மீண்டும் கமலாலயம் வந்த எஸ்.வி.சேகர் முதல் விசிக-வை குறிவைக்கும் நாம் தமிழர் வரை - கழுகார் அப்டேட்ஸ்

அண்ணாமலை மீது அதிருப்தி! | கலாய்க்கும் ஊட்டி இளைஞர்கள்! | ‘லட்டு’ கொடுத்துக் கொண்டாடும் இன்ஸ்பெக்டர்! | தூத்துக்குடியில் மணல் கொள்ளை... | வி.சி.க வாக்குவங்கி... குறிவைக்கும் நாம் தமிழர்! | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்
0Comments
Share
மீண்டும் கமலாலயம் வந்த எஸ்.வி.சேகர்...
அண்ணாமலை மீது அதிருப்தி!

`பா.ஜ.க என்னைக் கண்டுகொள்ளவில்லை’ என வெளிப்படையாகப் பேசிவந்த எஸ்.வி.சேகரை தமிழ்நாடு பா.ஜ.க அழைத்துப் பேசியிருக்கிறது. அதோடு ஜூலை 24-ம் தேதி கமலாலயத்தில் நடந்த சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறையில், முன்னாள் சென்சார் உறுப்பினர் என்ற முறையில் பயிற்சியும் அளித்திருக்கிறார் சேகர். அப்படியே, கட்சியில் தனக்கொரு பொறுப்பு கொடுத்தால், மற்ற சினிமா பிரபலங்களைக் காட்டிலும் தன்னால் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்றொரு பிட்டையும் போட்டுவிட்டு வந்திருக்கிறார் சேகர்.

எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்

முன்னாள் நிர்வாகிகள் பலரைக் கடுமையாக விமர்சித்த எஸ்.வி.சேகரை மீண்டும் கமலாலயத்துக்குள் அனுமதித்திருப்பதால், சீனியர்கள் சிலர் அண்ணாமலைமீது அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

``எம்.எல்.ஏ-வைக் காணோம்...’’
கலாய்க்கும் ஊட்டி இளைஞர்கள்!

நீலகிரி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட மழைவெள்ள பாதிப்புகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் பார்வையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் எனப் பலரும் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குச் சென்று ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள்.

மீண்டும் கமலாலயம் வந்த எஸ்.வி.சேகர் முதல் விசிக-வை குறிவைக்கும் நாம் தமிழர் வரை - கழுகார் அப்டேட்ஸ்

ஆனால், ஊட்டி தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறை எம்.எல்.ஏ-வாக இருக்கும் காங்கிரஸைச் சேர்ந்த கணேசன் அந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லையாம். உள்ளூரில் இருந்துகொண்டே மக்களைச் சந்திக்காத அவரைக் கேலி செய்து, ‘எம்.எல்.ஏ-வைக் காணோம்’ என்று சமூக வலைதளங்களில் கலாய்த்துத் தள்ளுகிறார்கள் இளைஞர்கள்!

வீணாகும் நெல் மூட்டைகள்...
குழு அமைக்கும் அரசு!

டெல்டா மாவட்டங்களில் அரசு குடோன்களில் வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமான அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் முதல்வர் அலுவலகத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழுவை அமைத்து, போர்க்கால அடிப்படையில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறதாம். அனைத்து அரசு குடோன்களிலும் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க, கூடுதல் வசதிகள் செய்வது குறித்த அறிவிப்பும் வரலாம் என்கிறார்கள்.

விபசார தடுப்புப் பிரிவுக்கு டிரான்ஸ்ஃபர்...
‘லட்டு’ கொடுத்துக் கொண்டாடும் இன்ஸ்பெக்டர்!

சென்னையில் பணியாற்றும் திருப்பதி கடவுளின் பெயரைக்கொண்ட இன்ஸ்பெக்டர் அவர். “எனக்கு உடல்நலம் சரியில்லை... ‘வாங்குவது’ மருத்துவச் செலவுக்கே போதவில்லை. நல்ல வருமானம் வரும் இடத்தில் போஸ்ட்டிங் போட்டுக்கொடுங்கள்” என்று மருத்துவ ரிப்போர்ட்டோடு சென்று உயரதிகாரிகளிடம் கெஞ்சியிருக்கிறார் இவர்.

இரக்கப்பட்ட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி, அவருக்கு விபசாரத் தடுப்புப் பிரிவில் போஸ்ட்டிங் போட்டுக் கொடுத்திருக்கிறார். கல்லாகட்டும் இடம் என்பதால் பெருவாழ்வு வாழும் அந்த அதிகாரி, நன்றி விசுவாசமாக கமிஷனரகத்திலிருக்கும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மாதம்தோறும் ‘லட்டு’ கொடுத்து மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறாராம்.

தூத்துக்குடியில் மணல் கொள்ளை...
மிரட்டப்படும் புகார்தாரர்கள்!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட குளங்களில், இரவு பகலாக கரம்பை (வண்டல்) மண் அள்ளப்படுகிறது. உள்ளூர் விவசாயிகள், சொந்த நிலத்தில் மண் எடுக்கவே ஆயிரத்தெட்டு ஃபார்மாலிட்டிகள் இருக்க, வெளியூர்க்காரர்கள் எப்படி இவ்வளவு துணிச்சலாகக் குளத்தில் மண் எடுக்கிறார்கள் என்று விசாரித்தால், உள்ளூர் அமைச்சர் ஒருவரின் ஆசி அவர்களுக்கு இருக்கிறதாம்.

மண் கொள்ளை சம்பந்தமாக விவசாயிகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தாலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லையாம். கூடவே, புகார் அளிப்பவர் பற்றிய விவரங்களைச் சேகரித்து, முகம் தெரியாத நபர்களைக்கொண்டு மிரட்டுகிற வேலையும் நடக்கிறதாம்.

வி.சி.க வாக்குவங்கி... குறிவைக்கும் நாம் தமிழர்!

தென்மாவட்டங்களோடு ஒப்பிடுகையில், வடதமிழகத்தில் நாம் தமிழர் கட்சி அவ்வளவு வலுவாக இல்லையாம். ‘2024 மக்களவைத் தேர்தலில் ஒரு கோடி வாக்குகள்’ என்ற இலக்கோடு இருக்கும் அந்தக் கட்சி, தற்போது தன் பார்வையை வடக்கு நோக்கித் திரும்பியிருக்கிறது. பா.ம.க அதிருப்தி வாக்குகளைக் கைப்பற்ற வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி இருப்பதால், வி.சி.க-வின் வாக்குவங்கியைக் குறிவைத்திருக்கிறதாம் நாம் தமிழர் கட்சி. ஜூலை 21-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் நடைபெற்ற ராஜேந்திரசோழன் பெருவிழா கூட்டத்தில், நாம் தமிழர் இளைஞர்கள் ‘பறை’ இசைத்தார்கள்.

சீமான்
சீமான்

அப்போது ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். உடனே முழுக்கைச் சட்டையை மடித்துக்கொண்டு அவர்களுடன் மேடையிலிருந்தபடியே சண்டைக்குத் தயாரானார் சீமான். பறை இசைக்கு ஆதரவாக அவர் களமாடியது, பட்டியலின மக்கள் மத்தியில் சீமானின் கிராஃபைக் கூட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள் நாம் தமிழர் தம்பிகள்!