, சொந்தத் தொகுதியான போடியியிலிருந்து அவருடைய அதிருப்தியாளர்களை இ.பி.எஸ் பக்கம் கொண்டுவருவதுதான் அந்த அசைன்மென்ட்டாம். உழைப்பின் பலனாக, தேனி முன்னாள் எம்.பி பார்த்திபன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஜக்கையனுடன் சேர்ந்து இ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

ஜக்கையன்
ஜக்கையன்

தொடர்ந்து ஜக்கையனை வைத்து ஓ.பி.எஸ் கூடாரத்தைக் காலிசெய்யக் காய்நகர்த்துகிறார் எடப்பாடி. அ.தி.மு.க-வினர் மட்டுமின்றி, அங்கிருந்து தி.மு.க-வுக்குச் சென்று மா.செ-வாக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வனிடமும், ‘மீண்டும் தாய்க்கழகத்துக்கு வாருங்கள்’ என்று பேசியிருக்கிறாராம் ஜக்கையன்.

அணி தாவிய தாமரை ராஜேந்திரன்...
வைத்திலிங்கத்தின் ‘ஸ்லீப்பர் செல்’லா?

அ.தி.மு.க அரியலூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன், தீவிரமான வைத்திலிங்கம் ஆதரவாளர். கடந்த வாரம் திடீரென அணி மாறிய அவர், எடப்பாடியின் வீட்டுக்கே சென்று ஆதரவு கொடுத்திருக்கிறார்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

எனினும், வைத்திலிங்கத்தின் ‘ஸ்லீப்பர் செல்’லாகக்கூட ராஜேந்திரன் வந்திருக்கலாம் என்று கொளுத்திப் போட்டிருக்கிறார்களாம் அவருக்கு எதிரானவர்கள். ராஜேந்திரனின் மா.செ பதவி பறிக்கப்பட்டால், அதைக் கைப்பற்றும் திட்டத்துடன் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் உட்பட பலர் காத்திருக்கிறார்கள்.