மீண்டும் `ஆக்டிவ்’ ஆன தினகரன் முதல் அதிமுக-வுக்கு `அல்வா’ கொடுத்த ரங்கசாமி வரை - கழுகார் அப்டேட்ஸ்

மேலிடத்து ஆதரவு... மீண்டும் ‘ஆக்டிவ்’ ஆன தினகரன் | அடம்பிடிக்கும் அண்ணாமலை... அனல் பறக்கும் கமலாலயம் | இணையம் மூலம் கலந்துகொண்ட பினராயி... | மீண்டும் கோயில் விழாவுக்குத் தயாராகும் அமைச்சர்... எதிர்க்கத் திட்டமிட்டும் பா.ஜ.க!

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்
0Comments
Share
‘டீலிங்’ முடித்த எடப்பாடி...
‘சைலன்ட்’ ஆன பன்னீர் ஆதரவாளர்!

ஒற்றைத் தலைமை பிரச்னை உக்கிரமடைந்திருக்கும் சூழலில், ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர் ஒருவர், எடப்பாடி பக்கம் சாய்ந்திருக்கிறார். அவர் திருநெல்வேலி மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் தச்சை கணேசராஜா. இத்தனைக்கும் ராஜ்ய சபா வேட்பாளர் பட்டியலுக்காக ஓ.பி.எஸ் கொடுத்த லிஸ்ட்டில் கணேசராஜாவின் பெயர் இருந்தது. ஒற்றைத் தலைமை விவகாரம் எழுப்பப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்கூட ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாகத்தான் பேசினார் கணேசராஜா. ஓ.பி.எஸ் வீட்டில் நடந்த ஆலோசனைகளிலும் கலந்துகொண்டார். ஆனால், எடப்பாடி தரப்பிலிருந்து அழைப்பு வந்தபோது, ஒரேயடியாக மறுக்காமல் 'டீலிங்' பேசினாராம் கணேசராஜா. ‘சட்டமன்றத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் நான் செலவழித்த ‘எனர்ஜியை’ முழுவதும் திரும்பக் கொடுக்க வேண்டும். என்னுடைய மா.செ பதவியைப் பறிக்கக் கூடாது’ என்பதே அந்த டீலிங்காம். எடப்பாடி தரப்பு அதற்கு டபுள் ஓ.கே சொன்னதாலேயே அண்ணன் ‘சைலன்ட்’ ஆகிவிட்டார் என்கிறார்கள் திருநெல்வேலிப் பக்கம்!

மேலிடத்து ஆதரவு...
மீண்டும் ‘ஆக்டிவ்’ ஆன தினகரன்!

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சில காலம் ‘சைலன்ட்’ மோடிலிருந்த தினகரன், இப்போது மாவட்டவாரியாகச் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்திவருகிறார். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகச் சொல்லப்பட்ட விவகாரத்தில், அமலாக்கத்துறையின் எஃப்.ஐ-ஆரில் தினகரன் பெயர் இடம்பெறாமல்போனதே பா.ஜ.க-வின் அனுக்கிரகமாகத்தான் பார்க்கப்பட்டது.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

தற்போது அ.தி.மு.க-வுக்குள் குழப்பம் ஏற்பட்டிருக்கும் இந்தச் சூழலில், “நீங்கள் இறங்கி வேலை செய்யுங்கள். தகுந்த வேளை வரும்போது ஆதரவு தருகிறோம்” என்று பா.ஜ.க மேலிடத்திலிருந்து தகவல் வந்திருக்கிறதாம். இந்த உற்சாகமே தினகரனின் ‘ஆக்டிவ்’-க்குக் காரணமாம். உண்மையிலேயே உதவப்போகிறார்களா அல்லது பிரித்தாளும் சூழ்ச்சியா என்பது பா.ஜ.க-வுக்கே வெளிச்சம்!

அடம்பிடிக்கும் அண்ணாமலை...
அனல் பறக்கும் கமலாலயம்!

பா.ஜ.க நிர்வாகிகள் நியமனம் தொடங்கி, மீடியாக்களில் யார் பேசுவது, என்ன பேசுவது என்பதுவரை தான் சொல்வதுதான் நடக்க வேண்டும் என அடம்பிடிக்கிறாராம் அண்ணாமலை. கடுப்பான சீனியர்கள் வடக்கே புகார் அனுப்பியவண்ணம் இருக்கிறார்கள். சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு தொடர்புடையவர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையே பெரிய வாக்குவாதம் நடந்திருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

‘ஒண்ணு அண்ணாமலை இருக்கணும், இல்லைன்னா நான் இருக்கணும்’ என அதில் ஒரு சீனியர் டெல்லிக்கும் நாக்பூருக்கும் புகார் அனுப்ப மற்ற இருவரும் ‘இனி கமலாலயம் பக்கமே வர மாட்டோம்’ எனக் கூறி வெளியேறிவிட்டார்களாம். “விரைவில் கமலாலயத்தில் அனல் பறக்கும், பூகம்பம் வெடிக்கும்” என்று ‘பில்டப்’ கொடுக்கிறார்கள் அண்ணாமலைக்கு எதிரானவர்கள்!

