ஜெயலலிதாவைக் கேட்ட இரண்டே கேள்விகள் @1969

1969ல் ஜெயலலிதா விகடனுக்கு அளித்தி பேட்டி...

Published:Updated:
MGR, Jayalalithaa
MGR, Jayalalithaa
0Comments
Share

உங்களோடு நடித்த நாயகர்களைப் பற்றிச் சொல்ல முடியுமா? 

“சினிமா உலகைப் பொறுத்த வரையில், நான் எம். ஜி. ஆர். அவர்களுக்கு ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறேன். எங்கள் முதல் சந்திப்பே சுவாரஸ்யமானது. வெண்ணிற ஆடையில் நடிக்கும் முன், சில கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது, 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை எடுக்க பந்துலு திட்டமிட்டிருந்தார், அதில் எம். ஜி. ஆர், அவர்கள் தான் கதாநாயகன், பந்துலு தயாரித்துக் கொண்டிருந்த ஒரு கன்னடப் படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த என்னையே ஆயிரத்தில் ஒருவனிலும் நடிக்க வைக்க வேண்டும் என்பது பந்துலுவின் விருப்பும். மெதுவாக என்னைப் பற்றி எம். ஜி. ஆர். அவர்களிடம் சொல்லி விட்டார் பந்துலு, நான் நடித்த கன்னடப் படத்தைத் தான் பார்க்க விரும்புவதாக அவர் சொன்னாராம். அவர் பார்த்து சம்மதம் தெரிவித்த பிறகுதான் என்னை நடிக்க வைப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று பேசிக் கொண்டார்கள்.

Jayalalithaa
Jayalalithaa
Vikatan Archives

தியேட்டரில் அவர்களோடு தானும் உட்கார்ந்து, கன்னடப்படம் பார்த்தேன். படம் முடிந்தது. எம். ஜி. ஆர். அவர்கள் எழுந்து, பந்துலுவின் பக்கம் திரும்பி, ‘சரி’ என்பது போலத்தலையை ஆட்டி விட்டுப்போனார். என் வாழ்விலேயே அன்றுதான் பெரும் சந்தோஷம் அடைந்தேன்.

அவர் மற்றவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை குறையவே குறையாது. யாரிடமும் சமமாகப் பழகுவார்.தன்னைப் பற்றியும் தன் பாத்திரத்தைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கமாட்டார்; செட்டில் தன்னுடன் நடிக்கும் அத்தனை பேரையும் கவனித்துச் சொல்லிக் கொடுப்பார். அவர் குணத்திற்கு ஒரு சிறு உதாரணம்!‘ கண்ணன் என் காதலன்’ படப்பிடிப்பின் போது ஒரு நாள் காலை அவருக்கு படப்பிடிப்பு முடிந்தது. காரில் ஏறப்போனவர், “மத்தியானம் என்ன எடுக்கப்போகிறீர்கள்?” என்று கேட்டார். “ஜெயலலிதா மாடிப்படியில், சக்கர நாற்காலியில் உருண்டு விழும் காட்சி...!” என்றார் டைரக்டர். உடனே காரை விட்டு இறங்கி வந்துவிட்டார்.“

அதை எடுக்கும் போது, நானும் கூட, இருக்கிறேன். அது கொஞ்சம் ரிஸ்கானது.....? அந்தப் பெண் விழுந்து விட்டால்?” என்று சொல்லிக் கொண்டே அன்று எங்களுக்கு உதவி செய்ய வந்து விட்டார். படத்தில் சக்கர நாற்காலியில் நான் உட்கார்ந்து கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் மாடிப்படி ஒரம்-விளிம்பு வரை வரவேண்டும். ஓர் அங்குலம் தவறினால் உருண்டு விடுவேன். எம். ஜி. ஆர். அவர்கள், தானே அந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, பின்னால் கயிற்றைச் சரியாகக் கட்டச் சொல்லி, ஒரு முறைக்கு பத்து முறை தானே ஒத்திகை பார்த்து விட்டு, அதில் அபாயம் இல்லை என்று நிரூபணம் ஆன பிறகுதான் என்னை அந்தச் சக்கர நாற்காலியில் உட்கார்த்து நடிக்கச் சொன்னார்.

