Cricket : ஒருநாள் போட்டிகள் இனி அவ்வளவுதானா? ஒரு விரிவான அலசல்!

ஐ.பி.எல் போன்ற டி20 தொடர்காளால் பாதிக்கப்படுவது டெஸ்ட் கிரிக்கெட் என்று பலரும் பேசிவரும் வேளையில் உண்மையாகவே பாதிக்கப்படுவது என்னவோ ஒருநாள் ஃபார்மர்ட் கிரிக்கெட் தான்

Published:Updated:
Cricket
Cricket
0Comments
Share
டி20 கிரிக்கெட்டால் மற்ற ஃபார்மர்ட்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசுவது கிரிக்கெட் உலகில் பல காலமாகவே நடந்து வரும் ஒன்று. அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக சில நாட்களுக்கு முன்னர் ஓர் முக்கிய சம்பவம் நடந்திருக்கிறது.

2023-ம் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த தென்னாபிரிக்க அணி அங்கு ஒரு நாள் தொடரில் விளையாட இருந்தது. ஆனால் தற்போது இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது தென்னாபிரிக்க அணி. ஐ.பி.எல் போன்ற ஒரு புதிய டி20 தொடர் தென்னாப்பிரிக்கா நாட்டில் தொடங்கவிருப்பதே இதற்கான காரணமாக சொல்லியிருக்கிறது அந்த அணி நிர்வாகம். அதில் பங்குபெறவிருக்கும் ஆறு அணிகளையும் ஐ.பி.எல் அணி உரிமையாளர்களே இந்த தென்னாப்பிரிக்க டி20 போட்டிக்காக அணிகளையும் வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொடரின் அட்டவணையும் ஆஸ்திரேலியா தொடர் அட்டவணையும் ஒரே நேரத்தில் உள்ளதால் தென்னாப்பிரிக்கா அணி இந்த முடிவை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு தொடர்ந்து வேறு போட்டிகள் நடக்க உள்ளதால் வேறு தேதிக்கு அத்தொடரை மாற்றமுடியாது என்று தெரிவித்துள்ளது. இதனால் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கான ஒருநாள் சூப்பர் லீக் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியாவிற்கு 30 புள்ளிகள் தொடர் நடக்காமலே வழங்கப்படவுள்ளது. சூப்பர் லீக் புள்ளிபட்டியலில் தற்போது 11வது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு, அடுத்தாண்டு ஒருநாள் உலககோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு எட்டாக் கனியாக மாறியுள்ளது.

கிரிக்கெட்
கிரிக்கெட்

ஐ.பி.எல் போன்ற டி20 தொடர்காளால் பாதிக்கப்படுவது டெஸ்ட் கிரிக்கெட் என்று பலரும் பேசிவரும் வேளையில் உண்மையாகவே பாதிக்கப்படுவது என்னவோ ஒருநாள் ஃபார்மர்ட் கிரிக்கெட் தான். இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மாபெரும் விளையாட்டாக மாறியது 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு பின்னரே. அன்று தொடங்கி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல மறக்கமுடியாத ஒருநாள் போட்டிகள் நடந்துகொண்டேதான் இருந்தன. கங்குலி ரசிகர்களுக்கு 2002-ல் லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றிக்கு பின் சட்டையை கழட்டிய தருணம், சச்சின் ரசிகர்களுக்கு 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, தோனி ரசிகர்களுக்கு 2011 உலகக்கோப்பை வெற்றி, கோலி மற்றும் ரோஹித் ரசிகர்களுக்கு 2013-ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 300 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்தது என்று ஒருநாள் போட்டிகள் குறித்த நம் நினைவுகளை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த போட்டிகள் நடந்து பல வருடங்கள் ஆகியிருந்தாலும் இன்றும் அந்த போட்டி நடந்த தேதி வரும் போது அதை மறக்காமல் கொண்டாடி வருகிறோம். இந்திய கிரிக்கெட்டில் மட்டுமல்ல கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் ஒருநாள் கிரிக்கெட் அடையாளம் தரும் பல நினைவுகளை கொடுத்துள்ளது என்பதுதான் நிதர்சனம்.

ஆனால் 2015-ம் ஆண்டு உலககோப்பைக்குப் பின் ஒருநாள் கிரிக்கெட் முன்பு போல இல்லாததை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி, இறுதிபோட்டிகள் நடந்த தேதியெல்லாம் சமீபத்தில் வந்தபோது அதை பற்றி மக்கள் ஆவலாகப் பேசினார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதை தவிர்த்து மனதில் நிற்பதுபோல் ஒரு போட்டிகூட பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு இல்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு காபாவில் கிடைத்த வெற்றி, லார்ட்ஸ் வெற்றி என்ற பல போட்டிகள் பல மறக்கமுடியாத போட்டிகள் நடந்துள்ளன. டி20 கிரிக்கெட்டை பற்றி சொல்லவே தேவையில்லை. ஐ.பி.எல் போன்று உலகமெங்கும் நடத்தப்பட்டு வரும் பணம் புழங்கும் டி20 தொடர்கள், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை என தொடர்ந்து வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது இவ்வகை ஃபார்மட்.

Cricket : ஒருநாள் போட்டிகள் இனி அவ்வளவுதானா? ஒரு விரிவான அலசல்!

