மலையேறாத ஆ‌.ராசா முதல் செந்தில் பாலாஜியின் `டார்கெட்’ வரை - கழுகார் அப்டேட்ஸ்

ஆர்வத்துக்கு அணை போட்ட வேலு! | நம்மாழ்வாருக்குப் பாரத ரத்னா... | புலம்பும் ஆஸ்டின்! | ஸ்டாலின்மீது வருத்தத்தில் கனிமொழி! | அண்ணாமலையின் டார்ச்சர்... | கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்
0Comments
Share
மலையேறாத ஆ‌.ராசா...
கொந்தளிப்பில் கூடலூர் மக்கள்!

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு இரண்டாவது முறையாக எம்.பி-யாக இருக்கும் ஆ.ராசாவின் செயல்பாட்டின் மீது நீலகிரி மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்களாம்‌. குறிப்பாக, அரசுத் தோட்டத் தொழிலாளர்கள் சம்பளப் பிரச்னை, மனித - வனவிலங்கு மோதல்கள், செக்‌ஷன் 17 நிலப் பிரச்னை எனப் போராட்டக்களமாக மாறியிருக்கும் கூடலூர் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லையாம் ஆ.ராசா.

ஆ.ராசா
ஆ.ராசா

அண்மையில், கூடலூர் மக்கள் பிரச்னைகளை விவாதிக்கிறோம் என்ற பெயரில் நீலகிரியிலிருந்து அனைத்துக் கட்சி நிர்வாகிகளையும் மேட்டுப்பாளையத்துக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் ராசா. இப்போதுகூட மலையேறி மக்களைச் சந்திக்கவில்லையே என்று கொந்தளிப்பில் இருக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்!

முதல்வரைக் காணக் காத்திருந்த நிர்வாகிகள்...
ஆர்வத்துக்கு அணை போட்ட வேலு!

முதல்வர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளுக்காக, திருவண்ணாமலைக்கு ‘விசிட்’ செய்தபோது, அவரை அமைச்சர் எ.வ.வேலு தன் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்கிறார்கள் உடன்பிறப்புகள். எந்த ஒரு மாவட்ட நிர்வாகிக்கும் தனியாகச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தராமல், மேடையில்வைத்தே பூங்கொத்து கொடுத்து முதல்வருக்கு அறிமுகப்படுத்தினாராம் அவர்.

திருவண்ணாமலையில் ஸ்டாலின்
திருவண்ணாமலையில் ஸ்டாலின்

தனியே சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அமைச்சர் குறித்தும், அவருடைய மகன் கம்பனின் செயல்பாடுகள் குறித்தும் புகாரளிக்கக் காத்திருந்தார்களாம் நிர்வாகிகள். சுதாரித்துக்கொண்டார் அமைச்சர் வேலு!

நம்மாழ்வாருக்குப் பாரத ரத்னா...
மக்கள் மனதில் இடம்பிடிக்க பா.ஜ.க திட்டம்!

ஜூலை 9, 10 ஆகிய இரண்டு நாள்களும் வேலூர் அருகிலிருக்கும் அரப்பாக்கத்தில் பா.ஜ.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ‘தமிழ்நாட்டு மக்களின் மனதில் தாமரையைப் பதியவைக்க வேண்டுமென்றால், அவர்களுக்குப் பிடித்தவர்களையெல்லாம் பா.ஜ.க கொண்டாட வேண்டும்’ என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

பாஜக மாநில செயற்குழு கூட்டம்
பாஜக மாநில செயற்குழு கூட்டம்

அந்த வகையில் ‘இளையராஜாவுக்கு அடுத்ததாக மறைந்த இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்’ என்பவை உள்ளிட்ட 15 சிறப்புத் தீர்மானங்களையும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

பூமராங் ஆன புகார்...
புலம்பும் ஆஸ்டின்!

தி.மு.க-வில் நடக்கும் ஒன்றியச் செயலாளர் தேர்தல் பிரச்னையில் இது புது ரகம்! ‘கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் நான் தோற்றதற்கு தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஒன்றியச் செயலாளர்கள் சரியாக வேலை செய்யாததுதான் காரணம்... அவர்களைப் பதவியைவிட்டு நீக்க வேண்டும்’ என நேரம் பார்த்து தலைமைக்குப் புகார் தட்டியிருக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ ஆஸ்டின்.

