தேவர் குருபூஜைக்கு வருகிறாரா பிரதமர் மோடி? - தமிழக பாஜக சொல்வதென்ன?!

“தமிழகத்தில் பல்வேறு நிறங்களைக்கொண்டிருக்கும் சாதி அமைப்புகள்தான் பா.ஜ.க-வின் வெற்றி. அவர்கள் தங்களுக்கு தென் தமிழகத்தில் வாய்ப்பிருப்பதாகப் பார்க்கிறார்கள்.” - ரவீந்திரன் துரைசாமி

Published:Updated:
மோடி
மோடி ( ட்விட்டர் )
0Comments
Share

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்டோபர் 30-ல் நடைபெறும். இந்த நாளில் அரசு சார்பில் முதல்வர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும், அக்டோபர் 30-ல் நடைபெறும் தேவர் ஜெயந்திக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் தொடங்கியிருக்கிறது. இந்த ஆண்டு தேவர் குருபூஜையில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, தமிழக பாஜக அழைப்பு விடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசும்பொன் குருபூஜை - தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி
பசும்பொன் குருபூஜை - தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி

இதன் அடிப்படையில், ``சாதிரீதியில் மக்களைப் பிளவுபடுத்தி, அரசியல் லாபம் பார்ப்பதற்காகவே பிரதமர் மோடி தேவர் குருபூஜைக்கு வருகிறார்” என விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் குற்றம்சாட்டியிருக்கிறார். விழுப்புரத்தில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி பேரணியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி ரவிக்குமார், “மோடி பிரதமராகி எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போதுதான் தேவர் குருபூஜைக்கு வர வேண்டும் என்று புரிந்ததா?

விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார்
விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார்

தேவேந்திர குல வேளாள மக்களைப் பட்டியலிலிருந்து நீக்கி சட்டம் இயற்றுவதாகக் கூறி, அதை நிறைவேற்றாமல் முக்குலத்தோர் வாக்குகளைக் குறிவைத்து தேவர் குரு பூஜையில் மோடி பங்கேற்கவிருக்கிறார். தென் மாவட்ட மக்கள், பாஜக-வை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்” என்று தன் கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார்.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

``பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு பிரதமர் மோடி வருவது இன்னும் உறுதியாகவில்லை” என்கிறார் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன். ``இது போன்ற விஷயம் முதலில் மாநிலத் தலைமைக்குத்தான் தகவல் வரும். எனவே, உறுதிப்படாத இந்தச் செய்தியை திட்டமிட்டு செய்தியாக்குவது, சொல்வது என யாரோ இதை முன்னெடுத்திருக்கிறார்கள்” என்றார்.

ஒருவேளை பிரதமர் மோடி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்றால், தமிழக பா.ஜ.க-வின் அடுத்தடுத்த திட்டங்கள் என்னவாக இருக்கும் என்கிற கேள்வியை அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் முன்வைத்தோம். “தமிழகத்தில் பல்வேறு நிறங்களைக்கொண்டிருக்கும் சாதி அமைப்புகள்தான் பா.ஜ.க-வின் வெற்றி. இதற்கு தென் தமிழகத்தில் வாய்ப்பிருப்பதாகப் பார்க்கிறார்கள். மேற்கு தமிழகத்தில் கொங்கு வேளாளர், அருந்ததியர் என்று தங்கள் நகர்வை ஆரம்பித்தவர்கள் தென் தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர், முக்குலத்தோர் என ஆரம்பிக்கிறார்கள். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் வருவதுபோல், இன்னும் சில நினைவிடங்களுக்கும் பிரதமர் வருவதற்கான வாய்ப்புகள் வரும்காலத்தில் இருக்கின்றன.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

1969-ல் கலைஞர் கருணாநிதி முத்துராமலிங்க தேவருக்கு பெரிய சிலையை, வி.வி.கிரி வைத்து திறந்துவைத்தார். ஜெயலலிதா தங்கக் கவசம் கொடுத்தார்கள். இது போன்ற முன்னுதாரணங்களை வைத்து தமிழ்நாடு அரசியலை தமிழ்நாடு பாணியில் திட்டமிடுகிறார்கள். இதைத் தொடர்ந்து பெரும்பிடுகு முத்தரையர், வைகுண்டர், இம்மானுவேல் சேகரனார் இவர்களையும் கௌரவப்படுத்த வாய்ப்பிருக்கிறது” என்றார்.