உடைக்கப்படுகிறதா எடப்பாடி அணி... தாங்கிப் பிடிக்கப்படும் பன்னீர்! - அதிமுக-வில் நடப்பது என்ன?

அ.தி.மு.க-வைக் கைப்பற்றும் முயற்சியில் இருவர் இருந்த இடத்தில் இன்று நால்வர் இருக்கிறார்கள். அதில், ஓ.பி.எஸ் முந்திச்செல்வதாகத் தெரிகிறது.

Published:Updated:
ஓ.பி.எஸ்... இ.பி.எஸ்!
ஓ.பி.எஸ்... இ.பி.எஸ்!
0Comments
Share

``ஜூன் 23-ம் தேதிக்கு முன்பான நிலையே தொடரும்" என்று சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி தரப்பு செய்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில், இரு பக்கத்திலிருந்தும் ஆள்பிடிக்கும் படலம் நடந்துவருகிறது.

சசிகலா, தினகரன்
சசிகலா, தினகரன்

இரண்டில் யார் அணி முந்திச் செல்கிறது என்பது குறித்து அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பேசினோம். ``முன்பு டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க-வைக் கைப்பற்ற முயன்றார். அதற்காகத்தான் அ.ம.மு.க-வைத் தொடங்கியதாகச் சொல்லி அந்தக் கட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததிலிருந்து அ.தி.மு.க-வைக் கைப்பற்ற சசிகலா ஒருபக்கம் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.

எடப்பாடி, பன்னீர் பிளவு
எடப்பாடி, பன்னீர் பிளவு

இந்தச் சூழ்நிலையில், ஒன்றாக இருந்த அ.தி.மு.க-வைத் தேவையின்றி பிளவுபடுத்தி, இரு அணிகளாகப் பிரிந்து, இன்று எடப்பாடியும், பன்னீர்செல்வமும்கூட அ.தி.மு.க-வைக் கைப்பற்றும் ரேஸில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நால்வரில், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் இடையேதான் போட்டி நிலவுகிறது. சசிகலா தரப்பும், தினகரன் தரப்பும் பன்னீர் தரப்புக்கு மறைமுக உதவி புரிந்துவருகின்றன.

ஐயப்பன்
ஐயப்பன்

ஜெ. மறைவுக்குப் பின்னர் பன்னீர் தர்மயுத்தம் நடத்தியபோது, அவரைச் சேர்த்து 11 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு அவருக்கு இருந்தது. தற்போது வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் என அவரைச் சேர்ந்து மூன்று எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்துவந்த நிலையில், ஆகஸ்ட் 27-ம் தேதி உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் ஓ.பி.எஸ்-ஸை நேரில் சந்தித்து ஆதரவு கொடுத்திருக்கிறார். இதன் மூலம், நான்கு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு பன்னீருக்கு கிடைத்திருக்கிறது.

சசிகலா தரப்பிலிருந்து பன்னீர்செல்வத்துக்கு உதவிகள் செய்யப்பட்டுவருகின்ற்ன. அது போதாதென்று, எடப்பாடி தரப்பில் இருக்கும் 60-க்கும் மேற்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ-க்களில், குறைந்தது 35 எம்.எல்.ஏ-க்களிடம் சசி தரப்பு டீலிங் பேசிக்கொண்டிருக்கிறதாம். ஒரு விஷயத்தை முதலில் யார் தொடங்குகிறார் என்பதுதான் இங்கு முக்கியம். அப்படி ஒருவர் தொடங்கிவிட்டால், அதைப் பின்பற்றி பலர் செல்வார்கள். அப்படித்தான் எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் உசிலம்பட்டி ஐயப்பன் ஒரு வழியைக் காண்பித்துக் கொடுத்துவிட்டார். அவரைப் பின்தொடர்ந்து இன்னும் சில எம்.எல்.ஏ-க்கள் செல்லவிருக்கிறாகள்.

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா

இது ஒருபுறம் இருக்க, எடப்பாடி அணிக்குள்ளேயே பிரச்னைகள் வெடித்த வண்ணம் இருக்கின்றன. முன்னாள் அமைச்சர்கள் சிலர் தனியே கூட்டம் போட்டு, எடப்பாடியின் செயல்பாடுகளைக் கண்டித்திருக்கிறார்கள். ஓ.பி.எஸ் ஓப்பனாக அழைப்புவிடுத்தும் காம்ப்ரமைஸுக்கு எடப்பாடி ஒப்புக்கொள்ளாதது முன்னாள் அமைச்சர்கள் சிலரை ஆத்திரப்படுத்தியிருக்கிறது.

இ.பி.எஸ்
இ.பி.எஸ்

ஆரம்பத்திலிருந்து சசிகலாவைக் கட்சிக்குள் கொண்டுவருவதற்கு எடப்பாடி மட்டுமே பகிரங்கமாக, கடும் எதிர்ப்பைக் கூறிவந்தார். மற்ற முன்னாள் அமைச்சர்களைக் கேட்டு முடிவெடுக்காமல், அவர்களைக் கைகாட்டியே சசிகலாவை உதறித்தள்ளிவிட்டார். பன்னீர் பகிரங்கமாக அழைப்புவிடுத்தும்கூட, ஒன்றிணைப்பிலிருந்து எஸ்கேப் ஆகிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி.

பன்னீர் தரப்பில் இருக்கும் ஓரளவு நிர்வாகிகளையும் தங்கள் பக்கம் கொண்டுவர எடப்பாடி தரப்பும் முயன்றுவருகிறது. எனினும், எடப்பாடி அணிக்குள்ளேயே பன்னீர் அணியின் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதால் அவர்களால் முடியவில்லை எனக் கூறப்படுகிறது. எடப்பாடியுடன் இருக்கும் நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும் தாங்கள் கவனிக்கப்பட்டதற்காக விசுவாசத்தைக் காட்டியபடி உடன் செல்கிறார்கள்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

எந்நேரமும் அவர்கள் எடப்பாடியை விடுத்து, பன்னீர் பக்கம் தாவக்கூடும். அதேசமயம், ஓ.பி.எஸ் பக்கம், வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளும், சில தொண்டர்களும் இருந்தபோதும், மறைமுகமாக சசிகலா தரப்பின் உதவியும் கிடைக்கப்பெறுவதால் நிச்சயம் எடப்பாடி - பன்னீருக்கிடையேயான மோதலில் ஆரம்பத்தில் எடப்பாடி ஜெயித்தாலும், இப்போது என்னவோ பன்னீர்செல்வம்தான் முந்திச் சென்றுகொண்டிருக்கிறார்” என்று முடித்தனர்.