ஜெயலலிதா மரணம்... ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை அறிக்கை தாக்கல் - அடுத்து என்ன?

`` `ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் வெளியிடப்படும்’ என்று திமுக, தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. எனவே, ஆணையத்தின் அறிக்கையை எப்படியிருந்தாலும், அரசு வெளியிட்டே ஆக வேண்டும்.”

Published:Updated:
ஜெயலலிதா | அதிமுக
ஜெயலலிதா | அதிமுக
0Comments
Share

2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரின் மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியதோடு, கட்சிக்குள் பிளவுக்கும் வழிவகுத்தது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஓ.பி.எஸ் போர்க்கொடி தூக்கியிருந்தார்.

ஆறுமுகசாமி
ஆறுமுகசாமி

இதன் காரணமாக, அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, 'ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனி ஆணையம்' ஒன்றை 2017-ம் ஆண்டு, செப்டம்பர் 25-ம் தேதி அமைத்தார். ஆறுமுகசாமி ஆணையம் ஆமை வேகத்தில் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், "தி.மு.க ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணத்திலுள்ள சதியை விசாரித்து, மர்மக் குற்றவாளிகளின் முகத்திரையை விலக்கி, அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று உறுதி கூறுகிறேன்" என்று தேர்தல் வாக்குறுதியைக் கொடுக்கும் அளவுக்கு விசாரணை ஆணையத்தின் செயல்பாடு இருந்தது.

ஜெயலலிதா மரணத்தின்போது, மருத்துவமனையிலேயே இருந்த சசிகலா, பன்னீர்செல்வம், மருத்துவத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மருத்துவமனை உள்ளிட்ட யாருமே விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று ஆணையம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இதை முற்றிலும் அப்போலோ மருத்துவமனை மறுத்திருந்தது. ‘மருத்துவர்களை விசாரிக்கும்போது மருத்துவ வல்லுநர்கள்குழு உடனிருக்க வேண்டும்’ என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அப்போலோ மருத்துவமனை
அப்போலோ மருத்துவமனை

இதனால், இரண்டு ஆண்டுகளாக விசாரணை தடைப்பட்டிருந்தது. மேலும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், ஆறு பேர்கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல ஜெயலலிதா விசாரணை ஆணையத்தை வேகப்படுத்தினார். எட்டு முறை ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியும், ஓ.பி.எஸ் ஆஜராகாமல் இருந்த நிலையில், மார்ச் 21-ம் தேதிதான் முதன்முறையாக ஆஜரானார்.

அவரிடம் கேட்கப்பட்ட 78 கேள்விகளுக்கு பெரும்பாலும் 'எனக்கு தெரியாது' என்றே பதிலளித்ததாகத் தகவல் வெளியானது. அதேபோல, சசிகலாவின் உறவினர் இளவரசி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஆணையம் விசாரணை நடத்தி, அறிக்கையை இறுதி செய்துகொண்டிருக்கும்போதே, எய்ம்ஸ் மருத்துவக்குழு தனது அறிக்கையை ஆணையத்திடம் ஆகஸ்ட் 3-ம் தேதி சமர்ப்பித்தது.

5 ஆண்டுகளில் 14 முறை ஆறுமுகசாமி ஆணையத்துக்குக் கால நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், 500 பக்கங்கள் ஆங்கிலத்திலும், 608 பக்கங்கள் தமிழிலும்கொண்ட அறிக்கை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் ஆகஸ்ட் 27-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக தலைமைச் செயலக அதிகாரிகளிடம் விசாரித்தோம். ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் குறிப்புகள் மிக முக்கியமானனவை. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அப்போலோ மருத்துவமனை எவ்விதக் குறையும் வைக்கவில்லை. அங்கு அளிக்கப்பட்ட அனைத்துச் சிகிச்சைகளுமே முறையான மருத்துவ நடைமுறைகளுக்கு உட்பட்டே இருந்துள்ளன என்று மருத்துவக்குழு குறிப்பிட்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின், நீதிபதி ஆறுமுகசாமி
முதல்வர் ஸ்டாலின், நீதிபதி ஆறுமுகசாமி

இந்த குறிப்புகளை ஆணையம் ஏற்றுக்கொள்கிறதா அல்லது மறுத்திருக்கிறதா என்பதில்தான் விசாரணை ஆணைய அறிக்கையின் சாராம்சம் அடங்கியிருக்கிறது. ஒருவேளை மருத்துவக்குழுவின் குறிப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் எதுவுமில்லை என்று அர்த்தமாகும்.

அதேநேரத்தில், மருத்துவக்குழுவின் அறிக்கை போதுமானதாக இல்லை என்று ஆணையம் கருதியிருந்தால், மருத்துவமனை மற்றும் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்த நபர்கள்மீது ஆணையம் பல கேள்விகளை முன்வைத்திருக்கும். அதன் மூலம், மர்ம முடிச்சுகள் அவிழ வாய்ப்பிருக்கிறது. மேலும், யார்மீது தவறு என்பதும் மக்கள் மத்தியில் நிரூபிக்கப்படும். இதற்கெல்லாம் பதில் ஆணையத்தின் அறிக்கையை அரசு சட்டமன்றத்தில் வெளியிடும்போதுதான் தெரியவரும்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

`ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மம் வெளியிடப்படும்’ என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறது. எனவே, ஆணையத்தின் அறிக்கை எப்படி இருந்தாலும், அரசு வெளியிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. அதன்படி, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு இருக்கிறது" என்றனர் விரிவாக.