Jayalalithaa
Jayalalithaa
Vikatan Archives

அரசியல், கட்சி, சொந்தப் படம், சமூக சேவை. இப்படி அவருக்குப் பல வேலைகன் இருந்த போதிலும், அன்று எனக்காக ஒரு சக நடிகையின் பாதுகாப்புக்காக எங்களோடு இருந்து அந்தப் படப்பிடிப்பை நடத்திக் கொடுத்ததை தான் எப்படி மறப்பேன்;

‘கலகல’வென்று பேசுவார். அதில் நகைச்சுவை கலந்திருக்கும். நானும் பதிலுக்கு ‘லொட லொட’வென்று பேசி வைப்பேன். இதற்காக அவர் எனக்கு சூட்டிய பெயர் ‘வாயாடி!’முன்பு என் தாயார், சிவாஜி அவர்களோடு நடிக்கும் போது, சிறுமியாக இருந்த நான் படப்பிடிப்பிற்கு கூடப் போவேன். செட்டில் 'ஏய்! பாப்பா!' என்று என் கன்னத்தில் கிள்ளி விளையாடுவார் சிவாஜி.

அன்று வளராத ஒரு பாப்பாவாகத் தான் இருந்தேன். இன்றும் என்னை வளர்ந்த ஒரு பாப்பாவாகவேதான் நினைக்கிறார் சிவாஜி. “கலாட்டா கல்யாணத்தில் நான், அவரோடு முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கும்போது எனக்கு என்னவோ, ரொம்ப நாள் பழகிய ஒருவரோடு நடிப்பது போலத்தான் இருந்தது. ஆனால் அவரோ, முதல் நாள் காதல் காட்சிகளில் நடிக்கும் போது இரண்டு மூன்று முறை சீரியஸாக நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். ஏனோ முடியவில்லை. பிறகு தன்னையும் மீறிச் சிரித்து விட்டார்.“ஏன் சிரிக்க்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்;

Jayalalithaa
Jayalalithaa
Vikatan Archives

“நானும் உன்னோடு இந்தக் காதல் காட்சியில் உணர்ச்சியோடு நடிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், எனக்கு ஒரு குழந்தையோடு காதல் காட்சியில் நடிப்பது போலத்தான் இருக்கிறது!” என்றார். எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது. தான் நடிக்கும்போது, கூட நடிக்கும் மற்ற நடிகர்களுக்கு தானே நடித்து, தானே உணர்ச்சிகளை முகத்தில் காட்டி, சொல்லிக் கொடுப்பார்.

நடிப்பில் பல நல்ல யோசனைகளைச் சொல்வார். ஒரு நாள் ‘எங்க ஊர் ராஜா’ படப்பிடிப்பு முடித்ததும். குரலை மட்டும் பதிவு செய்தார்கள். அவர் அதில் தந்தையாகவும் மகனாகவும் நடித்தார் அல்லவா? தந்தை - மகன் இரண்டு பேர் குரலும் தேவைப்பட்டது.தனித் தனியாக எடுப்பார்கள் என்று நினைத்தேன். முதலில் மகனாக சாதாரணமாகப்பேசினார். ஒலிப்பதிவு இயந்திரம் ஓடிக் கொண்டே இருந்தது. ஒரே நொடி தான்! தன் குரலை மாற்றிக் கொண்டு, அதில் நடுக்கத்தைக் கொடுத்து, இருமலையும் சேர்த்து, அழுத்தந்திருத்தமாக தந்தையாகவும் பேசினார். ஒரே சமயத்தில் மகனாகவும் தந்தையாகவும் மாறிப் பேசியதைக் கண்டு நான் ஆச்சரியமடைந்தேன். நடிப்பு அவர் உடலிலேயே ஊறிப் போயிருக்குமோ என்று கூட வியந்தேன்.

செட்டில் குறிப்பிட்ட நேரத்தில் ‘டாண்’ என்று ரெடியாக நிற்பார். தாமதகாக வருவது, என்ற பேச்சே இவரிடம் கிடையாது.

நடிக்கும்போது தன் தொழிலைத் தவிர வேறு எதையும் இழுத்துப் போட்டுக் கொள்ளமாட்டார்.

