இந்திய இசைகள் தமிழிசையில் இருந்து பிறந்தவை: கருணாமிர்த சாகரம் குறித்த குட்டி ரேவதியின் ஆவணப்படம்

ஆபிரகாம் பண்டிதரின் வாழ்வு, கருணாமிர்த சாகரம் என்கிற அவரது ஆகச்சிறந்த ஆய்வு மற்றும் தமிழிசை குறித்த கவனத்தை பெரும்பான்மை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே, இந்த ஆவணப்படத்தின் நோக்கம்.

Published:Updated:
குட்டி ரேவதி
குட்டி ரேவதி ( பாலாஜி )
0Comments
Share

தமிழிசையின் முன்னோடியான ஆபிரகாம் பண்டிதரின் 'கருணாமிர்த சாகரம்' நூல் குறித்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார் கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான குட்டி ரேவதி.

ஏ.ஆர்.ரஹ்மான் ஃபவுண்டேஷன் தயாரித்திருக்கும் இந்த ஆவணப்படம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் நியூயார்க் தமிழ் விழாவில் வெளியிடப்பட்டு, திரையிடப்பட்டிருக்கிறது.

கருணாமிர்த சாகரம் நூல் குறித்தும் இந்த ஆவணப்பட உருவாக்கம் குறித்தும் ஆவணப்பட இயக்குநர் குட்டி ரேவதியிடம் பேசினோம்.

ஆபிரகாம் பண்டிதர்
ஆபிரகாம் பண்டிதர்

"ஆபிரகாம் பண்டிதர் இன்றைய தென்காசி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்கிற சிற்றூரில், 1859ம் ஆண்டு பிறந்தவர். 1919ம் ஆண்டு வரை வாழ்ந்த அவர் இசை, விவசாயம், சித்த மருத்துவம், ஜோதிடம், அச்சுக்கலை, புகைப்படக்கலை உள்ளிட்ட பல துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவராக விளங்கியிருக்கிறார்.

சுருளி மலையில் உள்ள கருணானந்த சித்தரிடம், மக்களின் நோய் தீர்க்க சித்த மருத்துவம் கற்றுத் தேர்ந்தார். அன்றைய காலத்தில் உயிரைக் கொல்லும் கொடிய ப்ளேக் நோய்க்கு, சித்த மருத்துவத்தின் மூலம் மருந்துகள் தயாரித்து பிரிட்டிஷ் இந்தியாவின் பல பகுதிகளுக்கு அனுப்பியுள்ளார்.

எளிமையான மருந்து செய்முறைகளை உருவாக்கினார். தீவிர சிகிச்சை மற்றும் உயிர் காக்கும் சிகிச்சைகளுக்காக சித்த மருத்துவத்தில் மருந்துகளைக் கண்டறிந்து, மருத்துவத்துறையில் உச்சம் பெற்றவராக இருந்தார்.

தென்காசி அருகே பிறந்த இவர், திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூரில் வாழ்ந்தார். இவர் எழுதிய கருணாமிர்த சகாரம் என்கிற ஆய்வு நூல், தமிழிசை இயக்கத்தின் அரும்பெரும் நூலாகப் பார்க்கப்படுகிறது. கர்நாடக இசை, இந்துஸ்தானி உள்ளிட்ட இந்திய இசைகள் அனைத்தும் தமிழிசையில் இருந்துதான் பிறந்தன என்பதை, இந்நூல் வழியே பண்டிதர் நிறுவியுள்ளார்.

தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நம் இலக்கியங்களில் இருந்து, இதற்கான ஆதாரங்களைத் திரட்டி முன் வைத்திருக்கிறார். இந்நூலுக்காக 15 ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். 1300-க்கும் அதிகமான பக்கங்களுடைய இந்நூலினை ஆவணப்படுத்த வேண்டும் என்பது ஏ.ஆர்.ரஹ்மானுடைய விருப்பம். அவருக்கு தமிழிசை சார்ந்த ஈடுபாடு மிகவும் அதிகம். ஆகவேதான் இந்த ஆவணப்படத்தினை அவரது ஏ.ஆர். ரஹ்மான் ஃபவுண்டேஷன் சார்பில் அவர் தயாரித்துள்ளார்" என்றவர், ஆவணப்பட உருவாக்கம் குறித்துப் பேசினார்.

