ஜெ., மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஆணைய அறிக்கைகள்: அதிமுக-வுக்கு நெருக்கடியா?!

“2024 தேர்தலின்போது அதிமுக இணைந்தார்கள் என்றால், அந்த நேரத்தில் இந்த இரு ஆணையத்தின் அறிக்கைகளை திமுக எவ்வாறு பயன்படுத்தப்போகிறது என்பதை பொறுத்துத்தான் இது அரசியலா என்று பார்க்க முடியும்.” - ப்ரியன்

Published:Updated:
ஆறுமுகசாமி ஆணையம்
ஆறுமுகசாமி ஆணையம்
0Comments
Share

``முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதைத் தற்போது சொல்ல மாட்டோம். அந்தப் பிரச்னையை சட்டமன்றத்தில் வெளிப்படையாகவைத்து, சட்டமன்றத்தின் மூலமாகவே முறையான நடவடிக்கையை எடுப்போம் என்று நான் உறுதியளிக்கிறேன். அதேபோல தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றிய விசாரணை அறிக்கையும் ஒரு மாதத்துக்கு முன்னதாக கிடைத்தது. அதையும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்தோம். அதன்மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அறிக்கையையும் சட்டமன்றத்தில் வைக்கவிருக்கிறோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

உட்கட்சிப்பூசல், கொடநாடு வழக்கு எனப் பல நெருக்கடிகளைச் சந்தித்துவரும் அதிமுக-வுக்கு இந்த இரு அறிக்கைகள் குறித்து முதல்வர் பேசியிருப்பது மேலும் தலைவலியை ஏற்படுத்துமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “திமுக-வுக்கு இதில் எந்தவிதமான நன்மையும் இல்லை. அதிமுக பிரிந்திருக்கிற வரை திமுக-வுக்கு ஒரு பிரச்னையும் கிடையாது. இன்றைய சூழலில் திமுக-வைப் பொறுத்தவரை அரசியல்ரீதியாக வலுவாகத்தான் உள்ளனர். ஸ்டாலின் எதிர்க்கக்கூடிய தலைவர்கள் அதிமுக-வில் பிரிந்திருக்கிறார்கள். பாஜக அண்ணாமலையும் அந்த அளவுக்கு இல்லை. அவர் கத்துகிறாரே தவிர வளர்ந்துட்டாரானு சொல்ல முடியாது. எனவே திமுக-வும், ஸ்டாலினும் பலமாக இருக்கும் இமேஜ் உருவாக்கியதால் அவர்களுக்கு இதைவைத்துத்தான் அரசியல் செய்ய வேண்டும் என்பதில்லை.

இதையடுத்து சசிகலா, விஜயபாஸ்கர், ராம் மோகன் ராவ், டாக்டர் சிவக்குமார் ஆகிய நான்கு பேரின் மீது அரசுரீதியிலான விசாரணை வேண்டுமென ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது. என்ன காரணத்துக்காக இந்த விசாரணை என்பது தெரிந்தால், அது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுப்பும். அந்த விசாரணைக்கும்கூட திமுக அரசு சட்டரீதியிலான ஒப்புதல் வாங்கப்போகிறார்களாம். ஒருவேளை சட்டரீதியிலான ஒப்புதல் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். அப்படிக் கிடைக்கும்போது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரிக்கலாம், தனி ஏஜென்சி அமைக்கலாம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தற்சமயம் திமுக-வுக்கு இதன் மூலம் ஆதாயம் இருப்பதாகப் பார்க்கவில்லை.

ப்ரியன்
ப்ரியன்

ஸ்டெர்லைட் விஷயத்திலும் எடப்பாடி மீது கமிஷன் ஏதும் சொல்லவில்லையே... எனவே, இந்த இரு விஷயங்களிலும் எடப்பாடிக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால், சசிகலாவுக்குச் சங்கடத்தைக் கொடுக்கும் விஷயம் எப்போது தெரியுமென்றால் லீகல் ஒப்பீனியன் கொடுத்தால் , திமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கிறதா, இல்லையா என்பதைப் பொறுத்து இருக்கிறது. அடுத்து 2024 தேர்தலின்போது அதிமுக-வில் பிரிந்தவர்கள் இணைந்தார்கள் என்றால், அந்த நேரத்தில் இந்த இரு ஆணையங்களின் அறிக்கைகளை திமுக எவ்வாறு பயன்படுத்தப்போகிறது என்பத்கைப் பொறுத்துத்தான் இது அரசியலா என்று பார்க்க முடியும்.