ஆஸ்டின்
ஆஸ்டின்

தனது உறவினர் ஒருவரை ஒன்றியச் செயலாளராக்கவே சட்டசபைத் தேர்தல் குறித்து திடீரென புகாரைக் கிளப்பியிருக்கிறாராம் ஆஸ்டின். கோபமான சிட்டிங் ஒன்றியச் செயலாளர்களோ, ஆஸ்டினின் சொந்த ஒன்றியமான ராஜாக்கமங்கலம் தெற்கு ஒன்றியத்தில் அவருக்குப் பதிவான வாக்குகளையும், தளவாய்சுந்தரம் வாங்கிய ஓட்டுகளையும் தனிப் பட்டியலாகத் தயாரித்து, ‘சொந்த ஒன்றியத்திலேயே செல்வாக்கு இல்லாதவர் ஆஸ்டின்’ என்று தலைமைக்குக் கடிதம் எழுதிவிட்டார்களாம்.

தூத்துக்குடியில் கலைவிழா...
ஸ்டாலின்மீது வருத்தத்தில் கனிமொழி!

முந்தைய தி.மு.க ஆட்சியில் சென்னையில் ‘சங்கமம்’ கலைத் திருவிழாவை நடத்தியதைப்போல, தற்போது தூத்துக்குடியில் ‘நெய்தல்’ கலைத் திருவிழாவை நடத்தி முடித்திருக்கிறார் தூத்துக்குடி எம்.பி கனிமொழி. மக்கள் பங்கேற்புடன் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது நெய்தல் விழா.

தூத்துக்குடி கலை விழா
தூத்துக்குடி கலை விழா

ஆனாலும், இந்த விழாவைத் தொடங்கிவைக்க வராமல், வெறும் வாழ்த்துச் செய்தியுடன் ஸ்டாலின் ஒதுங்கிக்கொண்டது கனிமொழி தரப்புக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றி விளக்கம் கேட்டபோது, அதே நாளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு விழாவில் பங்கேற்பதாக முன்பே தேதி கொடுத்துவிட்டார் முதல்வர் என்று ஆறுதல் சொல்லப்பட்டிருக்கிறது.

அண்ணாமலையின் டார்ச்சர்...
செந்தில் பாலாஜியின் டார்கெட்!

‘மகாராஷ்டிராபோல தமிழ்நாட்டிலும் ஓர் ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார்’ என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொன்னதிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் அப்செட். ‘ஒருவேளை அது உண்மையாக இருக்குமோ?!’ என்று செந்தில் பாலாஜியையும், பிற தி.மு.க எம்.எல்.ஏ-க்களையும் கண்காணித்து அறிக்கை அளிக்குமாறு முதல்வர் அலுவலகத்திலிருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு பிரச்னை சீரியஸாகியிருக்கிறது. இந்தச் சந்தேகத்தை உடைத்து, தன்னை ‘ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாகக்’ காட்டும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் பாலாஜி.

முதல்வரோடு செந்தில் பாலாஜி
முதல்வரோடு செந்தில் பாலாஜி

அதன்படி, கோவைக்குச் செல்லும் முதல்வரைவைத்து, பொள்ளாச்சியில் பொதுக்கூட்டம் நடத்த முடிவெடுத்திருக்கிறார் அவர். கூடவே, கோவையிலுள்ள 3,000 பூத்களிலும் தலா 50 பேரைப் புதிதாகக் கட்சியில் இணைக்க வேண்டும் என்று ‘டார்கெட்’ கொடுத்திருக்கிறாராம். பா.ஜ.க-வினரைத் தூக்கிவந்தால் சிறப்புப் பரிசு என்றும் சொல்லியிருப்பதாகத் தகவல். தொடர்ந்து தன்னைப் பற்றி பேட்டி கொடுத்து டார்ச்சர் செய்யும் அண்ணாமலைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதோடு, முதல்வரிடமும் நல்ல பெயர் வாங்கும் முனைப்போடுதான் இவ்வளவு தீவிரமாகக் களமாடுகிறாராம் செந்தில் பாலாஜி!