`எதிர்கால சி.எம்’; செல்ஃபி வித் `அண்ணா’ - கல்வி நிறுவனங்களில் அண்ணாமலையை புரொமோட் செய்கிறதா பாஜக?!

`திருப்பூர் பல்லடம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தை ஒட்டி, மாணவர்கள் மத்தியில் அண்ணாமலையை புரொமோட் செய்யும் வேலையில் பாஜக-வினர் இறங்கியுள்ளனர்.

Published:Updated:
கல்வி நிறுவனங்களில் அண்ணாமலையை புரொமோட் செய்கிறதா பாஜக?!
கல்வி நிறுவனங்களில் அண்ணாமலையை புரொமோட் செய்கிறதா பாஜக?!
0Comments
Share

பாஜக கொங்கு மண்டலத்தைக் குறிவைத்து தீவிரமாக அரசியல் செய்துவருகிறது. எல்.முருகன், வானதி சீனிவாசன், அண்ணாமலை என்று சமீபகாலமாக பாஜக-வில் கோலோச்சுபவர்களில் பலர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

கொங்கு மண்டலம்
கொங்கு மண்டலம்

சட்டசபைத் தேர்தலிலும் பாஜக-வுக்கு கிடைத்த நான்கு எம்.எல்.ஏ-க்களில் இருவர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்துக்கு தனி கவனம் கொடுத்துப் பணியாற்றிவருகின்றனர்.

மத்திய பாஜக அரசின் எட்டு ஆண்டு சாதனைகளை விளக்கும்விதமாக, தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. கடந்த மாதம் பொள்ளாச்சியில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட பாஜகப்வின் பொதுக்கூட்டம் மிகப்பெரிய பேசுபொருளானது. சட்டசபை வடிவில் மேடை அமைத்து, பல ஆயிரக்கணக்கான மக்களைக் கூட்டியிருந்தனர்.

பாஜக பொள்ளாச்சி பொதுக்கூட்டம்
பாஜக பொள்ளாச்சி பொதுக்கூட்டம்

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நாளை மறுநாள் பாஜக பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. பொள்ளாச்சியைப்போலவே பெரிய அளவில் கூட்டம் சேர்க்க, கட்சி சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் மத்தியில் அண்ணாமலையை புரொமோட் செய்யும் வேலையில் பாஜக-வினர் இறங்கியுள்ளனர். பள்ளி மாணவர்கள் அண்ணாமலையுடன் கலந்துரையாடும் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். குறிப்பிட்ட சில பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களைக் குலுக்கல் முறையில் தேர்வு செய்துவருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அட்டை
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அட்டை

இதற்கு திருப்பூர் மாவட்ட பாஜக சார்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அட்டையில், ‘வருங்கால முதல்வரைச் சந்தியுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மறுபக்கம், கல்லூரி மாணவர்களுடன், ‘செல்ஃபி வித் அண்ணா.’ என்ற பெயரில் அண்ணாமலையுடன் செல்ஃபி எடுக்கும் ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துவருகின்றனர். இதற்காக சிக்கண்ணா அரசுக் கல்லூரி, எல்.ஆர்.ஜி பெண்கள் கல்லூரியில் இன்று நிகழ்ச்சி நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கல்லூரி மாணவர்களுடன் செல்ஃபி நிகழ்ச்சி
கல்லூரி மாணவர்களுடன் செல்ஃபி நிகழ்ச்சி

இதற்காக திருப்பூர் பாஜக-வினர் ஏற்பாடு செய்திருந்த நோட்டீஸில், `பாஜக-வில் இணைந்து தேசத்தின் கரங்களை வலுப்படுத்துவோம். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் ’என்றும் கூறப்பட்டிருந்தது.

``கல்வி நிறுவனங்களில் அரசியல் கட்சி நிகழ்ச்சி நடத்துவதா... கல்வி நிறுவனங்களில் அரசியல் பிரசாரம் செய்வதற்கு எந்த அடிப்படையில் அரசாங்கம் அனுமதி வழங்கியது?” என்று அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிவந்தனர். இந்நிலையில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில்,

கல்லூரி முதல்வர் அறிக்கை
கல்லூரி முதல்வர் அறிக்கை

“சமூக ஊடகங்கள் வாயிலாக சிக்கண்ணா அரசுக் கல்லூரி பெயரை, கல்லூரி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் தவறாகப் பயன்படுத்திவருவதாக அறிகிறோம். அந்த நிகழ்வுக்கும், கல்லூரிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதற்குக் கல்லூரி வளாகத்தில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை” என்று கூறியிருக்கிறார்

இதையடுத்து, “பாஜக கல்வி நிறுவனங்களில் விஷம பிரசாரத்தில் ஈடுபடுகிறது. மக்கள் பிரச்னைகள் குறித்துப் பேசாமல் அண்ணாமலையை பிரபலப்படுத்துவதில் கவனம் செலுத்திவருகிறது” என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துவருகின்றன. இது குறித்து பாஜக திருப்பூர் மாவட்டத் தலைவர் செந்தில்வேல் கூறுகையில்,

பாஜக
பாஜக

“நாங்கள் கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதியே கேட்கவில்லை. வெளியில் வரும் மாணவர்களைத்தான் தொடர்புகொள்ளவிருக்கிறோம். நாங்கள் உள்ளே சென்றால், நாளை எல்லாக் கட்சியினரும் செல்வார்கள். அது சரி வராது.

கல்லூரியைவிட்டு வெளியில் வந்தால் அவர்கள் பொதுமக்கள். ‘நிறைய மாணவர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள், கல்லூரிக்கு வாருங்கள்’ என்று எங்களிடம் சில மாணவர்கள் சொன்னார்கள். அதன் காரணமாகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். எதிர்க்கட்சிகள் எல்லாவற்றிலும் குறை சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

எஸ்.எஃப்.ஐ போன்ற சங்கங்களெல்லாம் கல்வி நிறுவனங்களை மையப்படுத்தித்தானே இருக்கின்றன. அப்படிப் பார்த்தால் அவர்களுக்கும் தடைவிதிக்க வேண்டும்தானே... நாங்கள் வெளியில் வரும் மாணவர்களைத்தான் சந்திக்கவிருக்கிறோம்” என்றார்.