இரு முறை முதல்வர் பதவியிலிருந்து விலக நினைத்த உத்தவ் தாக்கரே - தடுத்து நிறுத்திய சரத் பவார்!

மகாராஷ்டிராவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியால் இரண்டு முறை தனது முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ய முயன்றார். ஆனால் அதை சரத் பவார் தடுத்து நிறுத்திவிட்டார்.

Published:Updated:
உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே
0Comments
Share

மகாராஷ்டிராவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியால் சிவசேனாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. முக்கிய மூத்த சிவசேனா தலைவர்கள் அதிருப்தி கோஷ்டிக்குச் சென்றுவிட்டதால் சிவசேனாவுக்கு மீண்டும் எப்படி புத்துயிர் கொடுப்பது என்று தெரியாமல் உத்தவ் தாக்கரே திணறிவருகிறார். சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி கோஷ்டியில் சேர்ந்த பிறகு உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் உத்தவ் தாக்கரேயிடம் சரத் பவார் பேசி, ராஜினாமா செய்வதிலிருந்து தடுத்து நிறுத்திவருகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

மகாராஷ்டிரா விகாஷ் அகாடி கூட்டணி உருவாக சரத் பவார்தான் முக்கியக் காரணமாக இருந்தார். எனவே, அந்தக் கூட்டணி கவிழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக உத்தவ் தாக்கரேவைப் பல முறை சந்தித்துப் பேசினார். அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் இந்த மாதம் 20-ம் தேதி நள்ளிரவு குஜராத் சென்றவுடன் 21-ம் தேதியே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உத்தவ் தாக்கரே விரும்பினார். அன்று மாலை ஃபேஸ்புக் லைவ் உரையில் தனது ராஜினாமா முடிவை அறிவிக்கத் திட்டமிட்டிருந்தார்.

சரத் பவார்
சரத் பவார்

நிச்சயம் மேலும் பல எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி கோஷ்டியில் சேருவார்கள் என்று நினைத்து உத்தவ் தாக்கரே இம்முடிவை எடுத்தார். ஆனால் சரத் பவார் தலையிட்டு `பொறுங்கள்... பார்க்கலாம்’ என்று கூறி அவரை ராஜினாமா செய்யவிடாமல் தடுத்துவிட்டார். அடுத்த நாள் எப்படியும் தனது ராஜினாமாவை அறிவித்துவிட வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருந்தாராம். இதற்காக அதிகாரிகளை அழைத்து, தனது பிரிவு உபசார நிகழ்ச்சிக்குக்கூட ஏற்பாடு செய்துவிட்டார். மாலை 4 மணிக்கு ஃபேஸ்புக் நேரடி உரையில் தனது ராஜினாமா முடிவை தெரிவிக்கத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் மீண்டும் சரத் பவார் இது குறித்துத் தெரிந்துகொண்டு ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். உத்தவ் தாக்கரே தனது முடிவில் உறுதியாக இருந்தார். அதனால் ஃபேஸ்புக் நேரடி உரையை அரை மணி நேரம் தள்ளிவைத்தார். சரத் பவார் உத்தவ் தாக்கரேவிடம் மிகவும் போராடி ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். `பிரச்னையை எதிர்த்து அமைதியாகப் போராடுவோம். அவசரப்பட்டு போராட்டத்திலிருந்து விலகிவிடக் கூடாது’ என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகுதான் உத்தவ் தாக்கரே தனது நேரடி உரையில் தான் ராஜினாமா செய்யக் கடிதத்துடன் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

ஒரு எம்.எல்.ஏ விரும்பினாலும் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார். அதோடு அன்று இரவே முதல்வர் இல்லமான வர்ஷாவிலிருந்து தனது குடும்பத்தை அழைத்துக்கொண்டு தனது குடும்ப இல்லமான மாதோஸ்ரீக்கு வந்துவிட்டார். உத்தவ் தாக்கரே அதிருப்தி கோஷ்டித் தலைவர் ஏக்நாத் ஷிண்டேயிடம் போன் மூலம் பேசி சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவரையோ அல்லது அதிருப்தி எம்.எல்.ஏ-க்களையோ சமாதானப்படுத்த முடியவில்லை. இதனால்தான் பதவியை ராஜினாமா செய்துவிட உத்தவ் தாக்கரே முயன்றார். ஆனால் சரத் பவார் அதைத் தடுத்து நிறுத்திவிட்டார்.

ஏக்நாத் ஷிண்டே-உத்தவ்
ஏக்நாத் ஷிண்டே-உத்தவ்

தற்போது சிவசேனா அதிருப்தி கோஷ்டியில் 50-க்கும் அதிகமான எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். சிவசேனா தற்போது தனது செல்வாக்கை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதனால் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளில் சிவசேனா தலைவர்கள் பொதுக்கூட்டங்கள் போட்டு தங்களது செல்வாக்கைக் காட்டிவருகின்றனர். நேற்று மூன்று தொகுதியில் பொதுக்கூட்டங்களை நடத்தினர். வரும் நாள்களில் தொடர்ச்சியாக இது போன்ற பொதுக்கூட்டங்களை நடத்தவும் திட்டமிட்டிருக்கின்றனர். உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேயும் கட்சித் தலைவர்களிடம் நேரில் சென்று கலந்தாலோசித்துவருகிறார். மேலும், கட்சியை விட்டுச் சென்ற அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ-க்களின் பெயரில் புனேயில் சிவசேனா தொண்டர்கள் இறுதி ஊர்வலம் நடத்தி இறுதிச் சடங்குகளையும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.