இணையம் மூலம் கலந்துகொண்ட பினராயி...
எதிர்க்கட்சிகளுக்கு பயந்து புறக்கணிப்பா?

உலகிலுள்ள அனைத்து மலையாளி தொழிலதிபர்களையும் ஒருங்கிணைக்கும், ‘உலக கேரள சபா’வின் மூன்றாவது மாநாடு திருவனந்தபுரத்தில் மூன்று நாள்கள் நடைபெற்றன. மாநாட்டை கவர்னர் ஆரிஃப் முஹமதுகான் தொடங்கிவைத்தார். நிறைவு நாளில் பங்கேற்பதாக இருந்த முதல்வர் பினராயி விஜயன் நிகழ்ச்சிக்கு நேரில் செல்லவே இல்லை.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இணையம் மூலமே அவர் முகம் காட்டினார். “முதல்வர் பினராயி விஜயனுக்கு உடல்நிலை சரியில்லாததால் நேரில் கலந்துகொள்ளவில்லை” என்று ஆளும் தரப்பினர் கூறினர். ஆனால், ‘தங்கக் கடத்தல் வழக்கு விவகாரத்தைக் கையில் எடுத்து, அவர் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவருவதைக் கண்டு பயந்துதான், முதல்வர் பினராயி விஜயன் இந்த நிகழ்ச்சிக்கே வராமல் புறக்கணித்துவிட்டார்’ என்கிறார்கள் காங்கிரஸார்!

அழுத்தம் கொடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ...
கொலை வழக்கில் வி.சி.க நிர்வாகி!

புதுச்சேரி ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன், ஜூன் 19-ம் அதிகாலை காட்பாடி காந்தி நகரிலுள்ள வணிக வளாகத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். நிலப் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையின் முடிவிலேயே அவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதலில் சந்தேக மரணமாக வழக்கு பதிந்து விசாரணை நடத்திவந்த போலீஸார், இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் நீல சந்திரகுமாரை வழக்கின் முதல் குற்றவாளியாகச் சேர்த்திருக்கிறார்கள்.

நீல சந்திரகுமார் மீது ஏற்கெனவே கொலை முயற்சி உட்பட எட்டு வழக்குகள் இருக்கின்றன. வேலூர் மாவட்ட போலீஸாரால் கண்காணிக்கப்படும் ரௌடிகள் பட்டியலிலும் அவர் பெயர் இருக்கிறது. “தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்புப் புகார்கள் நீல சந்திரகுமார் மீது அடுக்கப்படுவதால், அவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததே, நீல சந்திரகுமார் மீது போலீஸார் துணிந்து வழக்கு பதியக் காரணமாம்!

மீண்டும் கோயில் விழாவுக்குத் தயாராகும் அமைச்சர்...
எதிர்க்கத் திட்டமிட்டும் பா.ஜ.க!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 400 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 6-ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகள் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னின்று நடத்திவருகிறார்.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

ஏற்கெனவே வேளிமலை குமாரசுவாமி கோயில் தேரோட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் மனோ தங்கராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பா.ஜ.க., இந்த விழாவிலும் அமைச்சர் பங்கேற்க எதிர்ப்பு தெரிவிக்கத் தயாராகிவருகிறது. அதை முறியடிப்பது பற்றி அமைச்சர் தரப்பும் ஆலோசித்துவருதால், திருவட்டாறில் இப்போதே பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது!

‘அல்வா’ கொடுத்த முதல்வர் ரங்கசாமி...
புதுச்சேரியில் புலம்பும் அ.தி.மு.க நிர்வாகிகள்!

2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க., அனைத்து இடங்களிலும் தோற்றது. அதையடுத்து, “எங்களுக்கு ஒரு வாரியத் தலைவர் பதவியாவது கொடுங்கள்” என்று ரங்கசாமியிடம் கேட்டது அ.தி.மு.க. அவர் மசியாததால், “காரைக்கால் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்ற எங்கள் கட்சி அசனாவுக்கு ஹஜ் கமிட்டி பதவியாவது கொடுங்கள்” என்று இறங்கிவந்தது அ.தி.மு.க. “சரி பார்க்கலாம்...” என்று தலையாட்டிவந்த முதல்வர் ரங்கசாமி, அந்த ஹஜ் கமிட்டி தலைவர் பதவியை வணிகர் சங்கத்தைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவருக்குத் தாரை வார்த்துவிட்டாராம்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரின் பரிந்துரையின் பேரிலேயே இந்த நியமனம் நடந்திருப்பதை அறிந்து நொந்துபோன அ.தி.மு.க-வினர், “ரங்கசாமிக்கு எதிரியாக இருந்துகூட சாதித்துக்கொள்ளலாம். கூடவே இருந்தால் இப்படி முதுகில்தான் குத்து வாங்க வேண்டும். ‘அம்மா’வுக்கே தண்ணீர் காட்டியவர்தானே இவர்” என்று புலம்பிவருகிறார்கள்!