கருணாமிர்த சகாரம்
கருணாமிர்த சகாரம்

"இந்நூலினை காட்சிப்படுத்துவது என்பது மிகப்பெரும் சவாலானது. அச்சவாலை ஏற்றுதான் இந்த ஆவணப்படத்தை இயக்கினேன். பண்டிதர் பிறந்த சாம்பவர் வடகரை கிராமம் மற்றும் திண்டுக்கல், தஞ்சாவூரில் அவர் வாழ்ந்த இடங்களையெல்லாம் ஆவணப்படுத்தியிருக்கிறோம்.

பண்டிதர் குடும்பத்தினர் தற்போது உலகின் வெவ்வேறு நாடுகளில் வாழ்கின்றனர். அவர்களிடமும் பேட்டி எடுக்க வேண்டியிருந்தது. கருணாமிர்த சாகரம் நூலினைப் பலரும் ஆய்வு செய்திருக்கிறார்கள். இந்நூல் குறித்து அவர்களிடமும் பேட்டி எடுத்தோம்.

அமுதா பாண்டியன், டி.கே.எஸ்.கலைவாணன், நிர்மல் செல்வமணி, அருள் செல்வி, அங்கயற்கண்ணி, மல்லிகா துரைபாண்டி, தெல்மா ஐசக், பத்மசிங் ஐசக், சிஸ்டர் மார்கரெட், நா.மம்மது, லண்டனில் வசிக்கும் பொன்னம்மாள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் எஸ்.பி. ஆம்புரோஸ் உள்ளிட்ட பண்டிதரோடு தொடர்புடையவர்கள் மற்றும் பண்டிதரின் நூலை ஆய்வு செய்த இசை அறிஞர்களின் பேட்டிகள், இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா, இந்த ஆவணப்படத்துக்குத் தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டு திறம்பட செய்தார். 5 ஆண்டுகள் உருவாக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த ஆவணப்படம், மூன்றரை மணி நேரத்தில் உருவாகியிருக்கிறது.

அந்நூலைப் பற்றியும் பண்டிதரின் மகத்தான பணி குறித்தும் கூற இந்த மூன்றரை மணி நேரம் போதாது. கருணாமிர்த சாகரம் நூல் குறித்து வெவ்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்த மேலும் சிலரிடம் பேட்டி கண்டு, இன்னும் சில காலம் உழைத்து அடுத்த பாகத்தைக் கொண்டு வரும் திட்டம் இருக்கிறது" என்றவரிடம், நியூயார்க்கில் நடைபெற்ற வெளியீடு மற்றும் திரையிடலுக்கான வரவேற்பு குறித்துக் கேட்டோம்...

இந்திய இசைகள் தமிழிசையில் இருந்து பிறந்தவை: கருணாமிர்த சாகரம் குறித்த குட்டி ரேவதியின் ஆவணப்படம்

"வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் நியூயார்க் தமிழ் விழாவில் நடைபெற்ற திரையிடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கருணாமிர்த சாகரம் நூலின் ஆவணப்படம் வழியாக, தமிழிசை குறித்த அறிதலையும் ஏற்படுத்த முடியும். ஆபிரகாம் பண்டிதர் மறைந்து நூறாண்டுகள் கடந்து விட்டன. தமிழிசைக்காக ஆகப்பெரும் பணியைச் செய்துள்ள அவரை என்றும் நாம் நினைவுகூர வேண்டும்.

தமிழிசை வரலாற்றில் அழிக்க முடியாத தடத்தைப் பதித்திருக்கும் அவரது அரும்பணியைப் போற்றும் விதமாகவே இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறேன். ஆபிரகாம் பண்டிதரின் வாழ்வு, கருணாமிர்த சாகரம் என்கிற அவரது ஆகச்சிறந்த ஆய்வு மற்றும் தமிழிசை குறித்த கவனத்தை பெரும்பான்மை மக்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதே இந்த ஆவணப்படத்தின் நோக்கம்" என்கிறார் குட்டி ரேவதி.