உதய்பூர் படுகொலை: கைதானவர்களில் ஒருவருக்கு பாஜக-வுடன் பந்தமா?! - பின்னணி என்ன?

பாஜக-வுக்கும், உதய்பூர் படுகொலையில் ஈடுபட்ட ரியாஸ் அட்டாரிக்கும் என்ன தொடர்பு?!

Published:Updated:
உதய்பூர் படுகொலை
உதய்பூர் படுகொலை
0Comments
Share

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் தையல் கடை நடத்திவந்த கன்ஹையா லாலின் படுகொலை இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தக் கொலை தொடர்பாக வெளியான வீடியோக்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. கொலை நடந்த ஜூன் 28-ம் தேதி அன்றே, குற்றவாளிகளான முகமது கெளஸ், ரியாஸ் அட்டாரி (Riyaz Attari) ஆகிய இருவரையும் கைதுசெய்தது ராஜஸ்தான் காவல்துறை. பின்னர், இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றியது மத்திய உள்துறை அமைச்சகம். முதற்கட்ட விசாரணைகளில், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, தாவத்-இ-இஸ்லாமி (Dawat-e-Islami) என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. தொடர்ந்து, இந்த வழக்கில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான ரியாஸ் அட்டாரிக்கு, ராஜஸ்தான் மாநில பா.ஜ.க-வோடு தொடர்பிருப்பதாக `இந்தியா டுடே' நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தி மேலும் பரபரப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக `இந்தியா டுடே' புலனாய்வு செய்தபோது கிடைத்த தகவல்களும், புகைப்படங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. ரியாஸ் அட்டாரி, குறைந்தது மூன்று வருடங்களாவது ராஜஸ்தான் மாநில பா.ஜ.க-வோடு தொடர்பிலிருந்ததாக `இந்தியா டுடே' செய்தியில் சொல்லப்பட்டிருக்கிறது.

பாஜக நிர்வாகி இர்ஷத்துடன் ரியாஸ் அட்டாரி
பாஜக நிர்வாகி இர்ஷத்துடன் ரியாஸ் அட்டாரி

மேலும் அந்தச் செய்தியில், ``ராஜஸ்தான் மாநில பா.ஜ.க-வின் சிறுபான்மையினர் அணியின் நிர்வாகி இர்ஷத்துடன், ரியாஸ் அட்டாரி இருக்கும் புகைப்படங்கள் இந்தியா டுடேவின் புலனாய்வு நிருபர்களுக்குக் கிடைத்தன. இது தொடர்பாக இர்ஷத்தை அணுகியபோது, `ஆம், என்னுடன் இந்தப் புகைப்படத்தில் இருப்பது ரியாஸ்தான். 2019-ல் ரியாஸ் மெக்கா சென்று திரும்பியதும், அவரை நான் வரவேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது. உதய்பூரில் நடக்கும் பா.ஜ.க நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்வார். குலாப் சந்த் கட்டாரியாவின் (தற்போதைய ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் தலைவர்) பல நிகழ்ச்சிகளில், ரியாஸ் கலந்துகொண்டிருக்கிறார். எவ்வித அழைப்பும் இல்லாமல் அவராகவே வந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார். கட்சிக்காக வேலை பார்க்க வேண்டும் என்று எங்களிடம் சொல்வார். ஆனால், அவர் தனது நண்பர்களுடன் தனியாகப் பேசும்போது, பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்துப் பேசுவார்' என்று கூறினார்'' என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும், பா.ஜ.க நிர்வாகி முகமது தாஹிர் மூலமாகத்தான் ரியாஸ், பா.ஜ.க நிகழ்ச்சிகளில் வந்து கலந்துகொண்டார் என்றும் இர்ஷத் தெரிவித்திருக்கிறார். ``எங்களுடைய நிருபர்கள் முகமது தாஹிரை அணுக முயன்றும் முடியவில்லை. அவரது மொபைல் போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது'' என்று இந்தியா டுடே தெரிவித்திருக்கிறது.

உதய்பூர் தையல்காரர் கொலை
உதய்பூர் தையல்காரர் கொலை
ட்விட்டர்

இந்தச் செய்தி வெளியானதும் பா.ஜ.க-வுக்கும், கொலைக் குற்றவாளிக்கும் தொடர்பிருக்கிறது என்பது போன்ற செய்திகள் வேகமாகப் பரவ ஆரம்பித்தன. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள், ``ஒரு புகைப்படத்தை வைத்து, அவருக்கும் பா.ஜ.க-வுக்கும் தொடர்பிருக்கிறது என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்... அவர் கட்சியின் நிர்வாகி கிடையாது. நண்பர்களுடன் பேசும்போது கட்சியை வெகுவாக விமர்சிப்பவராக ரியாஸ் இருந்திருக்கிறார். அவர் தொடர்ச்சியாகக் கட்சி நிகழ்வுகளில் கலந்துகொண்டு, கட்சியில் சேர முயன்றிருக்கிறார். கட்சிக்குள் ஊடுருவி, பா.ஜ.க-வின் பெயரைக் கெடுக்கும் நோக்கில்தான் இதையெல்லாம் அவர் செய்திருக்கிறார். எனவே, அவருக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பது உறுதியாகிறது. தீவிரமாக நடைபெற்றுவரும் விசாரணைகள் முடிந்தவுடன், அனைத்து உண்மைகளும் வெளிவரும்'' என்கிறார்கள்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை தற்போது கையில் எடுத்திருக்கிறது. இது தொடர்பாக அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கேரா, ``பாஜக-வுக்கும் உதய்பூர் படுகொலையின் முக்கியக் குற்றவாளிக்குமான தொடர்பு தற்போது வெளிவந்திருக்கி்றது. இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்கும் என மத்திய அரசு விரைவாகத் தெரிவித்ததற்கு இதுதான் காரணமாக இருக்குமோ?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

எனினும், இந்தக் குற்றசாட்டுகளை பா.ஜ.க-வின் சமூக வலைதளப் பிரிவின் தலைவர் அமித் மால்வியா மறுத்திருக்கிறார். ``அது போலியான செய்தி” எனச் சொல்லும் மால்வியா, ``பயங்கரவாதம் மற்றும் தேசப் பாதுகாப்பு விவகாரங்களில் ஏமாற்றுவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.