மக்கள்தொகை கட்டுப்பாடு முதல் மதமாற்றத் தடை வரை... மோடி அரசுக்கு அழுத்தம் தருகிறதா ஆர்.எஸ்.எஸ்?

இந்தியாவில் மக்கள்தொகைக் கட்டுப்பாடுச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

Published:Updated:
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
0Comments
Share

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும், அதற்கான சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். தற்போது, தசரா விழாவையொட்டி நாக்பூரில் அமைந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் அக்டோபர் 5-ம் தேதி பேசியபோதும், இதே கருத்தை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மோடி
மோடி

“மக்கள்தொகை கட்டுப்பாட்டுச் சட்டமும், மதம் சார்ந்த சமமற்ற நிலையைத் தடுத்து கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதும் இந்தியாவின் இன்றைய தேவை. இவை இரண்டிலும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். மதம் சார்ந்து மக்கள்தொகையில் சமமற்ற நிலை ஏற்பட்டால் தெற்கு சூடான், கொசோவோ நாடுகளில் ஏற்பட்ட நிலை இங்கும் உருவாகும்” என்று பேசியிருக்கிறார் மோகன் பகவத்.

மேலும் அவர், “மக்கள்தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப வளங்களும் தேவை. வளங்களைப் பெருக்கும் நடவடிக்கையை எடுக்காமல், மக்கள்தொகை அதிகரிப்பை அனுமதித்தால், அது சுமையாக உருவாகும். மக்கள்தொகைக் கொள்கையை வகுத்தால்தான் பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால், அது பூகோளரீதியில் எல்லைப் பிரச்னைகளையும் ஏற்படுத்தும். இவை தவிர, கட்டாய மதமாற்றமும் ஊடுருவலும் பெரும் பிரச்னையாக இருக்கின்றன” என்று மோகன் பகவத் பேசியிருக்கிறார்.

மோகன் பகவத்
மோகன் பகவத்

கடந்த ஜனவரி மாதம், உத்தரப்பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ்., அதன் துணை அமைப்புகளின் தொண்டர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மோகன் பகவத், “இந்தியாவில் மக்கள்தொகை வேகமாக அதிகரித்துவருகிறது. இந்தப் பிரச்னையை ஆர்.எஸ்.எஸ் தனது செயல்திட்டத்தில் சேர்த்திருக்கிறது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டம் அவசியம். இரண்டு குழந்தைகள் திட்டத்தையே நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனாலும், இது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

மக்கள்தொகைக் கட்டுப்பாடு அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது என்றும் சொல்லும் ஆர்.எஸ்.எஸ்., ‘இந்தியாவில் வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டுமென்றால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்’ என வலியுறுத்துகிறது. அதேநேரத்தில், ‘மக்கள்தொகையில் சமநிலையின்மை இருக்கிறது’ என்ற ஒரு பிரச்னையையும் முன்வைக்கிறது. ‘இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது’ என்கிற கோணத்திலான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இந்தப் பார்வை, பரவலாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

 நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

‘‘இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்பு, அரசியல்வாதிகள் தங்கள் குழந்தைகள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மாநில அமைச்சர்களுக்குச் சட்டபூர்வக் குழந்தைகள் எத்தனை, சட்டத்துக்குப் புறம்பான குழந்தைகள் எத்தனை என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்’’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் நக்கலாகக் கூறியிருக்கிறார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ‘‘சட்டம் போட்டெல்லாம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த முடியாது. சீனாவில் இல்லாத கடுமையான சட்டமா... கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்தால், குழந்தைப்பேறு விகிதம் குறையும்’’ என்கிறார்.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகிய பா.ஜ.க முதல்வர்கள் தங்கள் மாநிலங்களில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தைக் கொண்டுவருவது குறித்துத் தொடர்ந்து பேசிவருகிறார்கள். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டம் மத்திய அரசால் விரைவில் கொண்டுவரப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் சில மாதங்களுக்கு முன்பு பேசியிருக்கிறார்.

மக்கள்தொகைக் கட்டுப்பாடு, மதமாற்றத் தடை ஆகிய விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் நிலைப்பாடுதான், மத்திய பா.ஜ.க அரசின் நிலைப்பாடும் என்பது மறுக்க முடியாதது. ஆனாலும், உரிய காலம் கனியும்வரை ஆட்சியில் இருப்பவர்கள் காத்திருக்கவேண்டியிருக்கும். இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுபோல இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

மோகன் பகவத்தின் கருத்தை ஹைதாராபாத் எம்.பி-யும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவருமான ஒவைசி விமர்சித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், “அரசின் கையிலும் வலதுசாரி அரசியல்வாதிகளின் கையிலும் பசுவதைத் தடைச்சட்டம் எப்படி ஓர் ஆயுதமாக இருக்கிறதோ, அதுபோல மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்படும் சட்டமும் சிறுபான்மைப் பிரிவு மக்களுக்கு எதிரான ஆயுதமாக மாறும் ஆபத்து இருக்கிறது’’ என்று எச்சரிக்கிறார்.