டெண்டர் முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவு... எடப்பாடிக்குச் சாதகமா, பாதகமா?!

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டு, முழுமையாக இன்னும் ஒரு மாதம்கூட ஆகாதநிலையில், சட்டரீதியான பல நெருக்கடிகளை அவர் சந்தித்துவருகிறார்.

Published:Updated:
எடப்பாடி கே.பழனிசாமி
எடப்பாடி கே.பழனிசாமி
0Comments
Share

தமிழ்நாடு முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்த காலத்தில் நெடுஞ்சாலைத்துறையையும் அவரே கவனித்துவந்தார். அப்போது, அந்தத் துறையில் 4,800 கோடி ரூபாய் டெண்டரை, தன்னுடைய உறவினர்கள், நண்பர்களுக்கு முறைகேடாக வழங்கினார் என்று அப்போது டி.டி.வி.தினகரன் அணியிலிருந்த தங்க தமிழ்ச்செல்வன், மறைந்த வெற்றிவேல் ஆகியோர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதன் மூலம், அரசுக்கு 1,500 கோடி ரூபாய் நஷ்டம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, தி.மு.க தரப்பில் லஞ்சம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாரளிக்கப்பட்டது.

நெடுஞ்சாலை
நெடுஞ்சாலை

பின்னர், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு புகார் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இது குறித்து சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த எடப்பாடி, சி.பி.ஐ விசாரிக்கும் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து, சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்து விசாரணையை ஒத்திவைத்தது. இதனால், இந்த மனு மீதான விசாரணை நீண்டகாலமாகக் கிடப்பிலிருந்தது.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க பொறுப்பேற்றதும், மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் அரசு சார்பாக முறையிடப்பட்டது. அதன்படி, இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இதில் வாதாடுவதற்கு அவகாசம் வேண்டும் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.

ஸ்டாலின் ஆர்.எஸ். பாரதி
ஸ்டாலின் ஆர்.எஸ். பாரதி

இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி ஆகஸ்ட் 3-ம் தேதி தாக்கல் செய்த கூடுதல் மனுவில், "ஒப்பந்தப் பணிகளுக்குத் தேவைப்படுவதைவிட அதிக விலை வழங்கியிருப்பதால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற பழனிசாமியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், "பழனிசாமி மீதான வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துசெய்தது.

மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்த வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டியதில்லை. எனவே, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்" என உத்தரவிட்டது. ஆனால், சி.பி.ஐ-யிடமிருந்து தப்பித்த நிம்மதியை எடப்பாடியால் அனுபவிக்க முடிவில்லை. அதேபோல, வழக்கு மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்திருப்பது ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓரங்கட்டப்பட்ட ஓ.பி.எஸ் தரப்பைக் குதூகலமடையச் செய்திருக்கிறது.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

இது தொடர்பாக ஓ.பி.எஸ் ஆதரவு வக்கீல்கள் சிலரிடம் பேசினோம்.

"நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கு சி.பி.ஐ கைக்குப் போனதும் வேகமிழந்தது. குறிப்பாக, சி.பி.ஐ விசாரணைக்கு இடைக்கால தடை கேட்டு எடப்பாடி உச்ச நீதிமன்றம் சென்ற மனு மீதான விசாரணையில், சி.பி.ஐ தரப்பு ஆணித்தரமான எதிர்ப்பைப் பதிவு செய்யவே இல்லை. இதன் பின்னணியில் மத்திய அரசு இருந்திருக்கலாம். குறிப்பாக, சி.பி.ஐ விசாரிக்கும் வழக்குகளில் 15 சதவிகிதம் மட்டுமே முழுமையடைந்துள்ளன. எனவே, சி.பி.ஐ-யை நம்ப முடியாது.

இந்நிலையில், வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு வரும் என்று எடப்பாடி தரப்பு நினைக்கவில்லை. அதேபோல, லஞ்ச ஒழிப்புத்துறை கையில் விசாரணை வரும்போது, அரசின் உதவியோடு எடப்பாடிக்கு எதிரான ஆதாரங்களை வலுவாகச் சேகரிக்கும். குறிப்பாக, அம்மா, சின்னம்மா ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்குகளில் சிறைக்குச் செல்வதற்கு முழுமுதற் காரணம் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைதான்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

வழக்கு தொடர்பாக எடப்பாடியை எப்போது வேண்டுமென்றாலும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும். அவர் சார்ந்த இடங்களில் ரெய்டு செய்யும். அவரின் மகன் மிதுன் மீதும் வழக்கு பதிவுசெய்யப்படலாம். எனவே, நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு எடப்பாடிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்" என்றனர் திடமாக.

இது குறித்து எடப்பாடி தரப்பு வக்கீல்கள் சிலரிடம் பேச முயன்றபோது, "இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இது குறித்துப் பேச முடியாது" என்று மறுத்துவிட்டனர்.

மொத்தத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்தடுத்த நகர்வுகள் எடப்பாடிக்குச் சிக்கலை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!