பொதுக்குழு வழக்கு தீர்ப்புக்குப் பிறகு... எடப்பாடியிடம் எஞ்சியுள்ள ஆப்ஷன்கள் என்னென்ன?!

பொதுக்குழுவைக் கூட்டித் தன்னைப் பொதுச்செயலாளர் என எடப்பாடி அறிவித்துக்கொண்டது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதையடுத்து கட்சியில் அவருக்குள்ள ஆப்ஷன்கள் என்னென்ன என்ற விசாரணையில் இறங்கினோம்.

Published:Updated:
எடப்பாடி - ஓ.பி.எஸ்
எடப்பாடி - ஓ.பி.எஸ்
0Comments
Share

`இணைந்து செயல்படலாம்’ என ஓ.பி.எஸ் அழைக்க, `முடியாது’ என எடப்பாடி முழங்க, அ.தி.மு.க-வில் அதிரடிக்குப் பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கின்றன தினசரி காட்சிகள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரட்டைத் தலைமையில் இயங்கிவந்த அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு புகைந்துகொண்டிருக்க, `அ.தி.மு.க ஒற்றைத் தலைமையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெடியைப் பற்றவைத்தார். அடுத்தடுத்து நடந்த காட்சிகளெல்லாம் சினிமாவையும் மிஞ்சும் அரசியல் கலவரங்கள். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஓர் அணியாகவும், எடப்பாடி பழனிசாமி மற்றோர் அணியாகவும் இருந்து ஒற்றைத் தலைமைதான் வேண்டும் எனவும், இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டும் எனவும் நீதிமன்றக் கதவுகளைத் தட்டத் தொடங்கினர்.

ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடைவிதிக்கவும், நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கவும் கோரி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும், பொதுக்குழு உறுப்பினரான அம்மன் பி.வைரமுத்துவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

வழக்கு விசாரணையில் எடப்பாடிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வர, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். இந்தப் பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கை தனிநீதிபதி மூலம் விசாரித்து இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டே நாள்களில் விசாரணையை முடித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ‘பொதுக்குழு செல்லாது’ என ஆகஸ்ட் 17-ம் தேதி தீர்ப்பளித்தார்.

பொதுக்குழு தொடர்பான இந்தத் தீர்ப்பை அடுத்து எடப்பாடிக்கு எஞ்சியுள்ள ஆப்ஷன்கள் என்னென்ன என்பது குறித்து விசாரித்தோம்.

தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி தரப்பு மேல்முறையீட்டுக்குச் சென்றிருக்கிறது. அந்த முறையீட்டு மனு நீதிபதிகள் துரைசாமி, எம்.சுந்தர்மோகன் அடங்கிய அமர்வில் ஆகஸ்ட் 22-ம் தேதி (இன்று) விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த வழக்கை ஏற்றிருக்கும் உயர் நீதிமன்றம், ஓ.பி.எஸ் தரப்புக்கு பதில் கேட்டு நோட்டீஸ் அனுப்பலாம். விசாரணையில் பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை ரத்துசெய்து இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்படலாம். அதை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு மேல்முறையீடு எனத் தொடர்ந்து இந்த வழக்கு நீண்டுகொண்டேதான் செல்லும்.

மறுபுறம், உயர் நீதிமன்றத் தனி நீதிபதி அளித்துள்ள தீர்ப்பில், அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தை ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறது. பொதுக்குழுவைக் கூட்டும்போது, அதில் கொண்டுவரப்படும் தீர்மானங்களில் ஓ.பி.எஸ் உடன்பாடு இல்லையென்று சொன்னால் அப்போது இ.பி.எஸ் நீதிமன்றத்தை நாடலாம்.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

நீதிமன்றம் நியமிக்கும் ஆணையர் முன் பொதுக்குழு நடத்தப்படும். அதில் பெரும்பாலானவர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ, அவர்கள் என்ன தீர்மானத்தை முன்வைக்கிறார்களோ அது நிறைவேற்றப்படும். அப்படி, எடப்பாடி தன்னைப் பொதுச்செயலாளராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றினால் அது நிறைவேற்றப்படும். ஆனால், இவையெல்லாம் நடந்து முடியக் குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகும். எனவே, ‘இப்போது வந்திருக்கும் தீர்ப்பு ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாகப் பார்க்கப்பட்டாலும், அது முழுமையான வெற்றியில்லை’ என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து.