இந்த இரு அறிக்கைகளையும் சட்டமன்றத்தில் வைக்கவிருக்கிறோம் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அவ்வாறு வைத்தபிறகுல் தொடர் நடவடிக்கை இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில், ஏற்கெனவே ஊழல் அமைச்சர்கள்மீது ரெய்டு மட்டும் நடத்தி இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. அதேபோல் கொடநாடு விவகாரமும் அப்படியே இருக்கிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்த இரு அறிக்கைகளின் மீதான நடவடிக்கை எப்படி இருக்கும், அது அரசியலாகப் பயன்படுத்தப்படுமா, ஆணையம் அமைத்ததற்கு நோக்கம் நிறைவேறுமா... என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார்.

ஆறுமுகசாமி ஆணையம்

தமிழ்நாட்டின் முதல்வராக 2016-ம் ஆண்டு பதவியேற்ற ஜெயலலிதா, முழுமையாக ஆறுமாதங்கள்கூட அந்தப் பதவியில் இல்லை. 2016, செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா, அங்கேயே உடல்நலன் குன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஏராளமான சர்ச்சைகள் அப்போது எழுந்தன. மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க ஆளுநர் பொறுப்பில் இருந்த வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட வி.ஐ.பி-க்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதோடு, மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரின் எந்தவொரு புகைப்படமும் வெளியிடப்படவில்லை. அ.தி.மு.க அமைச்சர்களும் முன்னுக்குப் பின் முரணான பல தகவல்களைத் தெரிவித்துவந்ததால், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க தொண்டர்களிடையே குமுறல் எழுந்தது.

ஆறுமுகசாமி ஆணையம்
ஆறுமுகசாமி ஆணையம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அப்போது சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்றார். அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் ஒன்று சேர அதையே நிபந்தனையாகவும் வைத்தார். அதன் விளைவே, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம். ‘அப்போலோ மருத்துவமனையில் 75 நாள்கள் ஜெயலலிதா அட்மிட் ஆகியிருந்த காலகட்டத்தில் என்ன நடந்தது?’ என்பதை அறிவதுதான் இந்த ஆணையம் அமைக்கப்பட்டதற்கான அடிப்படை. ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், உறவினர்கள், சசிகலா, அவரின் உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்றது. 608 பக்கங்கள்கொண்ட இந்த அறிக்கை, கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஆணையம்

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த மாவட்ட மக்கள் தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தினர். கடந்த 2018-ம் ஆண்டு, மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பூதாகரமானது. இதன் காரணமாக, துப்பாக்கிச்சூடு தொடர்பாக அப்போதைய அ.தி.மு.க அரசு விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது.

முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்த அருணா ஜெகதீசன்
முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்த அருணா ஜெகதீசன்

அதன்படி, 2018-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி விசாரணை ஆணையம் தனது விசாரணையைத் தொடங்கியது. அதற்காக, தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், அரசு மருத்துவமனை, அண்ணாநகர், திரேஸ்புரம், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு உள்ளிட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற இடங்களில் கள ஆய்வு நடந்தது. அதேபோல, சம்பவத்தை நேரடியாகப் பார்த்த சாட்சியங்களை முகாம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. சம்பவத்தில் தொடர்புடைய 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவர்களில் 1,048 பேர் நேரிலும், மீதமுள்ளவர்கள் ஆவணங்கள் சமர்ப்பித்தும் விளக்கமளித்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், அப்போதைய தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், காவல்துறை இயக்குநர் உள்ளிட்டோரிடம் நேரில் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் 36 கட்ட விசாரணை செய்யப்பட்டு சுமார் 3,000 பக்கங்களைக்கொண்ட விசாரணை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த மே 18-ம் தேதி தாக்கல் செய்தார்.