மக்கள் மனநிலையை எடுத்துக்கொண்டாலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க எப்போதும் ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சி டெஸ்ட் பார்க்கும் மக்களை பாதிப்பது இல்லை. டி20 பார்க்கும் மக்கள் குறுகிய இடைவெளியில் கிரிக்கெட் பார்க்க விரும்பும் மக்கள். இதே ஒருநாள் போட்டிகள் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒன்று. இந்த ஒருநாள் போட்டி பார்க்கும் மக்கள்தான் தற்போது டி20 பார்ப்பவர்களாக மாறி வருகிறார்கள். பொழுதுபோக்கு என்ற ஒரு விஷயம் இதற்கு பெரிய காரணமாக இருந்தாலும் மக்கள் கிரிக்கெட் பார்க்கும் விதத்தை மட்டும் நாம் குறைசொல்லி விட முடியாது.

இது குறித்து அஷ்வினும் தன் கருத்தை சமீபத்தில் தெரிவித்திருந்தார் " ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒரு கட்டத்தில் விறுவிறுப்பு இல்லாமல் போய் விடுகிறது. ஒருநாள் போட்டி செல்லும் போக்கை காண எனக்கே பயமாகத்தான் இருக்கிறது. மேலும் ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிஸிற்கு ஒரே ஒரு பந்துதான் பயன்படுத்தபடும். அது பந்துவீச்சாளர்களுக்கு உதவும் ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் இப்போது மைதானத்தின் இரு எண்டுகளில் இரு புது பந்துகள் பயன்படுத்தப்படுவதால் பந்துவீச்சாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்." என்று பேசியிருந்தார். அஷ்வின் சொல்வதுபோல் பந்து பழசான பின் அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடைசி சில ஓவர்களில் ரிவர்ஸ் ஸ்விங் செய்து விக்கெட் எடுக்கவும் உதவும். ஆனால் அது எல்லாமே இப்போது பெரிதாய் நடப்பதில்லை.

சமீபத்தில் நடந்த பங்களாதேஷ்- வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் கூட அணியின் ஸ்கோர் 200 ரன்களை தாண்டவில்லை. ஏன் இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டியில் டார்கெட் வெறும் 110 ரன்கள் தான். ஒரு பக்கம் இப்படி குறைவான ரன்கள் அடிக்கப்படுகின்றன என்றால் மறுப்பக்கம் நெதர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் 498 ரன்கள் அடித்தது இங்கிலாந்து. பல போட்டிகளில் 300-400 ரன்கள் மிக எளிதாக அடிக்கப்படுகின்றன. எளிதாக சொல்ல வேண்டும் என்றால் புது பந்தை சரியான முறையில் யார் பயன்படுத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு சாதகமாக போட்டி முழுதாய் மாறிவிடுகிறது. இதனால் போட்டி ஒரு விறுவிறுப்பான கட்டத்தை முன்புபோல் எட்டுவதில்லை. சமீபத்தில் நடந்த தொடர்களில் இலங்கை-ஆஸ்திரேலியாவிற்கு இடையில் நடந்த ஒருநாள் தொடர் மட்டுமே விறுவிறுப்பாக இருந்தது.

ஆசிய கோப்பை தொடர் முன்பு ஒருநாள் ஃபார்மட்டில் நடந்து வந்தது. ஆனால் அதுவும் இப்பொது டி20 தொடராக மாற்றப்பட்டு விட்டது. அதேபோல முன்பெல்லாம் முத்தரப்பு தொடர்கள் அடிக்கடி நடைபெறுவதை பார்க்க முடியும். யார் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று கோப்பையை வெல்வார்கள் என்று அத்தொடர் விறுவிறுப்பாக செல்லும். ஆனால் இப்போது அதுபோன்ற தொடர்கள் நடப்பதே இல்லை. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் இதுகுறித்து பேசியபோது, " நாங்கள் வளரும்போது முத்தரப்பு தொடர்கள் பார்த்துதான் வளர்ந்தோம். இப்போது அவை நடத்தப்படுவதில்லை. இதனால் எங்களுக்கு போட்டியின் இடையில் கிடைக்கும் இடைவெளியும் குறைவாக இருக்கிறது. அது வீரர்களை சிறப்பாக விளையாடுவதில் இருந்து தடுக்கிறது. " என்றார்.

Cricket : ஒருநாள் போட்டிகள் இனி அவ்வளவுதானா? ஒரு விரிவான அலசல்!

டி20 போட்டிகள் வித்தியாசமான வடிவங்களில் தொடர்ந்து வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதற்கு காரணம் அதன் மீதான முதலீடு என்பதை யாராலும் மறுக்க முடியாது. “ பணம் புழங்கும் இதுபோன்ற தொடர்களை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம் ” என்று தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சங்கத் தலைவர் இப்படி வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

மற்றொரு புதிய தொடரான டெஸ்ட் சாம்பியன்ஷிப்பால் டெஸ்ட் கிரிக்கெட்டும் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் இரண்டிற்கும் நடுவே ஊசலாடும் இந்த ஒருநாள் ஃபார்மர்ட்டை மீட்க ஐசிசி போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் ஒருநாள் போட்டிகளின் எதிர்காலம் கேள்விக்குறியே!