'செட்டில் எப்போதும் ஏதாவது கலாட்டா செய்து கொண்டே, ஜாலியாக இருப்பார் ஜெய் சங்கர். எதைப் பற்றியும் அதிகமாக கவலைப்படவே மாட்டார். நடிப்புத் தொழிலில் அசாத்திய ஆர்வம் உண்டு. அனாவசியமான ‘பாலிடிக்ஸ்’ கிடையாது. மற்றவர்களைப்பற்றியும் அனாவசியமாகப் பேசமாட்டார். ரவிச்சந்தருக்கு, கதாநாயகனுக்குத் தேவையான தோற்றம்-நடிப்பு-குரல்-உயரம்-உடல்-முகவெட்டு எல்லாம் இருக்கிறது. இருந்தும் அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதே கிடையாது என்று தான் நான் நினைக்கிறேன். நான் அவரோடு சேர்ந்து நடித்த முதல் படத்தில், அவர் தன் தொழிலில் காட்டிய அக்கறையைப் போகப் போக மற்ற படங்களில் என்னால் பார்க்க முடியவில்லை.

Jayalalithaa
Jayalalithaa
Vikatan Archives

எஸ். எஸ். ஆரோடு ‘மணி மகுட’த்தில் நடித்தேன். அவர் ‘கணீர் கணீர்' என்று, சொல் சுத்தமாக வசனம் பேசுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாதாரணமாக ஒரு நடிகரிடமோ, அல்லது நடிகையிடமோ வசனத்தைக் கொடுத்து விட்டால் இரண்டாம் முறை அதைத் திருப்பிப் படிக்கும் போது தான் ‘எந்த இடத்தில் குரலை உயர்த்த வேண்டும். எந்த இடத்தில் அழுத்தம் தர வேண்டும். எந்த இடத்தைப் ‘பளீர்’ என்று சொல்ல வேண்டும்’ என்று யோசிப்பார்கள். ஆனால், எஸ். எஸ். ஆர். அப்படி அல்ல. முதன் முறை படிக்கும்போதே அதை அவர் பல முறை படித்தது போல அதற்கு உயிர் கொடுத்துப் படிப்பார். அவருக்கு இருக்கும் இந்தப் பழக்கம் ஒரு வரப்பிரசாதம் என்று தான் நினைக்கிறேன்!

இரண்டு வருடங்களுக்கு முன், மேஜர் சந்திரகாந்தில் ஏ. வி. எம். ராஜனோடு நடித்தேன். அப்போது ‘செட்’டில் அவர் பரம சாதுவாகத்தான் இருந்தார். தான் உண்டு, தன் தொழில் உண்டு என்று இருப்பார். அவர் ‘கல கல’வென்று பெரிய கலாட்டா செய்தோ, ஜோக்குகள் அடித்தோ, மற்றவர்களைச் சிரிக்க வைத்தோ நான் பார்த்தது கிடையாது. இன்று எப்படியோ எனக்குத் தெரியாது!

திரைப்படங்களில் நடிக்க வராமலிருந்தால், வேறு என்ன செய்திருப்பீர்கள்?

“எனக்கு ஆங்கில இலக்கியம் படித்துப் பட்டம் வாங்க வேண்டும் என்று ஆசை. ஒரு வேளை, படித்துப் பட்டம் வாங்கி, ஆங்கில இலக்கியத்தைக் கரைத்துக் குடித்துக் கொண்டிருப்பேன்! ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படம் போடக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆசை. ஒரு வேளை அப்படிப் போயிருந்தால், இன்று பல நல்ல ஒவியங்களைத் தீட்டித் தள்ளிக் கொண்டிருப்பேன் !

Jayalalithaa
Jayalalithaa
Vikatan Archives

பால சரஸ்வதி-யாமினி கிருஷ்ணமூர்த்தி இவர்களைப் போல், ‘கிளாஸிகல்’ நடனத்தில் உலகப் புகழ் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த முயற்சியில் இன்றும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அரசியலில் தீவிரமாக இறங்கி, பெரிய அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஒரு வேளை நான் சினிமாவிற்கு வராமலிருந்திருந்தால், இன்று தேர்தலுக்காக அல்லது உப தேர்தலுக்காக எங்காவது மேடையில் பேசி வெளுத்து வாங்கிக் கொண்டிருப்பேன்!

ஆனால் ஒன்று ‘இப்படி சினிமாவிற்கு வந்து நடிப்போம்’ என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எல்லாம் ‘தலைவிதி’ தான்! ஆனால், கொஞ்சம் அதிர்ஷ்டமான தலைவிதி!

(10.08.1969 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)